ஜிமி ஜான் ... ஸூமி ஜான். வயநாடு மாவட்டத்தில் "பல்பல்லி' என்னும் பசுமை போர்த்தியகிராமத்தில் வசிக்கும் அக்கா - தங்கை. அவர்களது அப்பா ஜான். அம்மா மேரி.
"நான் ஸூமியைவிட மூன்று வயது மூத்தவள். ஆறு வயது வரை சாதாரண குழந்தைகள் போல ஓடி ஆடி துள்ளி விளையாடிக் கொண்டிருந்தேன். ஆறாம் வயதில் காலடி எடுத்து வைத்த போதுதான் விதி சதி செய்தது. திடீரென்று என் கால்கள் குளிரில் நடுங்குவது போன்று நடுங்கியது. நடக்கும்போது கால்கள் இடறத் தொடங்கின. நான் சுதாரித்துக் கொண்டாலும், "அணிந்திருக்கும் செருப்பு காரணமாக இடறியிருக்கலாம்' என பெற்றோர் கருதினார்கள். ஆனால் வீட்டுக்குள் நடக்கும் போதும் நான் இடறி கீழே விழத் தொடங்கினேன். "வீட்டில் தரையில் தண்ணீர் ஏதும் சிந்தியுள்ளதா' என்று கை கொண்டு தடவிப் பார்த்தபோது தரையில் தண்ணீர் திவலைகள் ஏதும் இல்லை.
"எனது இடறலுக்கு என்ன காரணமாக இருக்கும்' என்று பெற்றோர் உள்ளுக்குள் குமையத் தொடங்கினர்.
சிறிது நாளில் என்னால் எழுந்து நிற்க முடியவில்லை. கால்கள் பலமிழந்து தளர்ந்து போயின. மருத்துவரிடம் என்னைத் தூக்கிக் கொண்டு பெற்றோர் ஓடினர். விரிவான சோதனைகளை டாக்டர் நடத்தினார்.
முடிவில் "தசைகளை பலம் இழக்கச் செய்யும் "மஸ்குலர் டிஸ்ட்ரோஃபி (ஙன்ள்ஸ்ரீன்ப்ஹழ் ஈஹ்ள்ற்ழ்ர்ல்ட்ஹ்) என்ற அபூர்வ மரபணு நோயின் தாக்கம் ஏற்பட்டுள்ளது' என்றார். இதற்கு மருந்து மாத்திரை உடல் பயிற்சி எதுவும் பலன் தராது.. நோயின் காரணமாக உடல் தசைகள் எப்போதும் சோர்வாக தளர்ந்த நிலையில் இருக்கும். வாழ்நாள் முழுவதும் ஜிமி சக்கர நாற்காலியில் இருக்க வேண்டி வரும்...' என்று டாக்டர் சொல்ல , அப்பா அம்மாவின் இதயங்கள் சுக்கு நூறாக நொறுங்கியது. எனக்கு ஒன்றும் புரியவில்லை... ஆனால் ஏதோ ஆபத்தான நோய் எனக்கு வந்துள்ளது என்று மட்டும் புரிந்தது..' என்று ஜிமி தொடங்கினார்.
""நான் பெண்ணாகிப் போனதால் எனது எதிர்காலம் பெற்றோர்களைப் பயமுறுத்தியது. அப்போது மூன்று வயதில் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்த தங்கை ஸூமி யைப் பார்த்து கொஞ்சம் ஆசுவாசம் கொண்டனர். நானும் ஸூமியைப் பார்த்து "நானும் இப்படித்தானே துள்ளித் திருந்து கொண்டிருந்தேன்.. இப்போது வீல் சேரில் சிறகு ஒடிந்த பறவையாக கிடக்கிறேனே' என்று சின்ன வயதிலேயே துடிக்கத் தொடங்கினேன்.
"நோய் என்னைத் தளரச் செய்தாலும் பெற்றோரின் மனம் தளரவில்லை. எனக்கு வலது கால் இடது காலாக மாறினர். தைரியம் கொடுத்தனர். என்னைப் பள்ளியில் சேர்த்தாலும் நான் வகுப்பிற்குப் போகவில்லை. வகுப்பிற்கு நான் போகாமல் இருக்க ஸ்பெஷல் அனுமதியை எனது பெற்றோர் கேட்டுப் பெற்றனர். அம்மா எனக்கு வீட்டில் ஆசிரியர் ஆனார். தேர்வுகளுக்கு மட்டும் அப்பா என்னைப் பள்ளிக்குத் தோளில் கையில் சுமந்து சென்றார். நான் மூன்றாம் வகுப்பில் படிக்கும் போது இன்னொரு இடி விழுந்தது. நான் ஆறாம் வயதில் கால் எடுத்து வைத்ததுமே ஸூமியையும் "மஸ்குலர் டிஸ்ட்ரோஃபி' நோய் தாக்க.... ஸூமியும் வீல் சேரில் முடங்கிப் போனாள். பெற்றோருக்கு சுமை இரட்டை ஆகி இறுக்கியது.
இரண்டு பேருக்கும் பாடம் சொல்லிக் கொடுப்பதில் ஆசிரியர்கள் மது, சோமன், பீனுவின் ஒத்துழைப்பு மிகப் பெரியது. வீட்டுக்கு வந்து பாடங்களைப் போதித்தனர். லேப் டாப் கம்ப்யூட்டரும் வாங்கிக் கொடுத்தாங்க. நான் பத்தாம் வகுப்பில் சராசரி 90 மதிப்பெண்கள் வாங்கி 2007- இல் தேர்வாகி எனது "குரு'க்களின் உதவிகளுக்கு நன்றி செலுத்தினேன்.
அடுத்தது பிளஸ் டூ தேர்வு, அதிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றேன். ஆனால் கல்லூரியில் எனது உடல்நிலையைப் பார்த்து கூட இடம் தரவில்லை. சரித்திரத்தில் பட்டப்படிப்பை அஞ்சல் வழியாகத் தொடர்ந்தேன். அந்த மூன்று ஆண்டுகளில் ஸூமியும் பிளஸ் டூ பாஸாகவே... நாங்கள் இருவரும் கல்லூரியில் சேர முயற்சித்தோம். ஆனால் எந்தக் கல்லூரியும் எங்களை சேர்த்துக் கொள்ளவில்லை. அப்போதுதான் கோழிக்கோடைச் சேர்ந்த தொழிலதிபர் "தோட்டத்தில்' ரஷீத். கோழிக்கோட்டில் இயங்கும் "ஒஈப இஸ்லாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி'யில் எங்களுக்கு மல்டி மீடியா பட்டப்படிப்பில் சீட் பெற்றுத் தந்து கல்விச் செலவுகளையும் ஏற்றுக் கொண்டார். இரண்டு மகள்களை கல்லூரி விடுதியில் வைத்துக் கவனித்துக் கொள்ள அம்மா தேவை என்ற நிலைமையைப் புரிந்து கொண்டு அம்மா எங்களுடன் தங்கி எங்களையும் மற்ற மாணவிகளையும் கவனித்துக் கொள்ள எனது அம்மாவுக்கும் கல்லூரி ஹாஸ்டலில் "வார்டன்' வேலையைக் கல்லூரி நிர்வாகம் வழங்கியது.
பட்டப்படிப்பில், நான் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் முதல் மாணவியாகத் தேர்வு பெற்றேன். முதுகலை பட்டப்படிப்பிலும் உயர்ந்த மதிப்பெண்களுடன் நானும் ஸூமியும் தேர்வு பெற.. அந்தக் கல்லூரியிலேயே மல்டிமீடியா துறை யில் விரிவுரையாளர்களாக வேலையும் போட்டுக் கொடுத்தார்கள். படிக்கும்போது நாங்கள் பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டு காட்சிப் படங்களையும். ஒரு ஆவணப்படம் ஒன்றையும் தயாரித்தோம். எனது கதையை 9.45 நிமிட குறும்படமாக தயாரித்தேன். "ஸூமி பிக் ஒன்' என்ற குறும்படத்தையும் தயாரித்துள்ளேன். சர்வதேச மல்டிமீடியா ஆய்வு இதழான "கான்சயின்டியா பீம்' (இஞசநஇஐஉசபஐஅ ஆஉஅங) மில் எனது ஆய்வுக் கட்டுரை பிரசுரமாகியுள்ளது'' என்றார்.
வாழ்க்கை முழுவதும் நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடக்க விதி வலை பின்ன, மாற்றுத்திறனாளிகளான ஜிமி - ஸூமி வாழ்க்கையின் ஒவ்வொரு சவால்களை எதிர் கொண்டு சாதித்தும் காட்டியுள்ளனர். "இந்த உயரங்களைத் தொட பங்களிப்பு செய்திருக்கும் பெற்றோருக்கு வயது ஆகிறது' என்பதுதான் ஜிமி - ஸூமியை அலைக்கழிக்கும் கவலை.
""பெற்றோருக்குப் பின் எங்களை யார் கவனித்துக் கொள்வார்கள்' என்ற அச்சம்தான் எங்களை வாட்டி வதைக்கிறது. அரசுப் பணி கிடைத்தால் எதிர்காலத்திற்கு பொருளாதார ரீதியாக கை கொடுக்கும் என்பதால் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க தீர்மானித்து இருக்கிறோம்...'' என்கிறார்கள் சகோதரிகளான ஜிமியும் - ஸூமியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.