குளித்தும் குளிக்காததுமாக, வெந்ததும் வேகாததுமாக சிற்றுண்டியை வாயில் திணித்து, அரக்க பரக்க வாகனங்களில் ஏறி, போக்குவரத்து நெரிசலில் எரிச்சல் அடைந்து, வியர்த்து விறுவிறுக்க குறித்த நேரத்திற்குள் அலுவலகங்களை அடையும்போது கிடைக்கும் நிம்மதிக்கு ஈடு இணை இல்லை. ஆனால், கரோனா தொற்றுக்குப் பிறகு காட்சியே மாறிவிட்டது.
நிம்மதியாக எழுந்து, பதற்றம் எதுவும் இல்லாமல் குளித்துவிட்டு, நிதானமாக சிற்றுண்டியை சுவைத்துக் கொண்டே,முகத்தைக் காட்டாமல், கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் விளக்கங்களை அளித்துக் கொண்டு... வீட்டுக்குள் அலுவலகத்தை உருவாக்கி வேலை செய்யும் வழக்கத்திற்கு நாம் மாறிவிட்டோம்.
அங்கும் இங்கும் செல்லாமல், வீட்டிலேயே வேலை செய்வது கூட சுகமானதுதான். படுத்துக் கொண்டே கூட அலுவலகக் கூட்டங்களில் கலந்து கொள்ள இயலும். உங்களுக்குப் பிடித்த எளிமையான உடைகளை அணிந்து கொள்ள முடியும். என்றாலும் வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே இடைவெளி எதுவும் இல்லாததால், வீட்டில் இருந்து வேலை செய்வது ஒரு சிலருக்கு எரிச்சலைத் தந்துள்ளது. வீட்டில் இருந்து வேலை செய்வதைப் பலர் விரும்பினாலும், வேலையில் கவனம்செலுத்துவது கடினமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.
சுகம் தரும் வேலை:
அமெரிக்காவில் ஆர்லிங்டன் மாகாணத்தில் உள்ள "ஈகிள் ஹில் கன்சல்ட்டிங்' என்ற மனிதவள நிறுவனம் அண்மையில் எடுத்த கருத்துக்கணிப்பின்படி நேரடியாக அலுவலகத்திற்கு சென்று வேலை செய்வதைக் காட்டிலும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதைப் பலரும் விரும்புவதாகத் தெரிய வந்துள்ளது. வீடே அலுவலகமாக மாறியுள்ளது பலருக்கு சுகமான அனுபவத்தை தந்திருந்தாலும், வீட்டில் இருந்து வேலை செய்யும்போது உற்பத்தித்திறன் குறைந்து வருவதாகப் பலரும் தெரிவித்துள்ளனர். "ஈகிள் ஹில் கன்சல்டிங்' வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், அமெரிக்காவில் வீட்டில் இருந்து வேலை செய்யும் பாதிப் பேர் மனதளவில் சோர்வடைந்திருப்பதாக கூறியுள்ளது. குறிப்பாக, பெண்கள், இளம் பணியாளர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
உற்பத்தித்திறன் குறைவு... ஏன்?
"வீடுகளில் இருந்து வேலை செய்யும் போது உற்பத்தித்திறன் குறைவதற்கு, நேரத்தை வீணாக்கும் பழக்கங்கள்தான் காரணம். தேவையில்லாமல் நேரத்தை வீணாக்கிவிட்டு, குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் போகிறது. இது பலருக்கும் மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. அதனால் மன அழுத்தம் உருவாகிறது' என்கிறது கிளாக்வைஸ் என்ற ஆய்வு நிறுவனம்.
இதற்கு என்ன செய்ய வேண்டும்? வேலை நேரத்தை வீணாக்கும் பழக்கங்களை மாற்ற வேண்டும். அப்போதுதான் உற்பத்தித்திறனை மேம்படுத்த முடியும். நேரத்தை வீணாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
மின்னஞ்சல்களுக்கு உடனடி பதில்:
வீட்டில் இருந்து வேலை செய்வதால், அலுவலகத்திற்கும் நமக்கும் இடையிலான தகவல் தொடர்புகள் மின்னஞ்சல், ஸ்லாக் உள்ளிட்ட பல இணையவழி ஊடகங்கள் வழியாகத்தான் நடத்தப்படுகின்றன. உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களுக்கு உடனுக்குடன் பதில் அளிப்பது தான் அலுவலக வேலைகளை கவனிப்பதற்கான அடையாளம் என்று பலரும் நினைக்கலாம். அப்படிச் செய்வதில் கால விரயம் ஏற்படுவதை என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா? அலுவலக வேலையை செய்து கொண்டிருக்கும்போது, இடையில் வரும் மின்னஞ்சலுக்குப் பதிலளிக்க முற்படுவதால், முதலில் உங்கள் கவனம் சிதறும். அடுத்ததாக, வேலையின் தொடர்ச்சி பாதிக்கப்படும். இது உற்பத்தித்திறனை வெகுவாகப் பாதிக்கும். இதனால் முழுமையாக வேலையில் கவனம் செலுத்த முடியாது. அலுவலகம் கூறியிருக்கும் வேலையை முதலில் முடித்துவிட்டு, மின்னஞ்சல்களுக்கு தனி நேரம் ஒதுக்கி அவற்றுக்குப் பதில் அளிக்கலாம். வேலைக்கு இடையில் மின்னஞ்சல்களைப் பார்ப்பதற்காக 30 நிமிடங்களை ஒதுக்கிக் கொள்ளலாம். அப்படிச் செய்வதால், உங்கள் கவனமும் சிதறாது, வேலையும் பாதிக்காது, மின்னஞ்சல்களுக்கும் பதில் அளிக்கலாம்.
