மகளிர்மணி

சமையல்! சமையல்!

வெஜிடபிள் இடியாப்பம், வெஜிடபிள் கூட்டு, பார்லி பாத், வெஜிடபிள் சான்ட்விச், தினை மாவு பணியாரம், தேங்காய் அவல்

DIN

வெஜிடபிள் இடியாப்பம்

தேவையானவை: இடியாப்பம் - 5, பெரிய வெங்காயம், கேரட், குடமிளகாய் - தலா ஒன்று, பீன்ஸ் - 10, நெய் - 2 தேக்கரண்டி, கொத்துமல்லி (நறுக்கியது) - கைப்பிடி அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பெரிய வெங்காயம், பீன்ஸ், கேரட், குடமிளகாயை நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு, நறுக்கிய காய்களைப் போட்டு, உப்பு சேர்த்து வதக்கவும். இடியாப்பத்தை கொஞ்சம் வெந்நீரில் சேர்த்து, வடிகட்டி அதனுடன் வதக்கிய காய்களைப் போட்டுக் கிளறவும். நறுக்கிய கொத்துமல்லி தூவி இறக்கி குழந்தைகளுக்குக் கொடுக்கவும். 
குறிப்பு: இட்லி அரிசியை ஊற வைத்து அரைத்து மாவை மிதமான தீயில் வைத்துக் கெட்டியாகக் கிளறினால் இடியாப்ப மாவு ரெடி. இதை அச்சில் போட்டுப் பிழிந்து, ஆவியில் வேக வைத்தால் இடியாப்பம் தயார். இதனுடன் தேங்காய்ப் பால், வெல்லம் சேர்த்து இனிப்பு இடியாப்பமாகவும் கொடுக்கலாம்.

வெஜிடபிள் கூட்டு

தேவையானவை: கேரட், குடமிளகாய், செளசெள, உருளைக்கிழங்கு - தலா ஒன்று, பீன்ஸ் 10, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, தேங்காய்த் துருவல் - தலா ஒரு கிண்ணம், பச்சை மிளகாய் - ஒன்று, மிளகு- 10 , தனியா, சீரகம் - தலா ஒரு தேக்கரண்டி, கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கேரட், பீன்ஸ், குடமிளகாய், செளசெள, உருளைக்கிழங்கை நறுக்கிக் கொள்ளவும். எல்லா காய்களையும் உப்பு சேர்த்து வேக விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய்த் துருவல், மிளகு, சீரகம், தனியா, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் வறுத்து, அரைத்துக் கொள்ளவும். துவரம் பருப்பு, பாசிப்பருப்பை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். பருப்பையும், அரைத்த விழுதையும் காயுடன் சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு இறக்கவும். 
குறிப்பு: சூடான சாதத்தில் நெய் விட்டு, இந்தக் கூட்டை போட்டுப் பிசைந்து சாப்பிட்டால், தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.

பார்லி பாத்

தேவையானவை: பார்லி - 200 கிராம், வறுத்த வேர்க்கடலை - ஒரு கிண்ணம், பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி, நறுக்கிய குடமிளகாய், பெரிய வெங்காயம் - தலா 1, நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு, இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்), மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி, நெய் - 1தேக்கரண்டி, துருவிய கேரட் - ஒரு கப். கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி, எலுமிச்சம்பழம் - 1, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பார்லியை அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டவும். வாணலியில் நெய் விட்டு நறுக்கிய குடமிளகாய், வெங்காயம், இஞ்சியைச் சேர்த்து நன்கு வதக்கவும், நெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அதில் பார்லியைப் போட்டு உப்பு சேர்க்கவும். வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை, மிளகுத்தூள் போட்டு கிளறி, துருவிய கேரட்டையும் சேர்த்துக் கிளறி இறக்கவும். எலுமிச்சம்பழத்தைச் சாறு பிழிந்து சேர்க்கவும். நறுக்கிய கொத்துமல்லி தூவி, நன்றாகக் கலந்து கொடுக்கவும். 
குறிப்பு: பார்லி சிறுநீரகப் பிரச்னை வராமல் தடுக்கும்; நீர் சம்பந்தமான நோய்களை விலக்கும்.

வெஜிடபிள் சான்ட்விச்

தேவையானவை: கோதுமை பிரெட் - ஒரு பாக்கெட், கேரட் துருவல் - ஒரு கிண்ணம், பெரிய வெங்காயம், தக்காளி, குடமிளகாய் - தலா 1, இஞ்சி பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி, நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு, வெண்ணெய் - 100 கிராம், புதினா இலை - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். தக்காளி, குடமிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கேரட், வெங்காயம், குடைமிளகாய், தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். புதினாவை வதக்கி, மிக்ஸியில் அரைத்து, அதனுடன் இஞ்சி பேஸ்ட், வெண்ணெய் சேர்த்துக் குழைத்து பிரெட்டில் தடவவும். அதன்மேல் பரவலாக வதக்கிய காய்களை வைத்து, கொத்துமல்லி தூவி, மேலே ஒரு ஸ்லைஸ் பிரெட் வைத்து, டோஸ்ட்டரில் டோஸ்ட் செய்து கொடுக்கவும். 
குறிப்பு: கோதுமை பிரெட் நார்ச்சத்து உடையது. காலை, மாலை நேரத்தில் சாப்பிடக்கூடிய அருமையான டிபன் இது.

தினை மாவு பணியாரம்

தேவையானவை: தேங்காய் - அரை மூடி, நெய் - 4 தேக்கரண்டி , தினை மாவு - 200 கிராம், பொடித்த வெல்லம் - ஒரு கிண்ணம், வாழைப்பழம் - 1, ஏலக்காய்த்தூள் - ஒரு தேக்கரண்டி.
செய்முறை: தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும். தினையை வறுத்து மாவாக அரைக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, அதனுடன் தேங்காய்ப் பால், தினை மாவு, ஏலக்காய்த்தூள், வாழைப்பழம் சேர்த்து, நன்கு கெட்டியாகக் கரைக்கவும். பணியாரக்கல்லில் நெய் தடவி, ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வேக வைத்து எடுக்கவும். 
குறிப்பு: தினை மாவு ஊட்டச்சத்து மிகுந்தது. பழம் சேர்த்து மாலை நேர சிற்றுண்டியாகத் தரலாம்.

தேங்காய் அவல்

தேவையானவை: கெட்டி அவல் - கால் கிலோ, தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம், பொடித்த வெல்லம் - 1 கிண்ணம், ஏலக்காய்த் தூள் - ஒரு தேக்கரண்டி, நெய் - 1 தேக்கரண்டி.
செய்முறை: அவலை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து, ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். அதனுடன் தேங்காய்த் துருவல், பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து நன்றாகக் கலந்து கொடுக்கவும். 
குறிப்பு: காலை, மாலை நேர டிபனாக இதைக் கொடுத்தால் நீண்ட நேரம் பசி தாங்கும். வெறும் அவலில் தண்ணீர் அல்லது பால் விட்டுப் பிசறி, வெல்லம், தேங்காய் சேர்த்தும் கொடுக்கலாம். 
- கூ.முத்துலெட்சுமி ,தொண்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT