இளைஞர்மணி

போட்டித் தேர்வு... சந்தேகங்கள்... தீர்வுகள்! 

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த இரு ஆண்டுகளாக கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக போட்டித்தேர்வுகளை நடத்தாமல் இருந்து வந்தது.

சி.வ.சு. ஜெகஜோதி


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த இரு ஆண்டுகளாக கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக போட்டித்தேர்வுகளை நடத்தாமல் இருந்து வந்தது. தற்போது போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்பை அது வெளியிட்டுள்ளது.

தேர்வாணையம் 5400 காலிப்பணியிடங்களை நிரப்ப இருப்பதாகவும், இதற்கான முதல்நிலைத்தேர்வு வரும் மே மாதம் 21- ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்திருக்கிறது. போட்டித் தேர்வை எழுதவுள்ள பல இளைஞர்களுக்கு சந்தேகங்கள் பல எழுகின்றன. அவற்றில் ஒன்று: "5 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு  9 லட்சம் பேர் தேர்வு எழுதப் போகிறார்கள். இதில் நமக்கு எப்படி வேலை கிடைக்கும்?' என்ற சந்தேகம். 

"என்னதான் கஷ்டப்பட்டு படித்து,தேர்வில் வெற்றி பெற்றாலும் பணம் இருந்தால் தான் வேலைக்குப் போக முடியும்  என்ற  சந்தேகமும்  சிலருக்கு இருக்கிறது. "எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலும் நேர்முகத் தேர்வில் மதிப்பெண்களை குறைத்து போட்டு விட்டால் என்ன செய்வது?'  இது இன்னும் ஒரு சந்தேகம்.

போட்டித்தேர்வுகளைப் பொருத்தவரை வெற்றிக்கு பணம் எப்போதும் தடையாக இருந்ததில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இனி வாழவே முடியாது என்று வாழ்க்கையை வெறுத்து தற்கொலை முடிவுக்கு வந்த பலரும் நம்பிக்கை எனும் மந்திர ஏணியில் ஏறி சாதனை படைத்திருக்கிறார்கள். குறுக்கு வழியாகவோ அல்லது அதிர்ஷ்டவசமாகவோ எந்த ஒரு சாதனையும் நடந்து விடாது; நடக்காது. அப்படியே குறுக்கு வழியில் கிடைக்கும் வெற்றி நம்மை உறுத்திக் கொண்டே இருக்கும். சிறப்பாகவோ,நேர்மையாகவோ செயல்படவும் விடாது. 

இதனால் மன அழுத்தம் அதிகமாகி நோயாளியாகவும் வாய்ப்பிருக்கிறது. எனவே அப்படிப்பட்ட வெற்றி தேவையும் இல்லை. 

இது குறித்து போட்டித்தேர்வில் வெற்றி பெற்று வேலைவாய்ப்புத்துறையில் பணியாற்றி வரும் உயர் அதிகாரி ஒருவர் கூறியது: 

""தேர்வாணையமே சுமார் 9 லட்சம் பேர் தேர்வை எழுதுவார்கள் என எதிர்பார்ப்பதாகச் சொல்லி இருக்கிறது. விண்ணப்பிப்பதுதான் 9 லட்சம் பேராக இருக்கும். ஆனால் விண்ணப்பிக்கும் அனைவருமே தேர்வை எழுதுவதில்லை. 75 சதவிகிதம் பேரே தேர்வை எழுதுவார்கள். இந்த 75 சதவிகிதத்திலும் 50 சதவிகிதம் பேர் திட்டமிட்டுப் படிக்காமல், அரசு வேலைக்குப் போக வேண்டும் என்ற ஆர்வத்தில் தேர்வு எழுதுபவர்களாகவே இருப்பார்கள். போட்டித் தேர்வுகளைப் பொருத்தவரை திட்டமிட்டுப் படித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். விண்ணப்பிப்பது 9 லட்சம் பேராக இருந்தாலும், 30 சதவிகிதம் பேரே திட்டமிட்டு படித்து தேர்வை எழுதுபவர்களாக இருப்பார்கள். என்னைப் பொருத்தவரை எழுதுபவர்களின் எண்ணிக்கையை பற்றி சிறிதும் கவலைப்படத் தேவையில்லை.

தேர்வில் வெற்றி பெற எப்படிப் படிக்க வேண்டும் என்று மட்டும் சிந்தித்து, அதைச் செயல்படுத்தினாலே வெற்றி நிச்சயம். 

