எங்களுக்குள் எப்பவுமே ஒரு புரிதல் இருக்கும் : நிரோஷா
'தாமரை' தொடரில் அன்பொழுகும் ராஜியாகவும், 'சின்னப் பாப்பா - பெரிய பாப்பா' தொடரில் கனக துர்காவாகவும் வந்து அனைவரையும் மகிழ்வித்து வரும் அன்றைய இளைஞர்களின் கனவுகன்னி நிரோஷா கூறுகிறார்:
"தாமரை' தொடரில் அன்பொழுகும் ராஜியாகவும், "சின்னப் பாப்பா - பெரிய பாப்பா' தொடரில் கனக துர்காவாகவும் வந்து அனைவரையும் மகிழ்வித்து வரும் அன்றைய இளைஞர்களின் கனவுகன்னி நிரோஷா கூறுகிறார்:
தற்போது நடித்து வரும் "தாமரை', "சின்னப்பாப்பா- பெரியபாப்பா' இரண்டிற்கும் என்ன வித்தியாசம் உணர்ந்தீங்க?
இரண்டுமே இரண்டு விதமான கதாபாத்திரம். அதே சமயம் இரண்டுமே ரொம்ப சவாலான கதாபாத்திரம். எல்லாரையும் சிரிக்க வைக்க வேண்டிய கதாபாத்திரம். பொதுவாக நாம் அழுது நடிச்சு மற்றவர்களை அழவெச்சுடலாம். ஆனால் சிரிக்க வைப்பது இருக்கே அது பெரும் சவால். டைம்மிங் கொஞ்சம் மிஸ்ஸôனாலும் சொதப்பிட்டோம்னு சொல்லிடுவாங்க.
"தாமரை' பொருத்தவரை என் கேரக்டர் பேரு ராஜி. ரொம்ப மைல்டான கேரக்டர். அதனால் ரெண்டுமே ரொம்ப வித்தியாசமான கேரக்டர்.
நடிப்புத்துறையைப் பொருத்தவரை உங்கள் அப்பாவை அப்படியே பின்பற்றி வருவது உங்களில் யார்?
அப்பா பேரை முழுசா காபாற்றியது அக்கா ராதிகாதான். இப்பவும் என்னை எம்.ஆர்.ராதா பொண்ணு அல்ல ராதிகா தங்கை என்றுதான் பெரும்பாலும் சொல்கிறார்கள். நிரோஷா என்றதுமே ராதிகாவோட தங்கைதானே என்று கேட்கிறார்கள். அக்காவை போல நடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் நான் முயற்சி செய்துகிட்டுதான் இருக்கேன். இருந்தாலும் அக்கா அளவிற்கு இன்னும் நடிக்க முடியவில்லை.
"அக்னி நட்சத்திரம்', "செந்தூரப் பூவே', "சூரசம்ஹாரம்' படங்களில் உங்களுக்கு மறக்க முடியாத படம் எது?
மூன்றுமே என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத படம். காரணம், "அக்னி நட்சத்திரம்' என்னுடைய முதல் படம். படம் முடிந்து ரிலீஸ் அப்போ நான் "செந்தூரப் பூவே' படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். படம் எப்படி வந்திருக்குன்னு எல்லார் கிட்டேயும் கேட்டேன். ஆக்ஷன் படம்ன்னு சொன்னாங்க. சரி அவ்வளவுதான் போலிருக்குன்னு நினைத்தேன்.
அக்கா ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் பார்க்க தியேட்டருக்கு போயிருந்தாங்க. படம் போய்க்கிட்டு இருக்கு "ஒரு பூங்கா வனம்' பாட்டு வந்து முடிந்ததும் தியேட்டர்ல ஒரே சலசலப்பாம். என்னன்னு பார்த்தா பாட்டை ஒன்ஸ்மோர் கேட்டு போட வைச்சாங்களாம். "அது வரை எந்த படத்திலும் பாட்டுக்கு ஒன்ஸ்மோர் கேட்டது கிடையாது. ரெக்காக்ட் பிரேக்'ன்னு அக்கா சொன்னதும் எனக்கு அப்படியே ஷாக்தான்.
என்னால நம்பவே முடியலை. ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதேபோன்று படம் ரிலீஸýக்கு பிறகு ஒரு நாள் சிவாஜி சார் வீட்டுக்கு போயிருந்தோம். அவர் என்னைப் பார்த்ததும். ""என்ன நீ பார்க்க கறிவேப்பிலை மாதிரியாட்டும் இருந்துக்கிட்டு படத்துல ம்... ம்...ன்னு'' சொன்னார். அதை எல்லாம் மறக்கவே முடியாது.
