கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு சில்லறை வணிகத்தில் ஏராளமான மாற்றங்கள் நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக, 2021ஆம் ஆண்டில் சில்லறை வணிகத் தொழிலில் மறுகட்டமைப்பு அலை வீசியது. சொத்துகளைப் பணமாக்கிக் கொண்டுள்ள பெரும்பாலானசில்லறை வணிக நிறுவனங்கள், 2022ஆம் ஆண்டில் எதிர்கொள்ளக்கூடிய சவால்களை எதிர்கொள்ள நேரடி, மின்வணிகம் உள்ளிட்ட வணிக வாய்ப்புகளில் முதலீடுகளைச் செய்துள்ளன. இதன் மூலம் எதிர்கால வளர்ச்சியை உறுதி செய்வதற்கான முயற்சிகளில் சில்லறை வணிக நிறுவனங்கள் மும்முரம் காட்டி வருகின்றன.
அடுத்த ஓராண்டில் சில்லறை வணிகத்தில் நிகழப்போகும் மறுகட்டமைப்புகள், ஆரவாரம் இல்லாதவையாக இருக்கும். அதற்காக சில்லறை வணிகத்தில் சவால்கள், சிக்கல்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட முடியாது. இந்தப் பின்னணியில், சில்லறை வணிகம் எதிர்கொண்டுள்ள சில சவால்கள், மாற்றங்களைப் புரிந்து கொள்ள முயல்வோம்.
அடிப்படை மாற்றங்கள்:
கரோனா பெருந்தொற்று நுகர்வோரின் நடத்தையில் உருவாக்கியுள்ள மாற்றங்கள், சில்லறை வணிகத்தொழிலில் தொடரவிருக்கின்றன.
சில்லறை வணிகத்தில் மேம்பட்டுள்ள பல்வேறுவிதமான தகவல் தொடர்புத்திறன்கள், அடுத்த பல ஆண்டுகளுக்குத் தொடரும். அதன் காரணமாகவே, இணையத்தில் வாங்கி அங்காடியில் பொருட்களை எடுத்துக் கொள்ளும் முறை, இணையத்தில் வாங்கிவிரும்பிய பொது இடத்தில் பொருட்களை எடுத்துசெல்லும் முறை, அதேநாளில் பொருள்விநியோகம் உள்ளிட்டவற்றில் சில்லறை வணிக நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
பல்லூடக வணிகச் சந்தையாக சில்லறை வணிகம் மாறி வருவதால், அதற்கான முக்கியத்துவம் பெருகியுள்ளது. பொருள் கொள்முதலில் கிடைக்கும்புதிய, சொகுசான, எளிதான வாய்ப்புகளை பற்றிக்கொள்ள நுகர்வோர் விரும்புவதால், அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற சில்லறை வணிக நிறுவனங்களும் முனைப்பாக உள்ளன.
இவை தவிர, பெருந்தொற்றால் ஏற்பட்ட பிற விளைவுகளையும் சில்லறை வணிகர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
திடீரென பரவும் பெருந்தொற்று அலை போன்ற எதிர்பாராத விளைவுகளையும் எதிர்கொள்ள தயாராக வேண்டும்.
பொருள் விநியோகத் தட்டுப்பாடு, தொழிலாளர் பற்றாக்குறை, நீடித்துவரும் விலைவாசி உயர்வு போன்றவற்றையும் சில்லறை வணிகத்துறை எதிர்கொள்ள நேரிடும்.
மாறிவரும் செயல்பாட்டு வியூகங்களையும் சில்லறை வணிகம் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். பொருள்களைப் பெறுவதற்காக வாடிக்கையாளர்களின் காத்திருக்கும் நேரத்தை குறைப்பதற்காகவும், நுகர்வோரின் மாறியுள்ள மனநிலைக்குத் தகுந்தவாறு துல்லியமான பொருள் விநியோகம் செய்வது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்,
ஆரம்ப பொதுவழங்கல் (இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங் ஐபிஓ):
வாடிக்கையாளருடன் நேரடி வணிகத் தொடர்பை வைத்திருக்கும் சில்லறை வணிக நிறுவனங்களின் சந்தை மதிப்பிடுதல் வலுவாக இருந்தாலும், அவற்றின் லாபம் குறைவாகவே உள்ளது. வாடிக்கையாளரின் மாறி வரும் முன்னுரிமைகளுக்கு தகுந்தவாறு வாடிக்கையாளர்களைச் சென்றடைவதற்கான வியூகங்களை மாற்ற வேண்டியுள்ளது. இதை செயல்படுத்துவதற்கு மூலதனம் தேவைப்படுவதால், அதை திரட்டுவதற்கு ஆரம்ப பொதுவழங்கலுடன்(ஐபிஓ) பங்குச்சந்தையில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளன. பொருள்களை வாங்கிக் குவித்து வைத்து, குறுகிய நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்க இந்த நிதி ஆதாரங்களை பயன்படுத்தவுள்ளனர்.
