கரோனா பாதிப்பால் அனைத்துத் தரப்பினரும் வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு சிலர் மட்டும் முடங்கிக் கிடக்காமல் தங்களின் திறமையை வெளிப்படுத்தும் சூழலாக மாற்றிக் கொண்டும் உள்ளனர். ஒரு சிலர் இதையே வணிகமாக்கி வருவாயும் ஈட்டி வருகின்றனர்.
அதுபோன்று, சிறுதானிய உணவு வகைகள், கீரை மற்றும் பயறு வகைகள் உள்ளிட்ட பாரம்பரிய உணவுகளை நோக்கி நம்மை கரோனா திரும்பிப் பார்க்க வைத்திருப்பது உண்மை.
இந்நிலையில், வீட்டில் தயாரிக்கப்படும் தரமான தின்பண்டங்களுக்கு தற்போது மவுசு ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி, சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பிச் சாப்பிடும் வீட்டு முறையிலான தின்பண்டங்களைத் தயாரித்து அதன்மூலம் பொதுமுடக்கக் காலத்தில் வருவாயைப் பெருக்கியுள்ளார், சேலம், அழகாபுரம், நகரமலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்த எம்.பி.ஏ. முடித்துள்ள எஸ்.மதுமதி (31) அவர் கூறியதாவது:
""எனக்கு கேக் வகைகளை ருசித்துச் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். இதனால் கேக் தயாரிப்புப் பயிற்சிகளில் கைதேர்ந்து, வீட்டிலேயே தயாரித்து வந்தேன். பின்னர் நண்பர்கள், உறவினர்கள் வட்டத்தில் பிறந்தநாள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஆர்டரின் பேரில் கேக் தயாரித்து வழங்கி வந்தேன். வீட்டில் தயாரிக்கப்படும் தின்பண்டங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
அதேபோல சாக்லேட் வகைகள், பிஸ்கெட், கேக் ஆகியவற்றை "வர்சிஷ் கிச்சன்' என்ற பெயரில் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன்.
நான் தயாரிக்கும் தின்பண்டங்களில் மைதா பொருட்களைத் தவிர்க்கிறேன். கோதுமை மட்டுமே சேர்த்து பிஸ்கட்களைத் தயாரிக்கிறேன். டீ கேக், கப் கேக், பிரவுனி, வாழைப்பழ கேக் ஆகியவற்றையும் தயாரிக்கிறேன்.
மேலும் பதப்படுத்தப்பட்ட எந்தப் பொருளையும் சேர்க்காமல் இயற்கை முறையிலான நாட்டுச் சர்க்கரை, வெண்ணெய் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டே தின்பண்டங்களை தயாரிக்கிறேன்.
எனது கணவர் கார்த்திக், பொது முடக்கக் காலத்தில் நான் தயாரிக்கும் தின்பண்டங்களை நண்பர்களோடு சேர்ந்து வீடுகளுக்கு டெலிவரி செய்து வருகிறார். சாக்லேட், அசார்டட் சாக்லேட் வகைகளை டின்களில் நிரப்பி விற்பனை செய்கிறேன். இதன்மூலம் சாக்லேட்டை அவ்வப்போது எடுத்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் டின்களில் பத்திரமாக வைக்க முடியும்.
இதுதவிர சில இணையவழி வணிக நிறுவனத்தினருடன் கூட்டு சேர்ந்து வீட்டு முறைப்படி தயாரிக்கப்படும் தின்பண்டங்களைத் தயாரித்து வழங்கி வருகிறேன்.
தீநுண்மி காலத்தில் அதிகபட்சமாக ரூ. 35 ஆயிரம் வரை தின்பண்டங்களை விற்பனை செய்துள்ளேன். தற்போது கடைகள் அனைத்தும் திறக்கப்பட்ட நிலையிலும், வீட்டு முறையில் தயாரிக்கப்படும் தின்பண்டங்களுக்கான தேவை நிறையவே உள்ளது'' என்றார்.
படங்கள்: வே.சக்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.