இளைஞர்மணி

பணியிடம்... பன்முகத்தன்மைக்கே எதிர்காலம்!

அலுவலகங்களாகட்டும், தொழிற் சாலைகளாகட்டும் அங்கே பணிபுரியும் பல்லாயிரக்கணக்கானமனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியானவர்களே.

ந.முத்துமணி

அலுவலகங்களாகட்டும், தொழிற் சாலைகளாகட்டும் அங்கே பணிபுரியும் பல்லாயிரக்கணக்கானமனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியானவர்களே. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட குணங்கள், கருத்துகள்,அறிவுத்திறன், பிரச்னைகளை அணுகும் தன்மைகள் இருக்கவே செய்கின்றன. இது வயது, பாலினம், நிறம், மொழி, இனம், மதம், பாலியல்நோக்குநிலை, மனநிலை, உடல்நிலை மற்றும்இன்னபிற தனித்துவமான வேறுபாடுகள் அனைத்தும் உள்ளிடக்கியதாகும். இப்படிப் பலவிதமாக உள்ள மனிதர்களை நிறுவனத்தின் வளர்ச்சிக்காக எப்படிப் பயன்படுத்துவது?

இலக்குகளைச் சென்றடைய பல்வேறு தன்மைகளையுடைய இவர்களின் திறமைகளை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது? என்பது நிறுவனங்களின் மேலாளர்களுக்கு சிக்கலான கேள்விகளாகவே தொடர்கின்றன. என்றாலும் இந்தப் பணியாளர்களின் பன்முகத்தன்மையைத் தவிர்க்க இயலாது.

பன்முகத்தன்மை அவசியம்:

பணியிட பன்முகத்தன்மையால் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. புதிய நிறுவனங்களை தொடங்கும்போது அல்லது காலியிடங்களை நிரப்பும்போது, வேலை கேட்டு ஏராளமான விண்ணப்பங்கள் வந்துசேரும். பன்முகத்தன்மை கொண்ட பணிச்சூழலை உருவாக்க நினைக்கும் நிறுவனம், அந்த விண்ணப்பங்களில் இருந்து தகுதியான, திறமையானவர்களை எளிதில் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். இதற்கு மாறாக, குறிப்பிட்ட தன்மை கொண்டவர்களைத் தான் வேலைக்கு சேர்த்துக் கொள்வது என்று கொள்கையை கடைபிடித்தால், தகுதியான மற்றும் திறமையானவர்களை ஒருசேர தேர்ந்தெடுப்பது இயலாத காரியமாகும்.

பன்மொழி மற்றும் பன்முக இனக்குழுக்களை கொண்ட பணியாளர்கள் வேலை செய்தால், அந்நிறுவனத்தின் சந்தைதளத்தை தேசிய அளவில் அல்ல, உலக அளவில் விரிவுப்படுத்திக் கொள்ள வாய்ப்பு உருவாகும்.

கையாள்வது கடினம்:

பணியிடங்களில் பலவிதமான பணியாளர்களைக் கையாளுவது மிக கடினமான பணியாகும். சகிப்புத்தன்மை கலாசாரம், வெளிப்படையான தகவல்பரிமாற்றம், மோதல் மேலாண்மை உத்திகளைக் கடைப்பிடித்தல் போன்றவற்றின் மூலமாகவே பன்முகத்தன்மையை பணியிடங்களில் நடைமுறைப்படுத்த முடியும்.

பணியாளர்களின் செயல்களை அவரது பின்புலம், நடத்தை, நம்பிக்கைகள், வழக்கங்கள் எந்தவகையில் பாதிக்கும் என்பதை தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் புரிந்துகொண்டால், அவர்களை எளிதில் கையாளலாம்.

தகவல் தொடர்புக்கு முன்னுரிமை:

பன்முக பணிச்சூழலை சீராக நிர்வகிக்க, பணியாளர்களுடன் ஆக்கப்பூர்வமான தகவல்தொடர்பை உறுதி செய்துகொள்ள வேண்டும். நிறுவன கொள்கைகள், நடைமுறைகள், பாதுகாப்பு விதிமுறைகள், இன்னபிற முக்கியமான தகவல்களை மொழித்தடைகள், கலாசார தடுப்புகளைக் கடந்து பணியாளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். பகிர்ந்துகொள்ள விரும்பும் தகவல்களை பணியாளரின் சொந்த மொழியில் மொழிமாற்றம் செய்து தரலாம்.