விநியோக சிக்கல்:
மின்வணிகதளத்தில்பொருட்கள் பட்டியலிடப்பட்டிருந்தாலும், அவை இருப்பு இல்லாவிட்டால் வாடிக்கையாளர்கள் வேறு தளங்களை நோக்கி நகர வாய்ப்பிருக்கிறது. அல்லது நேரடியாக கடைகளுக்குச் சென்று வாங்கிக் கொள்ளவும் வாய்ப்புள்ளது. இதனால் வாடிக்கையாளர்களையும், வணிகத்தையும் இழக்க நேர்ந்துவிடுகிறது. இதைத் தவிர்க்க, பொருள்களை வாங்கி இருப்பு வைத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக விற்பனை அதிகமாக காணப்படும் விழாக்காலங்களில் பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டால் அது வணிக நடவடிக்கைகளை பாதிக்கும். ஒருசில நேரங்களில் வாங்கி இருப்பு வைத்திருக்கும் பொருட்கள் விற்பனை ஆகாவிட்டால், அவற்றை குறைந்த லாபத்தில் விற்க நேரிடும். இது லாபத்தை வெகுவாகக் குறைத்துவிடும் அபாயம் உள்ளது.
விலைவாசி உயர்வு:
சில்லறை வணிகம் எதிர்கொள்ளும்மற்றொரு சிக்கல் விலைவாசி உயர்வு. பொருள்விலை உயர்வு, விநியோகச் செலவு உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றால் சில்லறை வணிகத்தின் லாபவிகிதம் குறைய வாய்ப்புள்ளது. இதைச் சமாளிக்க, விலை உயர்வை வாடிக்கையாளர்களுக்கு கைமாற்றும் நிலை உள்ளது. விலைவாசி உயர்வு சிக்கலைக் கையாள, ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கைகளை நிறுவனங்கள் எடுத்துள்ளன. தானியங்கி காசாளர் இயந்திரங்கள் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் கைகொடுத்துவருவதால், லாபவிகிதத்தை குறைக்காமல் பராமரிக்கலாம் என்பது நிறுவனங்களின் திட்டம். இதற்காக தானியங்கி வாடிக்கையாளர் சேவை இயந்திரங்களில் சில்லறை வணிக நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன.
நிலையான அங்காடிகள்:
பொருள்களை விற்பனை செய்வதற்கு நிலையான அங்காடிகள் செயல்பட்டுவருகின்றன. இதன் தேவைகள் குறைந்துவரும் போக்கும் காணப்படுகிறது. இதனால் பெருவணிக மையங்கள் பல மூடப்பட்டுவிட்டன. இதற்கு மாற்றாக, இணையதளத்தில் பொருள்களைக் கொள்முதல் செய்து, விருப்பப்பட்ட இடங்களில் பொருட்களை எடுத்துக்கொள்ளும் போக்கு அதிகரித்துவருகிறது.
இணையதளத்தின் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த பொருட்களை வாடிக்கையாளருக்கு நேரடியாக விற்க பெருவணிக மையங்களைத் தேடி அலையும் நிலையும் உருவெடுத்துள்ளது. வாடிக்கையாளருக்கு பொருட்களை விற்று பணமாக்குவதற்கான எல்லா வாய்ப்புகளையும் தேடி யானைப் பசியுடன் சில்லறை வணிகம் காத்திருக்கிறது. அதற்கான மாற்றங்களையும் வேகமாக உள்வாங்கிக் கொள்ளும் முயற்சியில் சில்லறை வணிகம் ஈடுபட்டுள்ளது. தலைகீழ் மாற்றங்களை நோக்கி சில்லறை வணிகம் பயணிக்க தொடங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.