எந்தப் புத்தகத்தை எப்படிப் படிக்க வேண்டும் என்ற வரைமுறை உள்ளது. பொது அறிவு என்று எடுத்துக் கொண்டால் அது மிகப்பெரியதும், ஆழமானதுமான கடல். பொது அறிவுக் கேள்விகள் அனைத்தையும் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. தெரிந்து கொள்ளவும் வாய்ப்பில்லை. உலக மாணவர் தினம், உலக முதியோர் தினம் இப்படியாக 150-க்கும் மேற்பட்ட தினங்கள் உள்ளன. இவை எந்தெந்த  தேதிகளில் வருகின்றன என தெரிந்து வைத்துக் கொண்டாலே இவற்றிலிருந்து எப்படியும் ஒரு சில கேள்விகள் வந்துவிடும். இது ஓர் உதாரணம்.  இதுபோன்று ஒவ்வொரு பாடத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். படிப்பதை நினைவில் வைத்துக் கொள்ள பயிற்சி நிறுவனங்களால் நடத்தப்படும் வாரத் தேர்வுகளை தவற விட்டு விடக்கூடாது. நடப்பு நிகழ்வுகள், தினசரி மற்றும் வார, மாத இதழ்களை அவ்வப்போது படித்து தெரிந்து கொள்வதும் மிகவும் அவசியம்.
எந்த புத்தகத்தை எப்படிப் படிக்க வேண்டும் என சொல்லிக் கொடுப்பதற்கும் பல நிறுவனங்கள் உள்ளன. எனக்கு எந்த வசதியுமே இல்லை என்பவர்களுக்கு தமிழக அரசின் வேவைவாய்ப்புத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் உதவக் காத்திருக்கின்றன.போட்டித் தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்கள், தேவையானவற்றைப் படிக்கவும், பதிவிறக்கம் செய்யவும் இணைய வசதி, அனுபவசாலிகளின் பயிற்சி வகுப்புகள், வாராந்திர தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தெரியாதவர்களுக்கும் அவர்களே விண்ணப்பித்தும் கொடுக்கிறார்கள். வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு வர முடியாத நிலையில் இருப்பவர்கள் பல தனியார் நிறுவனங்கள் இணையத்தில் நடத்தும் பயிற்சி மற்றும் தேர்வுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

போட்டித்தேர்வை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு மேலும் ஒரு சந்தேகம் இருக்கிறது.  எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றாலும் நேர்முகத் தேர்வில் மதிப்பெண்களைக் குறைத்துப் போட்டு விடுவார்கள் என்கிற சந்தேகம். இதற்கும் கவலைப்படத் தேவையில்லை.

இப்படியெல்லாம் ஒரு காலத்தில் நடந்திருக்கலாம். ஆனால் இப்போது அப்படியில்லை. முதல்நிலை எழுத்துத் தேர்வில் அதிகமான மதிப்பெண்கள் பெற்று விட்டால் நேர்முகத் தேர்வில் அவரது பங்களிப்பு போதுமானதாக இல்லையென்றாலும் தேர்வை நடத்துபவர்கள் மொத்த நேர்முகத்தேர்வு மதிப்பெண்ணான 40-இல் 18 மதிப்பெண்களைப் மேல் போட்டே ஆக வேண்டும். அதிகபட்சமாக 30 மதிப்பெண்களைப் பலரும் பெறுகிறார்கள். குறைந்த பட்சம், அதிக பட்சம் என நிர்ணயித்து விட்டார்கள். எனவே நேர்முகத் தேர்வில் எதையும் செய்து விடுவார்களோ என்று அஞ்சவும் தேவையில்லை. 

