முகப்பு
மகளிர்மணி

எல்லாம் பெண்கள் மயம்!சொல்கிறார் : பார்வதி பாமா

""கடந்த மார்ச் 8  அன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புதியதலைமுறை  தொலைக்காட்சியில் வேலை பார்க்கும்

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:53 PM
பகிர்:

""கடந்த மார்ச் 8  அன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புதியதலைமுறை  தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் பெண்கள் அனைவரையும் கௌரவிக்கும் வகையில் அன்று ஒருநாள் முழுக்க முழுக்க தொழில் நுட்பத்தில் தொடங்கி அனைத்து பிரிவுகளிலும் பெண்களே பணிபுரியும்படி செய்து பெருமை சேர்த்திருக்கின்றனர் புதியதலைமுறை தொலைக்காட்சி நிர்வாகத்தினர். இதற்கு பொறுப்பேற்று நடத்தியவர் அந்தத் தொலைக்காட்சியின் சீனியர் அவுட்-புட் எடிட்டராகப் பணிபுரிந்து வரும் பார்வதி பாமா.  எப்படி இதை அவரால் செய்ய முடிந்தது? பாமா நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:

""நான் இதழியல் படித்து முடித்ததும். "இதயம் பேசுகிறது', "பெண்ணே நீ' பத்திரிகைகளில் ஃப்ரீலேன்ஸராக வேலை செய்தேன். பின்னர், சன் டிவியில் வேலை கிடைத்து, பதினொரு ஆண்டுகள் அங்கே பணிபுரிந்தேன்.  டெக்னிக்கல், ரிப்போர்ட்டிங் துறை சார்ந்த பல்வேறு நுணுக்கங்களை எல்லாம் அங்கேதான் கற்றுக் கொண்டேன். அதன்பின்னர், புதியதலைமுறையில் வேலைக்கு சேர்ந்தேன். செய்தி பிரிவு, டெக்னிக்கல் பிரிவு, அவ்வப்போது சிறு சிறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருப்பது,  புதிய நிகழ்ச்சிகளுக்குக் கருவை  உருவாக்குவது போன்ற பணிகளில் எல்லாம் ஈடுபட்டேன். இதனால் என்னாலும் இவற்றையெல்லாம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் அதிகரித்தது. இதற்கிடையில், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களின் வலியையும், போராட்டத்தையும் "ஃபீனிக்ஸ் பறவை' என்றும், பாலியல் வன்முறைக்கு ஆளானவர்களின் போராட்டங்களை "போராளி' என்றும்,  குழந்தைகளுக்கான நல்ல கருத்துள்ள கதைகளை "கதை சொல்லி' என்றும் சில ஆவணப்படங்களையும்

தயாரித்துள்ளேன்.

தற்போது, புதிய தலைமுறையில் ஒளிபரப்பாகி வரும் "மகளிரும் - மக்கள் ஆட்சியும்' நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். பெண்களுக்கு அரசியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி இது.  இந்நிகழ்ச்சியில் சாமானிய பெண்களில் இருந்து அரசியல் சார்ந்த பெண்கள், பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் அனைவரும் அரசியலில் பெண்கள் நிலை குறித்து ஆலோசனை வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பு எங்கள் தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் எடிட்டிங், ரிப்போர்ட்டிங், கேமரா ஒர்க், தொகுப்பாளினிகள் என அத்தனை பெண் ஊழியர்களும் அவரவர்  பங்குக்கு  இந்நிகழ்ச்சிக்கு தேவையான செய்திகளை உருவாக்கி உதவி வருவதுதான்.

 இதைத்தவிர இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் "இன்றைய தினம்' என்ற நேரடி நிகழ்ச்சிக்கான கலந்தாய்வும் செய்து வருகிறேன். இந்நிகழ்ச்சியில் 1 மணி நேரத்திற்கு  ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளர் மாறிக்கொண்டே இருப்பார்கள். அதாவது ஓடுகிற ரயிலில் தொற்றிக் கொள்வது போன்று. இப்படி ஏற்கெனவே நிகழ்ச்சி தயாரிப்புகளில் இந்நிறுவனத்தில் வேலை செய்யும் நானும் பிற பெண்களும் ஈடுபட்டு பழக்கப்பட்டிருந்தார்கள்.

அதனால் மகளிர் தினத்தில் பெண்கள் அனைவரும் சேர்ந்து எங்கள் தொலைக்காட்சியின்  நிகழ்ச்சிகளை நிர்வகிக்கும்படி நிர்வாகம் கேட்டுக் கொண்டதும் அது எங்களுக்கு எளிதாக இருந்தது.   கிட்டத்தட்ட தொழில் நுட்பத்தில் தொடங்கி பல்வேறு பிரிவுகளிலும் இருக்கும் 250 ஆண்களுக்கும் மேல் செய்யக் கூடிய வேலைகளை,  25 பேரே இருக்கும் பெண்களான நாங்கள் அனைவரும் சேர்ந்து வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தோம். இதில் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றால் 2 மடங்கு அதிகப்படியான வேலை பளுவை பெண்கள் அனைவரும் பகிர்ந்து கொண்டாலும், யாரும் சோர்ந்து போகாமல் உற்சாகமாக வேலை செய்ததை மறக்கவே முடியாது'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.