நாளமில்லாச் சுரப்பிகளில் ஒன்றான தைராய்டு சுரப்பியானது, மனிதனின் கழுத்துப் பகுதியிலுள்ளமூச்சுக்குழலுக்கு மேல் பாகத்தில் அமைந்துள்ளது. இந்தச் சுரப்பியின் மூலம் சுரக்கப்படும் இரண்டு வகையான ஹார்மோன்களான டிரைஐயோடோ தைரோனின் (T3) மற்றும் தைராக்ஸின் (T4) ஆகியவை ஐயோடின் என்ற தாதுவை அடிப்படையாகக் கொண்டதாகும். அடிப்படை வளர்ச்சிதை மாற்ற அளவீடு (BMR) திசு வளர்ச்சி, நரம்புத் திசுக்கள் ஆகியவற்றுக்கு மிகவும் முக்கியமானதாகும். ஆரோக்கிய நிலையில் இருக்கும் தைராய்டு சுரப்பியானது, தோராயமாக 80% T4 யும் 20% T3 யையும் சுரக்கிறது. இந்தச் சுரப்பி சிறிதளவு கால்சிடோசின் என்னும் ஹார்மோனையும் சுரக்கிறது.
தைராய்டு ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் வேறுபாடுகள் மற்றும் சுரப்பியில் வரும் பிரச்னைகளால் முன் கழுத்துக் கழலை, அதிகமான தைராய்டு சுரப்பு மற்றும் குறைவான தைராய்டு சுரப்பு போன்றவை ஏற்படுகின்றன. இந்தியாவில் மட்டும் சுமார் 4.2 கோடி மக்கள் தைராய்டு சுரப்பி தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வருகிறது. தைராய்டு சுரப்பியில் ஏற்படும் நோய்களுள் தற்போது பரவலாகக் காணப்படுவது தைராய்டு சுரப்பு குறைபாடு நிலைதான். தைராய்டு சுரப்பு குறைபாடு இரண்டு நிலைகளில் ஏற்படுகிறது. முதல் நிலை தைராய்டு சுரப்பியின் செயலிழப்பால் ஏற்படுவது, இரண்டாம் நிலை பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் தைராய்டு சுரப்பு இயக்குநீர் (TSH) பற்றாக்குறையால் ஏற்படுவது.
ஐயோடின் குறைபாட்டாலேயே தைராய்டு சுரப்பு குறைபாடு ஏற்படுகிறது என்று நாம் கூறிய போதும், 1983-ஆம் ஆண்டில், ஐயோடின் உப்பு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு மக்களால் உபயோகப்படுத்தப்பட்டு வந்தபிறகும், இந்நிலை நீடிப்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். இதற்குக் காரணம், ஐயோடின் ஊட்டத்தால் ஏற்படும் தன்னெதிர்ப்பானது (Autoimmunity) தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை பாதிப்பதால் என்றும், ஐயோடின் ஊட்டத்தால் வீரியம் அதிகரிப்பதால் ஏற்படும் தன்னெதிர்ப்பு நோயினால் என்றும், நாளமில்லா சுரப்பியியல் துறை மருத்துவர்களும், ஆய்வுத்துறை வல்லுநர்களும் கூறுகின்றனர்.
இவைமட்டுமல்லாமல், போதுமான உடற்பயிற்சியற்ற வாழ்வியல் முறைகள், தைராய்டு நோய்களை ஊக்குவிக்கும் வேதிப்பொருட்களையும் உணவுகளையும் (Goitrogens) உட்கொள்ளுதல்; ரிசார்சினால் மற்றும் தாலிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்கள் கலந்த தொழிற்சாலைக் கழிவுகளால் மாசடையும் குடிநீர், பூச்சிக்கொல்லிகளால் பாதிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் போன்றவையும் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டினைத் தாக்குகிறது என்றும் கூறுகின்றனர்.
ஆண்களைவிட பெண்களையே தைராய்டு சுரப்பு குறைபாடு அதிகம் தாக்குகிறது என்றும், துவக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிடில், இதயம் சார்ந்த நோய்கள், எலும்புத் தேய்மான நோய் மற்றும் குழந்தையின்மை போன்றவைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. இது தவிர, கர்ப்ப காலத்தில் ஏற்படும் தைராய்டு சுரப்பு குறைவு நிலையை கண்டறியாமலும் அல்லது முழுமையான சிகிச்சை அளிக்காமலும் இருந்தால், கருச்சிதைவு, குறை பிரசவம், தீவிர வளர்ச்சிக் குறைபாடுகள் போன்றவை ஏற்படும் அபாயமும் இருக்கிறது.
