முகப்பு
மகளிர்மணி

எங்கு இருந்தாலும் தமிழ் மீடியாவுக்குள் இருப்பேன்: தியா மேனன்

சன் டிவியில் "சூப்பர் சேலஞ்ச்' மற்றும்  "கிரேஸி கண்மணி' நிகழ்ச்சிகளை கலகலப்பாகவும்,  ஜாலியாகவும் நடத்தி வருபவர் வி.ஜே. தியா மேனன்.  விரைவில் புதுமணப் பெண்ணாகவிருக்கும் இவரைச் சந்தித்தோம்:

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:30 PM
பகிர்:

சன் டிவியில் "சூப்பர் சேலஞ்ச்' மற்றும்  "கிரேஸி கண்மணி' நிகழ்ச்சிகளை கலகலப்பாகவும்,  ஜாலியாகவும் நடத்தி வருபவர் வி.ஜே. தியா மேனன்.  விரைவில் புதுமணப் பெண்ணாகவிருக்கும் இவரைச் சந்தித்தோம்:

உங்களின் பூர்வீகம்?

நான் பிறந்தது கேரளா,  வளர்ந்தது,படித்தது எல்லாம் ஊட்டி குன்னூரில், அப்பாவின் பணி காரணமாக கோயம்புத்தூரில் செட்டில் ஆனோம். அப்பாவுக்கு  மின்சார வாரியத்தில் வேலை பார்க்கிறார். அம்மா குடும்பத் தலைவி, ஒரு அக்கா. அவங்க பேஷன் டிசைனராக இருக்கிறாங்க. நான் பத்தாவது படிக்கும்போதே டிவி விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடிக்க வந்தேன்.  பிறகு படித்துக் கொண்டே பகுதி நேரமாக மீடியாவில் தொகுப்பாளினியாக இருந்து வந்தேன். மலையாளத்தில் நிறைய ஷோக்கள் தொகுத்து வழங்கியிருக்கிறேன்.  எம்.பி.ஏ முடித்திருக்கிறேன்.  கோயம்புத்தூரில் இருக்கும்போதுதான் சன் டிவி தொகுப்பாளினியாக வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை நழுவ விட மனமில்லாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டேன். தற்போது சென்னை வாசியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. 

"சூப்பர் சேலஞ்ச்', "கிரேஸி கண்மணி' நிகழ்ச்சிகள் பற்றி?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் இருந்து இரண்டு டீம்கள் கலந்து கொள்ளும் ரொம்ப கலகலப்பான நிகழ்ச்சி "சூப்பர் சேலஞ்ச்'.  அதைப் போன்றுதான்     "கிரேஸி கண்மணி' நிகழ்ச்சியும் எனக்கு ஒரு நல்லதொரு இடத்தை தந்திருக்கிறது. இப்போதெல்லாம் வெளியே எங்குச் சென்றாலும் என்னை "கண்மணி' என்றே கூப்பிடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சின்னத்திரை தொகுப்பாளினிகள் பலரும் நடிகையாகி விட்டார்கள், ஆனால் உங்களை  நடிகையாக பார்க்க முடியவில்லையே?

 ஆம், உண்மைதான். நான் சிறு வயதிலிருந்தே வி.ஜேவாக இருந்துவிட்டதால், அதுவே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது மேலும் சவுகரியமாகவும் இருக்கிறது.  ஆனால் நடிப்பு என்பது வேறு. வி.ஜே. என்பது வேறு. இரண்டையும் ஒரே நேரத்தில் செய்தால் அது எனக்கு செட்டாகாது. ஒன்றை செய்தாலும் ஒழுங்காக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால்தான் சின்னத்திரையில் நடிப்பதற்கு வரும் வாய்ப்புகளை எல்லாம் தவிர்த்து வருகிறேன். ஆனால் "மகான் கணக்கு' என்ற  ஒரு படத்தில் மட்டும் நடித்திருக்கிறேன்.  இதைத் தவிர சில டாக்குமெண்டரியில் நடித்திருக்கிறேன்.

விரைவில் திருமண பந்தத்திற்குள் நுழைய இருக்கிறீர்கள், உங்கள் வருங்கால கணவர் பற்றிச் சொல்லுங்கள்?

இந்தமாதம்தான் என் திருமணம் நடக்கவிருக்கிறது. எங்களுடையது காதல் திருமணம் தான். அவர் சிங்கப்பூர்வாசி. அங்கு கிரிக்கெட் சம்பந்தப்பட்ட ஒரு நிறுவனத்தில் அசோசியேட் மேனேஜராக இருக்கிறார். திருமணம் முடிந்ததும் கொஞ்ச நாட்கள் சிங்கப்பூரில் இருப்பேன். பிறகு அவ்வப்போது சென்னை வந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி கொடுத்துவிட்டு செல்வேன்.  சிங்கப்பூர் தமிழ் சேனல்களிலும் தொகுப்பாளினியாக வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.  அதனால் அங்கு இருந்தாலும் தமிழ் மீடியாவுக்குள்தான் இருப்பேன். அதே சமயம் எனக்கு வருங்காலத்தில்  ஏதாவது ஒரு பிசினûஸ தொடங்க வேண்டும் என்றும் ஆசையிருக்கிறது. அதற்கான முயற்சிகளும் செய்து வருகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.