முகப்பு
மகளிர்மணி

'அகல்யா' கேரக்டரைப் பார்த்து ஏமாந்துடாதீங்க... கிருத்திகா

""நான் சென்னைவாசிதான். தினமும் தயிர் சாதமும், மாவடுவும் சாப்பிடுகிற அக்மார்க் ஜயர் பொண்ணு. அதற்காக ரொம்ப அமைதியான பொண்ணு என்று நினைத்தால் அது  உங்கள் தப்பு''

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:01 AM
பகிர்:

""நான் சென்னைவாசிதான். தினமும் தயிர் சாதமும், மாவடுவும் சாப்பிடுகிற அக்மார்க் ஜயர் பொண்ணு. அதற்காக ரொம்ப அமைதியான பொண்ணு என்று நினைத்தால் அது  உங்கள் தப்பு'' என்று ஆரம்பமே அமர்க்களமாக துவக்கினார் "வாணிராணி' தொடரில்  அகல்யா கதாபாத்திரத்தில் அப்பாவியான முகபாவத்துடன் வரும் கிருத்திகா. 

அவர்  நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

 ""நான் படிக்கும் காலத்திலிருந்தே  ஸ்டேஜ் ஷோக்களில் ஆங்கரிங்  செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு சின்ன வயதிலிருந்தே நடிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் என் அப்பா துரைராஜுக்கும், அம்மா கனகவல்லிக்கும் 20 ஆண்டுகள் கழித்து நான் பிறந்ததால் வீட்டில் ரொம்ப செல்லம். அதனால்  எங்க அம்மாவுக்கு என்னை நடிக்க அனுப்புவதற்கு பயம். அதற்காக நடிப்பு ஆசையை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு எம்.பி.ஏ வரை படித்தேன். ஒரு கட்டத்தில் அம்மா தவறிட்டாங்க. நான் ரொம்பவும் ஆசை வைத்திருந்த அம்மாதான் என்னோடு இல்லாமல் போய்ட்டாங்க.  நடிகையாகணும் என்கிற  என்னோட ஆசையாவது நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தேன். அப்பாவும் சரி என்றார். அதன்பிறகுதான் நடிகையானேன்.

 திருமுருகன் சாரோட "தேன்நிலவு' தொடரில்தான் முதன் முதலில் நடித்தேன். அதன் பிறகு இளவரசி தொடரில் ஈஸ்வரி என்ற கேரக்டரில் நடித்தேன். தற்போது  சன் டிவியில் "வாணிராணி',"கல்யாண பரிசு', விஜய் டிவியில் "ஆண்டாள் அழகர்' தொடரிலும் நடித்து வருகிறேன். மூன்று தொடரிலும் மூன்று விதமான கதாபாத்திரங்கள். வாணிராணி தொடரை பொறுத்தவரை  அகல்யா கேரக்டரில்  மிக மிக அமைதியான, அடக்க ஒடுக்கமாக நடிக்க வேண்டும். கல்யாணப் பரிசு தொடரில் கயல்  என்கிற நெகட்டிவ் கேரக்டரில் வந்து மிரட்டுவேன், ஆண்டாள் அழகர் தொடரில் கணவன் மீது வைத்திருக்கும் அதீத அன்பை வெளிப்படுத்துகிற வெள்ளந்தியான கேரக்டர். அந்தந்த கேரக்டருக்கான மேக் - அப் போடும்போதே அந்த கேரக்டராகவே மாறிவிடுவேன். மூன்று கேரக்டரும் ரொம்பவும் விரும்பி, ரசித்து நடிக்கிறேன். இதில் சவாலான கேரக்டர் என்றால் அது வாணிராணி அகல்யாதான். காரணம், நான் நிஜத்தில் ரொம்பவும் துறுதுறு வென்று இருக்கும்.  ஜாலியான பொண்ணு. வாயை திறந்தால் படபடவென்று பொரிந்து தள்ளிவிடுவேன். அதில் என் தங்கச்சியாக வரும் அஞ்சலியின் கேரக்டர்தான் என் நிஜ கேரக்டர். எனக்குப் போய் அமைதியாக,  அடக்க ஒடுக்கமாக, சமர்த்து பெண்ணாக, பேசுவதற்கே யோசிக்கும்படியான கேரக்டர் கொடுத்தால் நான் என்ன செய்வேன்; நீங்களே சொல்லுங்கள்?

 இதைத்தவிர பெரியத்திரையிலும் "இனிமே இப்படித்தான்' என்கிற  படத்தில் தோழி கேரக்டரில் நடித்து வருகிறேன்.

 நடிப்பு என்பது எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தமான ஒன்று. இதனால் சின்னத்திரை, பெரியதிரை என்ற வித்தியாசம் இல்லாமல் இரண்டிலும்  நிறைய நடிக்க வேண்டும்.   நடிக்க வந்த சிறுகாலத்திலேயே காணாமல் போகாமல் கடைசிவரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். உதாரணமாகச்  சொல்ல வேண்டும் என்றால் வயதான பிறகும் அம்மா, பாட்டி கேரக்டர் வந்தாலும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இதற்காக எடுத்தவுடனேயே டாப் ஸ்டேஜ் போக வேண்டும் என்று ஆசைப்படவில்லை. சின்ன சின்னதா படிப்படியா முன்னேறினால் போதும். அதுவே

சந்தோஷம்தான்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.