தைராய்டு குறைபாடு (Hypothyroidism) நிலையானது, உணவு முறையிலும், அன்றாட பழக்கவழக்கங்களிலும் சில மாறுதல்களை ஏற்படுத்துவதன் மூலம் கட்டுப்பாட்டிற்குள் வைக்கக் கூடியதாகும். மேலும், உடற்பயிற்சி, கழுத்து பயிற்சி, சுவாசப்பயிற்சி, உடல் மற்றும் கழுத்து பகுதியில் இதமான அழுத்தம் அல்லது பிடித்து விடுதல் (மசாஜ்) ஆகிய முறைகளை கடைபிடிப்பதால் முற்றிலும் தீர்க்கப்படலாம். தைராய்டு சுரப்பியைத் தூண்டுவதன்மூலம், தைராய்டு சுரப்பை சமன் செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு உதவும் தேவையான சத்துகள் நிறைந்த உணவுகளைத் தொடர்ந்து உட்கொள்வதால் இந்நிலையிலிருந்து மீண்டு வரலாம். தைராய்டு குறைபாடு தீர்க்க உதவும் முக்கிய சத்துகள்:
அயோடின் - தைராய்டு சுரப்பி ஹார்மோன்களான டிரைஐயோடோ தைரோனின் (T3) மற்றும் தைராக்ஸின் (ப4) ஆகிய வற்றில் அயோடின் பிரதானமாகக் காணப்படுவதால், இந்த சத்தின் குறைபாடு எளிதில் தைராய்டு சுரப்பில் சிக்கலைக் கொடுக்கிறது. ஆகவே, இந்த அயோடின் சத்து நிறைந்த உணவுளான பாலாடைக்கட்டி, முட்டை, கடல்பாசிகள், கடல் மெல்லுடலிகள், அயோடின் சேர்க்கப்பட்ட உப்பு போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது உடலிலுள்ள அயோடின் அளவை பரிசோதித்துக் கொள்வதும், குறிப்பிட்ட அளவைக் கடந்து போகாமல் இருப்பதற்கு உதவிசெய்யும்.
செலினியம் - நோய்த்தடுப்பாற்றலையும், அறிவுத்திறன் சார்ந்த செயல்பாடுகளையும், ஆண், பெண் என்று இருபாலினத்தவரின் இனப்பெருக்க மண்டலத்தின் சீரான செயல்பாடுகளையும் சரியான முறையில் எடுத்துச்செல்லும் மிக முக்கியமான வேலையை இந்த சத்து செய்கிறது. தைராய்டு சுரப்பியில் செலினியம் சத்தும் செறிவாக இருப்பதால், செலினியம் குறை பாடும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. இதை நிவர்த்தி செய்வதற்கு, முளைகட்டிய கோதுமை, ஈஸ்ட், வால்நட், கொட்டை உணவுகள், மீன்கள், பசலைக்கீரை, முட்டை போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வைட்டமின் B 12 – தைராய்டு குறைபாடு நிலை இருப்பவர்களுள் சுமார் 30 சதவிகிதத்தினர் வைட்டமின் B 12 குறைபாட்டுடனும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கடல் சிறு மீன்கள், கடல்வாழ் மெல்லுடலிகள், ஆட்டு ஈரல், பால் பொருட்களில் வைட்டமின் B 12 சத்து நிறைந்துள்ளதால், தைராய்டு குறைபாட்டினால் ஏற்படும் ரத்தசோகையும் தடுக்கப்படுகிறது.
துத்தநாகம் - தைராய்டு ஹார்மோனான T4 யை T3 யாக மாற்றக்கூடிய முக்கிய வேலையை துத்தநாகம் (Zinc) செய்வதால், இந்த சத்து நிறைவாக உள்ள மீன், மெல்லுடலிகள், ஆட்டிறைச்சி, பருப்புகள் மற்றும் முந்திரி, பாதாம், வால்நட், பிஸ்தா போன்ற கொட்டையுணவுகளை உண்ண வேண்டும்.
டைரோசின் - தைராய்டு சுரப்பியானது, புரத உணவுகளிலிருந்து பெறப்படும் டைரோசின் என்னும் அமினோ அமிலத்தையும், ஐயோடினையும் இணைத்தே தைராக்ஸின் ஹார்மோனைக் கொடுக்கிறது. எனவே, புரதச்சத்து குறைபாடும் தைராய்டு குறைபாட்டு நிலையில் காணப்படுவதால், புரத உணவுகளான இறைச்சி, மீன், பால் பொருட்கள், பீன்ஸ், கொட்டையுணவுகள், முழு தானியங்கள் போன்றவற்றை தொடர்ச்சியாக உணவில் சேர்க்க வேண்டும்.
வைட்டமின் சி தைராய்டு சுரப்பிக்கும், ரத்தத்திலும் ஐயோடினை எடுத்துச்செல்லும் கருவியாகவும் சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டாகவும் செயல்படுகிறது. எனவே, வைட்டமின் சி அதிகமுள்ள உணவுகளான நெல்லிக்காய், பப்பாளி, எலுமிச்சை, மிளகாய், கொய்யாப்பழம், ஆரஞ்சு நிற பழங்கள், கீரைகள், தக்காளி, பெர்ரி வகை பழங்கள் ஆகியவை மேலும் நன்மையளிப்பவை.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் - தைராய்டு குறைபாடு நோயினால் ஏற்படும் அழற்சியை குறைத்து, மேலும் நோய் தீவிரமாகாமல் தடுப்பதால், கடல் உணவுகள், மீன் எண்ணெய், கொட்டை உணவுகள், ஆலிவ் எண்ணெய், வெண்ணெய், சீஸ், முட்டை போன்றவற்றை தினமும் தவறாமல் உண்ண வேண்டும்.
தைராய்டு குறைபாடு நோய் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்
தோல் நீக்கப்படாத, பளபளப்பு ஏற்றப்படாத முழு தானியங்கள்.
வெங்காயம், பீன்ஸ், அவரை, கொத்தவரை, கத்தரிக்காய் பிஞ்சு, வெண்டைக்காய் மற்றும் பிற பந்தல் வகை காய்கள்.
நெல்லிக்காய், கொய்யா, செர்ரிபழம், பெர்ரி வகை பழங்கள், தக்காளி, குடைமிளகாய், மிளகாய் போன்ற வைட்டமின் இ சத்து நிறைந்த உணவுகள் பால் பொருட்களான கொழுப்பு நீக்கிய பால், பாலாடைக்கட்டி, கொதிக்க வைத்த பால் மற்றும் நெய் ஐயோடின் சேர்த்த உப்பு, மீன், நண்டு, இறால், கருவாடு போன்ற கடல் உணவுகள் தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி சிறிதளவு கொம்பு மஞ்சள், மிளகு, சீரகம், பூண்டு போன்ற மசாலா பொருட்கள்
தவிர்க்கவேண்டிய உணவுகள்
சோயாபீன்ஸ் மற்றும் அது சார்ந்த பொருட்கள்.
மரவள்ளி, சர்க்கரைவள்ளி, முட்டைகோஸ், புரோக்கோலி, காலிபிளவர், பசலை, முள்ளங்கி, டர்னிப், மணிலாபயறு போன்ற வை கழலை நோய்க்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும் உணவுகள்.
சிறுதானியங்களை அடிக்கடி பயன்படுத்துபவர்கள், நன்றாக சமைத்த பிறகு அல்லது ஊறவைத்தல், முளைகட்டுதல் போன்ற செயல்கள் மூலமாக அதிலிருக்கும் பாலிபினால்கள், பிற எதிர்சத்துகள் அழிந்த பிறகு உணவில் சேர்க்க வேண்டும்.
கடுகு அதிகம் சேர்த்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
ஆடு மற்றும் மாட்டிறைச்சி, ஊக்கமருந்து கொடுக்கப்பட்ட அசைவ உணவுகள், வெண்ணெய், காபி மூங்கில் உணவுகள், அதிக பூச்சிக்கொல்லி பயன்படுத்தி வளர்க்கப்பட்ட தாவர உணவுகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகள்.
- முனைவர். ப. வண்டார்குழலி இராஜசேகர் ஊட்டச்சத்து நிபுணர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.