தனி ஆளாக கருதுங்கள்:

பணியாளரின் பின்புலம் எதுவாக இருந்தாலும், அவரின் பணி செய்யும் திறமையே ஒரு நிறுவனத்துக்கு முக்கியமானது. வேலை செய்யும் திறமை என்ற அடிப்படையில் பணியாளர் ஒருவரை அணுகும் மேலாண்மைமுறை, நிறு
வனத்தின் வளர்ச்சிக்கு உதவும்.

சீரான அளவுகோல்கள்:

பணியாளர்களின் பின்புலம் எதுவாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், எல்லா பணியாளர்களுக்கும் அல்லது குழுக்களுக்கும் பொதுவான அடிப்படை விதிகளை வகுத்து செயல்படுத்துங்கள். எல்லா பணியாளர்களும் பாரபட்சமில்லாமல் சரிசமமாகவே நடத்தப்படுகிறார்கள் என்பதை உறுதி செய்யுங்கள். அப்போதுதான் மேலதிகாரிகளுக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் போகும். வேலை செய்வது ஒன்றே பணியாளர்களுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் என்பதை உறுதியாக்கும்.

பன்முகத்தன்மையைப் பயன் படுத்திக் கொள்ளுதல்:

பலதரப்பட்ட பார்வைகள், திறமைகளை நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அல்லது இலக்குகளை அடைவதற்கு எவ்வகையில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை அறிந்து, அவற்றை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

வேலைக்கு ஆள் எடுப்போர் பாரபட்சமாக அல்லது திறமைகளை மதிப்பிடுவதில் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. பாரபட்சங்களைக் கடந்து,
கல்வித்தகுதி, நற்சான்றுகள், அனுபவம், திறன் தொகுப்புகளின் அடிப்படையில் தகுதியானவர்களை வேலைக்கு சேர்த்துக்கொண்டால், அது பன்முக பணிச்சூழலுக்கு வழிவகுத்துவிடும்.

ஆள்சேர்ப்புக்குழுவில் பலவிதமான தன்மை உடையவர்கள் இருந்தால், அது தகுதியானவர்களை தேர்வு செய்ய உதவியாக இருக்கும்.

பலவிதமான பணியாளர்கள்...

ஒரே இலக்கு:

பணியிடத்தில் பலவிதமான தன்மை உடையவர்கள் வேலை செய்யும்போது, இலக்கை அடைய எல்லாரும் ஒருமித்து பணிபுரிவது அவசியமாகும். பலவிதமான தன்மைகளின் காரணமாக, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் ஏற்படும் பிரச்னைகள், கலாசார, பழக்க,வழக்க முரண்கள் பணியாளர்களின் செயல்திறனைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பல்வேறு பின்னணிகளைக் கொண்ட பணியாளர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள பயிற்சி அளிக்க வேண்டும். அது மாற்று கருத்துகளுக்கு செவிசாய்க்கும் மனப்பான்மையை வளர்க்கும். பிறரின் மனதைப் புண்படுத்தாமல் நடக்க கற்றுக் கொடுக்கும்.

பன்முகத்தன்மைக்கே எதிர்காலம்:

உலக அளவிலான தொழில்நுட்ப வளர்ச்சி, உலகின் பல பகுதிகளில் உள்ள மக்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அப்பால் வெகு தொலைவில் உள்ள இடங்களுக்கு வேலைக்காக விரட்டி அடிக்கிறது. எனவே ஒரு நிறுவனத்தில் அந்த நிறுவனம் இருக்கும் பகுதியைச் சேர்ந்த ஒரே மாதிரியான கலாசாரத்தைக் கொண்டவர்களே வேலை செய்வார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது. எனவே வருங்காலத்தில் பணியாளர்களின் பன்முகத்தன்மையை நாம் தவிர்க்க முடியாது. அதற்கேற்ற நிர்வாகத் திறனை வளர்த்துக் கொள்வதும், புதிய மேலாண்மை முறைகளைக் கைக்கொள்வதுமே பொருத்த
மானதாக இருக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜமா இயக்குநரின் புதிய பட போஸ்டர்!

எதிர்க்கட்சியின் போராட்டத்தில் காயமடைந்த கேரள அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

பாரிஜாதம் தொடரின் புதிய நாயகன் அக்‌ஷய் கமல்!

நல்லகண்ணு மறைவு: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்!

அக்‌ஷர் படேல் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும்: ரவி சாஸ்திரி

SCROLL FOR NEXT