முகப்பு
மகளிர்மணி

வில்லியாக நடிக்க வேண்டும்! ஸ்ரித்திகா

"நாதஸ்வரம்' தொடரில் மலராக வந்து மக்கள் மனதில் ஒட்டிக் கொண்டவர் ஸ்ரித்திகா. தற்போது சன் தொலைக்காட்சியில் "குலதெய்வம்' தொடரிலும், ராஜ் தொலைக்காட்சியில் "என் இனியத் தோழி' தொடரிலும் நடித்துவருகிறார். 

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:27 AM
பகிர்:

"நாதஸ்வரம்' தொடரில் மலராக வந்து மக்கள் மனதில் ஒட்டிக் கொண்டவர் ஸ்ரித்திகா. தற்போது சன் தொலைக்காட்சியில் "குலதெய்வம்' தொடரிலும், ராஜ் தொலைக்காட்சியில் "என் இனியத் தோழி' தொடரிலும் நடித்துவருகிறார். 

இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

""ப்ளஸ் டூ முடித்துவிட்டு மாடலிங் செய்து வந்தேன். சினிமாவில்  நாயகியாக வரவேண்டும் என்ற ஆசையில்தான் மலேசியாவில் இருந்து தமிழகம் வந்தேன். "மதுரை டூ தேனி' படத்தில் நாயகியாகவும், "வேங்கை', "வெண்ணிலா கபடி குழு' போன்ற ஒரு சில படங்களில் கேரக்டர் ரோல்களிலும் நடித்துள்ளேன். அதன் பின்னர்  பெரியதிரையில் நான் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையவில்லை. அதனால்தான் சின்னத்திரைக்கு வந்தேன்.  ஆனால் சின்னத்திரை மக்கள் மனதில் எனக்கு நல்லதொரு இடத்தைப் பெற்றுத்தந்திருக்கிறது.

 நான் நடித்த ஒவ்வொரு சீரியல்களுமே எனக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தன.  குறிப்பாக நாதஸ்வரம் மலர் கேரக்டரில் நடித்ததனால் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பெண்கள் என்னை தங்களது சொந்த மகளாகவே  நினைக்கிறார்கள். உதாரணமாக  "வேங்கை' படத்தில்  தனுஷின் தங்கையாக நடித்த போது, படப்பிடிப்பிற்கு வந்த அவரது அம்மா என்னை நேரில் அழைத்து பாராட்டி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். அந்த அளவிற்கு 5 ஆண்டுகள் பிரபலமான சீரியலாக நாதஸ்வரம் அமைந்து விட்டது. இப்படி ஒரு குடும்பப் பொறுப்புள்ள, சென்டிமெண்ட்டான கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய திருமுருகன் சாருக்குதான் இதற்கு எனது நன்றியை சொல்ல வேண்டும். அந்த சீரியலில் எனது நடிப்பை பார்த்து வியந்த இயக்குநர்,  அதையடுத்து  நாதஸ்வரம் சீரியல் போலவே குலதெய்வம் தொடரிலும் எனக்கு ஒரு போல்டான கதாபாத்திரம் கொடுத்துள்ளார். இந்த தொடரும் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்த சீரியலாக இருக்கும்.

அதையடுத்து ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் "என் இனிய தோழி' தொடரிலும் லீட் ரோலில் நடிக்கிறேன்.  இயக்குநர்கள் என்னை நம்பி தரும் கேரக்டர்கள் தன்மையை உணர்நது பொறுப்புடன் நடிக்கிறேன்.  அதனால் எனது கதாபாத்திரங்களும் பேசப்படுகின்றன.  ஒவ்வொரு சீரியல்களிலும் நடிக்கும் போதும் அந்தந்த குடும்பத்திலுள்ள  உறுப்பினர் போலவே என்னை நினைத்துக் கொண்டு நடிக்கிறேன். இதனால்  அந்த சீரியலில் நடிக்கும்  சக நடிகர் நடிகைகளை எனது  உடன் பிறந்தவர்களாக நினைத்துக் கொள்கிறேன். அதனால்தான் என் நடிப்பு இந்தளவிற்கு இயல்பாக வருகிறது என நினைக்கிறேன்.

 தொடர்களில் ஹீரோயினாக நடிப்பது பிடித்திருந்தாலும் ஒருமுறையாவது வில்லியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. அந்த முக பாவனை எனக்கு வருமா? என்று தெரியவில்லை இருந்தாலும் ஒரு ஆசைதான்'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.