கவர்ந்திழுக்கும் புதிய வேலை:
ஒரு வேலையில் மும்முரமாக ஈடுபட்டு இருக்கும்போது திடீரென மனதில் தோன்றும் புதிய வேலைகள் நமது கவனத்தைத் திசைதிருப்பிவிடும். அலுவலக வேலையின்போது புதியவேலைகளால் ஏற்படும் நேர விரயம் உற்பத்தித்திறனை வெகுவாகப் பாதிக்கும். அலுவலக வேலையைத் தொடங்குவதற்கு முன்பாக, வேலைகளை வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் வேலையை வரிசைப்படுத்த வேண்டும். இதைப் பின்பற்றுவது நேர விரயத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தும்.
புதிய வேலை ஏதாவது நமது கவனத்திற்கு வந்தால், அலுவலக வேலைகளை அப்படியே விட்டுவிட்டு அந்த வேலைக்கு தாவுவதை தான் "கவர்ந்திழுக்கும் புதிய வேலை' என்கிறார்கள். ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்போது, மற்றொரு வேலையைச் செய்வது புத்திசாலித்தனம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், ஏற்கெனவே செய்து பாதியில் நிறுத்தப்பட்ட வேலை அப்படியே இருக்க, புதிய வேலையை முடிக்க நேரமில்லாத நிலை ஏற்பட்டு, எதையும் முழுமையாகச் செய்து முடிக்க முடியாத நிலையே ஏற்படும்.
அலுவலகத்தின் புதிய வேலை என்றில்லை, வேலை செய்து கொண்டிருக்கும்போது, வீட்டின் மின் கட்டணம் செலுத்த வேண்டுமென்பது நினைவுக்கு வரும். உடனடியாக செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, மின்கட்டணம் கட்டுவதற்காக இணையவெளிக்குச் சென்று விடுவோம். அம்மாவின் பிறந்தநாள் நினைவுக்கு வந்ததும், பரிசுப் பொருட்களை வாங்க இணையவெளிக்கு கவனம் பறக்கும். இதுபோன்ற சிறுசிறு வேலைகள் அல்லது வீட்டு வேலைகள் அல்லது சொந்த வேலைகள் கவனச்சிதறல்களுக்கு வழிவகுத்து, நேரத்தை வீணாக்கும். எனவே, வேலைகளை வரிசைப்படுத்திக் கொண்டு, அதன்படி செயல்படுவது அலுவலக வேலைகளை உரிய காலத்தில் முடிக்க உதவியாக இருக்கும். முதன்மையான அலுவலகப்பணிகளை முடித்துவிட்டு, சொந்த வேலைகளில் ஈடுபடலாம்.
சமூகவலைதள உலா:
வீட்டில் இருந்து வேலை செய்யும்போது எதிர்கொள்ளும் மிகமுக்கியமான கவனச்சிதறல் எது என்று 600 பேரிடம் ஆய்வு நடத்தியபோது, ஸ்மார்ட்போன் என்று 56 சதம் பேர் தெரிவித்துள்ளனர். வேலையில் இருந்து இளைப்பாற எழுந்திருக்கும் பலரும் முதலில் தேடுவது செல்லிட பேசியைத்தான். வாட்ஸ்அப் பார்க்க தொடங்கி, முகநூல் சென்று, சுட்டுரையில் பயணித்து, அட...வேலைக்குத் திரும்பும்போது அரைமணி நேரம் வீணாகி இருக்கும்.
நகைச்சுவை காட்சிகள் எதுவும் கண்ணில் பட்டுவிட்டால், மனதை இளைப்பாறிக்கொள்கிறேன் என்று அங்கு மேயும் மனது, மீண்டும் வேலைக்குத் திரும்பும்போது ஒரு மணி நேரம் காணாமல் போயிருக்கும். வேலையில் உற்பத்தித் திறனை பாதிக்கும் மிக முக்கியமான பழக்கம், செல்லிடபேசியில் உலா வருவது தான். வேலை நேரத்தில் செல்லிட பேசிகளுக்கு ஓய்வளிக்க முடிவு செய்து, பக்கத்து அறையில் வைத்துவிட வேண்டும். இதைச் செய்ய முடியாவிட்டால், செல்லிட பேசியைப் பார்ப்பதற்கு என்று குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். அப்போது தான் நேரத்தை விரயமாக்கும் கவனச்சிதறல் இல்லாமல் நிம்மதியாக வேலையை முடிக்கமுடியும்.
வீட்டுக்குள் அலுவலகத்தை வைத்துக்கொண்டு வேலை செய்வது வரை இதுபோன்ற நேரத்தை வீணாக்கும் பழக்கங்களை விலக்கி வைப்பது நடைமுறையில் கடினமானதாகும். ஆனால், வேலையில் கவனம் செலுத்தி, உற்பத்தித்திறன் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், மனதை கல்லாக்கிக் கொண்டு சில கட்டுப்பாடுகளை வகுத்துக் கொண்டு, அவற்றைத் தவறாமல் கடைபிடிப்பது நல்லது. இந்த புதிய பழக்கத்தை பழக்கமாக்கிக்கொள்ளாவிட்டால், நேர விரய பழக்கங்கள் நம்மைவிட்டு விலகாது, பின்னர் அதுவே நிலையான பழக்கமாகிவிடும். கவனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.