மொத்த மதிப்பெண்களில் எழுத்துத்தேர்வுக்கு 400 மதிப்பெண்களும், நேர்முகத் தேர்வில் 40 மதிப்பெண்களும் சேர்த்து 440க்கு 102 மதிப்பெண்கள் எடுத்தாலே அரசுப்பணி உறுதியாகி விடும். குறைவான மதிப்பெண்கள் எடுத்து எழுத்துத்தேர்வில் வெற்றி பெறுவதை விட அதிக மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெறுவதே உங்களது லட்சியக் கனவாக இருக்க வேண்டும். அதுவே நேர்முகத்தேர்விற்கு உதவியாக கூடுதல் மதிப்பெண்ணையும் பெற்றுத்தரும் என்பதையும் மறந்து விடக்கூடாது. கனவுகள் நிறைவேற முதலில் அதை அடைவதற்கு தேவையான அனைத்தையும் தயார் செய்து வைத்துக் கொண்டு பின்னர் களத்தில் குதித்துப் பாருங்கள், வெற்றிக்கதவு தானாகவே திறந்து விடும். வெற்றியடைந்த மனிதர்களை நீங்கள் ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் சாதனை புரிந்தே ஆக வேண்டும் என்ற அக்னி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும். இந்த வெறி இல்லாதவர்களிடம் எத்தனை திறமைகள் இருந்தாலும் சுடர்விட்டுப் பிரகாசிக்க வாய்ப்பே இல்லை.

எனவே நம்பிக்கையுடன் முயற்சி செய்து பார்க்க வேண்டும். தேர்வுக்கு குறுகிய நாட்களே இருப்பதால் ஒவ்வொரு நாளையும் மதிப்புமிக்க நாட்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்'' என்றார் அந்த வேலைவாய்ப்புத்துறை அதிகாரி. 

ஒரு சில மாதங்களுக்கு முன்பு வருவாய்த்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருப்பவரை அண்ணனும், தங்கையும் சந்திக்க வந்திருந்தார்கள். பேசிக் கொண்டிருந்த போது, "" தங்கை என்ன செய்கிறார்?'' என்று கேட்டார் அந்த உயர் அதிகாரி. ""ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றி பெறுவதற்காக தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறார்'' என்றார் அண்ணன். உடனே சற்றும் தயங்காமல், அந்த அதிகாரி சொன்னார்: ""நான் முதலில் தீயணைப்புத்துறையில் காவலராகவும் பின்னர் அதே துறையில் உதவி ஆய்வாளராகவும் பணியாற்றினேன். அதன் பின்னர் வேளாண்மைத்துறையில் கண்காணிப்பாளராகவும் உயர்ந்தேன். இதனையடுத்து மீண்டும் தேர்வு எழுதி, வெற்றி பெற்று, உயர் அதிகாரியாகி இருக்கிறேன். அப்போது என்னைப் பார்த்து சிரித்தவர்கள் இன்று என்னிடமே உதவி கேட்டு வருகிறார்கள். எந்தத்  தேர்விலும் யாருக்கும் கையூட்டு கொடுக்கவோ, யாரிடமும் சிபாரிசுக்கோ போகவில்லை. எனது தன்னம்பிக்கையும், உழைப்புமே என்னை உயர்த்தியிருக்கிறது. 

இத்தனைக்கும் நான் திருநெல்வேலி மாவட்டத்தில்,ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். எந்த கையூட்டும் கொடுக்காமல், சிபாரிசுக்கும் போகாமல் போட்டித் தேர்வுகளில் வென்ற பலரை என்னால் உதாரணமாக சொல்ல முடியும். நம்மை நாமே செதுக்கிக் கொள்வது தான் வெற்றிக்கான சூத்திரம்'' என்றார்.


இதை கேட்டுக் கொண்டிருந்த இருவர் முகங்களிலும் ஒரு புத்துணர்வு வந்திருந்தது. அதுவரை எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பெண் எழுந்து, ""என்றாவது ஒரு நாள் உங்கள் முன்பு கலெக்டராக வந்து நிற்பேன்'' என்று சொல்லி விட்டு நன்றியுடன் விடைபெற்றார்கள்.

காதும் கேட்காமல், கண் பார்வையும் இல்லாமல் முதல் முதலில் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் ஹெலன்கெல்லர். மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகவே தன் வாழ்வை மாற்றிக்கொண்ட இப்பெண்மணி, அமெரிக்காவில் துஸ்கும்பியா என்ற ஊரில் பிறந்தவர். இவரிடம், ""உங்களின் வெற்றி ரகசியம் என்ன?'' என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டார். அதற்கு அவர், ""இந்த உலகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் இந்த உலகமே என்னைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். எனது லட்சியக் கனவு நிறைவேறி விட்டது'' என்றாராம். நம்பிக்கையுடன் திட்டமிட்டு செயல்படுங்கள், உலகம் உங்களையும் ஒருநாள் திரும்பிப் பார்க்கும் காலம் வரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு

சிரி... சிரி...

அசத்தல்...

SCROLL FOR NEXT