கேமராவுக்கு பின்னால் இருக்கவே விருப்பம்: இயக்குநர் மேக்னா குல்சார்
பிரபல இயக்குநர் பாடலாசிரியர் குல்சார் - நடிகை ராக்கி தம்பதியரின் மகளான மேக்னா குல்சார் பல ஹிந்தி படங்களைத் தயாரித்தும் இயக்கியும் வருகிறார். அண்மையில்
பிரபல இயக்குநர் பாடலாசிரியர் குல்சார் - நடிகை ராக்கி தம்பதியரின் மகளான மேக்னா குல்சார் பல ஹிந்தி படங்களைத் தயாரித்தும் இயக்கியும் வருகிறார். அண்மையில் நாட்டையே உலுக்கிய " தால்வார்' உண்மை சம்பவத்தை படமாக்கி பெரும் பாராட்டைப் பெற்றார். அவருடன் ஒரு சிறிய சந்திப்பு:
"குல்சார் - ராக்கி' என்னும்பிரபலங்களின் மகளாக பிறந்த உங்களது குழந்தை பருவம் குறித்து?
என்னுடைய குழந்தை பருவம் மற்ற குழந்தைகளைப் போலவே சாதாரணமாகத்தான் இருந்தது. நிறைய நண்பர்கள் விளையாட வருவார்கள். ஒரு கட்டத்தில்தான் நான் பிரபலங்களின் மகள் என்பதை உணர்ந்தேன்.
தாய் - தந்தையை எப்படி சம அளவில் பகிர்ந்து கொண்டீர்கள்?
எனக்கும் அம்மாவுக்கும் நண்பர்கள் என்றால் மிகவும் பிடிக்கும். என்னுடைய அப்பா சற்று வித்தியாசமானவர். அம்மாவுக்கு ஒழுக்கம்தான் முக்கியம். என் அப்பாவிடம் எதை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளும் உரிமை எனக்கிருந்தது.
உங்கள் அம்மாவுடன் படப்பிடிப்புகளுக்கு சென்றதுண்டா?
சிறுவயதில் சென்றதாக நினைவு. எந்தெந்த படங்கள் என்பது நினைவில்லை. இருந்தாலும் படப்பிடிப்புக்கு வருவதை பெற்றோர்கள் விரும்பவில்லை. பள்ளிக்குச் செல்வது தடைபடக் கூடாது என்று நினைத்தனர்.
உங்கள் பெற்றோரிடமிருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள்?
கிரியேட்டிவிடி. சில சமயங்களில் கவிதைகள் எழுதுவதுண்டு. எதை எழுதினாலும் அதை வெளியிட வேண்டுமென்று நான் ஆசைப் பட்டதில்லை. சில நேரங்களில் மிகவும் உணர்ச்சி வயப்படும்போது என்னுடைய அப்பா சொல்வது போன்று என் குடும்பமே ரசிக்கும்படி எதையாவது படிப்பேன் அல்லது எழுதுவேன்.
நடிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏன் உங்களுக்கு தோன்றவில்லை?
கேமராவுக்கு பின்னால் இருப்பதையே விரும்புகிறேன். நடிப்பில் எனக்கு ஆர்வமில்லை. சோதனைகளில் ஈடுபட எனக்கு விருப்பம் இல்லை. கேமரா முன் நின்றால் உதறல் எடுக்கும். பார்ட்டிகளில் கலந்து கொள்வதும் பிடிக்காது. தேவையில்லாமல் என்னைப் புகைப்படங்கள் எடுப்பதையும் விரும்பவில்லை. எதையாவது நான் சாதித்திருந்தால் என்னைப் பற்றி வெளிப்படுத்திக் கொள்ளலாம்.
நீங்கள் இயக்கிய " தால்வார்' வெளியானபோது உங்கள் மனநிலை எப்படியிருந்தது?
"தால்வார்' வெளியானபோது எனக்குள் ஓர் அதிர்வு அலை இருந்தது உண்மை. அது ஒரு சவால்கள் நிறைந்த உண்மை கதை என்பதால் ஒவ்வொரு கோணத்திலிருந்தும் விமர்சனங்களை எதிர்பார்த்தேன். இதுவரைநான் இயக்கிய படங்களிலேயே இதுதான் உண்மையிலேயே பெரிய பரிசோதனை. ஒவ்வொருவரும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பினேன்.
எப்படி இந்த கதையை தேர்ந்தெடுத்தீர்கள்?
இந்த சப்ஜெக்ட் ஒரு சவாலாக இருந்தது. இதை அப்படியே விட்டுவிடவும் முடியாது. இந்த சம்பவத்திற்கான கேள்விகளுக்கு இன்னும் பதில் இல்லை. திரைக்கதையை உருவாக்குவதற்கு முன் இந்த வழக்கைப்பற்றி முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியதாயிற்று.
அதிர்ச்சியான சம்பவத்தை கொண்ட இப்படத்தை இயக்கும்போது உங்கள் மனநிலை எப்படியிருந்தது?
படத்தை இயக்கும்போது என்னுடைய உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டேன். அதை படத்தில் வெளியிட நான் விரும்பவில்லை. ஆனால் ஒரே ஒரு கேள்வி மட்டும் இன்னமும் மனதிற்குள் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. உண்மையான பாவத்தை இந்தப்படம் வெளிப்படுத்தியுள்ளது. நம்முடைய சமூகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது. பெற்றோரே தங்கள் குழந்தைகளைக் கொல்ல வேண்டிய அவசியம் என்ன? இதற்கான விடை கிடைத்தால்தான் என்னுடைய கேள்விக்கான விடையும் கிடைக்கும்.
உங்களுடைய மகனைப் பற்றி சொல்லுங்கள்: யாரிடம் அவன் ஒட்டுதலாக இருக்கிறான்?
என்னுடைய அம்மாதான் அவனை கவனித்துக் கொள்கிறார். பெரும்பாலும் அவன் தாத்தா - பாட்டியின் பண்ணை வீட்டில்தான் இருப்பான். அவர்களுக்கும் அவனிடம் பாசம் அதிகம். இது அவனுக்கு அவர்கள் அளிக்கும் அதிக செல்லம் என்றாலும் பெற்றோர்களான நாங்களும் நல்ல வழியை காட்டி வருகிறோம்.