அதையடுத்து என் வாழ்க்கையை திருப்பிப்போட்ட படம் என்றால் அது "செந்தூரப்பூவே' காரணம், உங்க எல்லாருக்குமே தெரிந்திருக்கும். ஆனால் செந்தூரப்பூவே படத்திற்கு முன்பே நான் ராம்கியைப் பார்த்திருக்கிறேன். நான் லண்டனிலிருந்து வந்த புதிதில் "சின்னப் பூவே மெல்ல பேசு' படத்தின் ப்ரிவீயூக்கு போயிருந்தேன். அங்கேதான் அவரை முதன் முதலில் பார்த்தேன். ஆரம்பத்தில் நாங்கள் அதிகமாக சண்டைதான் போட்டுக் கொள்வோம். ஒரு கட்டத்தில் அதுவே காதலாக மாறிவிட்டது. எங்க காதல் வீட்டில் தெரிந்தபோது எங்க அம்மா ஒத்துக்கவே இல்லை. சினிமாக்குள்ளவே திருமணம் வேண்டாம் என்று ரொம்ப எதிர்த்தாங்க. பிறகு கொஞ்சம் கொஞ்சமா எனக்கு இருந்த காதலைப் பார்த்துட்டு ஒத்துக்கிட்டாங்க.
"சூரசம்ஹாரம்' படம் கமல் சாரோட நடித்த படம். என்னை முதன்முதலில் பார்க்கும் போதே அக்காக்கிட்ட சொன்னாராம் ""இவ நல்லா வருவான்னு''. "நாயகன்' படத்தில் நடிப்பதற்கு முதலில் எனக்குதான் வாய்ப்பு வந்தது. ஆனால் ஏதோவொரு காரணத்தினால் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதனால் சூரசம்ஹாரம் படத்திற்கு நான்தான் நடிக்க வேண்டும் என்று நடிக்க வைத்தார் கமல் சார். அந்தப் படத்தில் நடிக்கும்போது அவரிடம் இருந்து எப்படி நடிக்கணுங்கிறதை நிறைய கற்றுக் கொண்டேன்.
உங்கள் சீரியல்களைப் பார்த்து விட்டு உங்கள் கணவர் என்ன சொல்லுவார்?
எங்கள் இரண்டு பேருக்கும் இடையில் எப்பவுமே ஒரு புரிதல் இருக்கும். எப்போதும் எனக்கு வழிகாட்டியாகவே இருப்பார். ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வார். என்னுடைய சீன் நல்லா வந்தா அதை உடனே பாராட்டுவார். எதையாவது மிஸ் பண்ணியிருந்தா அதையும் சொல்லுவார். இங்க இன்னும் கொஞ்சம் சரியா செய்திருக்கலாம் என்று சொல்லுவார்.
நீங்கள் அப்போது நடித்ததற்கும் இப்போது நடிப்பதற்கும் என்ன மிஸ் பண்றதா நினைக்கிறீங்க?
அப்போது இருந்த நடிகர்களுக்குள் அன்பும், பாசமும் நிறைய இருந்தது. ஒருத்தரோடு ஒருத்தர் நட்போடு இருந்தாங்க. காரணம், அப்போதெல்லாம் கோ- ஆர்ட்டிஸ்ட், மற்ற நடிகர்கள் என எல்லாரும் ஒன்னா உட்கார்ந்து இருப்போம். ஒன்னா சாப்பிடுவோம். கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் ஒன்னா பேசி அரட்டையடிப்போம். இதனால் கோ- ஸ்டாரோட பழகி பேசி புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கும். ஒரே குடும்பமா இருக்கிற உணர்வு இருந்தது. ஆனால் இப்போது அப்படியில்லை. அவரவர் ஷாட் வரும்போதுதான் ஸ்பாட்டுக்கு வராங்க. அவங்க ஷாட் முடிந்ததும் உடனே கிளம்பி கேரவனுக்கு போயிடுறாங்க. அதனால அந்த அன்பும், நட்பும் இப்போது ரொம்ப மிஸ்ஸாகுது.
நீங்கள் இவ்வளவு பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் வீட்டுக்கு தேவையானதையும், சமையலையும் செய்து வைத்து விட்டுதான் வருவீர்களாமே? எப்படி உங்களால முடியுது?
பழகிப் போச்சுங்க. காலை 7.30 - 8.00க்குள்ள வீட்டில் இருந்து நான் கிளம்பிவிடுவேன். அதனால காலை 5.30 மணிக்கெல்லாம் எழுந்து தேவையானதை எல்லாம் செய்து வைத்துவிட்டுதான் கிளம்புவேன்.