தலைமை பண்பு ஒரு நாள் பொழுது... மனம் திறக்கும் கிரண்பேடி
பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்பது போன்று கிரண்பேடி யார் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை.
பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்பது போன்று கிரண்பேடி யார் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ் அதிகாரி, டென்னிஸ் வீராங்கனை, சமூக சேவகி, அரசியல்வாதி, துணை நிலை ஆளுநர் என பல முகங்களுக்குச் சொந்தக்காரர்.
கிரண்பேடி தனது ஒரு நாள் பொழுதில் செய்யும் விஷயங்கள் என்ன என்பதைப் புத்துணர்ச்சியுடன் மனம் திறக்கிறார்:
""இயற்கை ஒவ்வொரு நாளும் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்வது போன்று நாமும் நம்மை அன்றாடம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இது போன்ற விஷயங்களை என் மனதில் விதைத்தவர்கள் என்னுடைய பெற்றோர். கல்வியில் நான் சிறந்து விளங்க காரணம் அம்மா. ஆசிய பெண்கள் டென்னிஸ் போட்டி வரை வெற்றி பெற காரணமானவர் அப்பா.
Advertisement
காலை 5 மணிக்கு எழுந்து விடுவேன். முதலில் நான் ஆன் செய்வது என்னுடைய ரேடியோவை. அதில் ஒலிபரப்பப்படும் புத்துணர்ச்சியான இசையைக் கேட்டபடியே வழக்கமான வேலைகளை முடித்துவிட்டு உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்துவிடுவேன். உடற்பயிற்சியின் போதே சமூக வலைத்தளங்களில் ( இன்ஸ்டகிராம், முகநூல், வாட்ஸ் அப்) போன்றவற்றில் அன்றைய கருத்தை பதிவிடுவேன். அது உடல்நலம், மனநலம், இயற்கை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கும். கண்டிப்பாக அது மற்றவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
காலை 8.30 வரை உடல் நலத்திற்கான அத்தனை விஷயங்களைச் செய்து முடித்தவுடன், சிற்றுண்டி தயாராக இருக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் சரியாக 10 மணிக்கு அலுவலகம் சென்று விடுவேன். புதுச்சேரி மக்களின் தேவைகள் என்ன? செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் என்ன? புதுப் பாலிசிகள் என்னென்ன கொண்டு வரலாம் என்பன போன்ற விஷயங்களை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிப்பேன். இடையில் சூப் சாப்பிடுவேன். 3 மணி வரை கூட இந்தப் பணிகள் நீளும்.
அலுவலகத்திலிருந்து வீடு திரும்பி சிறிது ஓய்வு எடுத்துவிட்டு மாலை சரியாக 5 மணிக்கு என்னுடைய அலுவலகம் சென்று விடுவேன். நான் புதுச்சேரிக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டது. நான் ஆளுநராக வந்ததும் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தான் open house. அதாவது மக்கள் தினமும் என்னை நேரடியாகச் சந்திக்கலாம். சந்திக்க வருபவர்களுக்கு முதலில் தேநீர் வழங்கப்படும். அன்றாடம் நூறு பேர் வருகிறார்கள். அதில் குறைந்தது 40 நபர்களின் பிரச்னைகளை உடனே என்னுடைய உதவியாளர்களிடம் சொல்லி நிவர்த்திச் செய்கிறேன். இந்தப் பணி முடிய 7 மணி ஆகிவிடும். அதனைத் தொடர்ந்து மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவருடன் முக்கிய ஆலோசனைகளை நடத்துவேன். இரவு 9 மணிக்கு சாப்பிட்டு முடித்ததும் அன்றைய செய்திகளை டி.வியில் பார்த்து தெரிந்து கொள்வேன்.
நான் சேகரித்து வைத்த இசைத் தொகுப்புகள் உள்ளன. அவற்றைக் கேட்பதுண்டு. குறிப்பாகப் பயணங்களின் போது நான் விரும்பும் புத்தகங்களை எடுத்துச் சென்று படிப்பதுண்டு. நேரம் இருந்தால் "நெட்பிளிக்ஸ்' பார்க்கும் பழக்கமும் உண்டு.
படிப்பு, விளையாட்டு இரண்டும் என்னுடைய இரண்டு கண்கள். என்னுடைய குடும்பம் ஒழுக்கமானது. குறிப்பிட்ட நேரத்தில் அந்தந்த வேலைகளைச் செய்து முடிக்க வேண்டும் என்பதை சிறு வயதில் இருந்தே அப்பா, அம்மா எனக்கு சொல்லி வளர்த்தார்கள். முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியான நான் தில்லி, கோவா, மிசோரம் மாநிலங்களில் பணியாற்றிய அனுபவம் உண்டு. குறிப்பாக தில்லி திகார் சிறையில் பல்வேறு சீர்திருந்தங்களைக் கொண்டு வந்தேன்.
புதுச்சேரியில் ஆளுநராகப் பொறுப்பேற்ற பின்பு, காலாப்பட்டு சிறையில் ஆய்வு மேற்கொண்டு சீர்திருத்தங்களை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். கைதிகளுக்கு யோகா, தியானம், கல்வி கற்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். சிறையில் இருந்து வெளியே செல்லும்போது, வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில், தொழில் பயிற்சி அளிக்கவும் வலியுறுத்தினேன்.
காவல் அதிகாரி என்பவர் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அதை நான் இன்று வரை கடைபிடிக்கிறேன். போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் போது காலை 8 மணிக்கு என்னுடைய பணியைத் தொடங்கிவிடுவேன். சிறைச்சாலையில் காலை 9 மணிக்கு ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்து விடுவேன்'' என்கிறார் கிரண் பேடி.
கரோனாவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
""கரோனா பாதிப்பு அதிவேகமாகப் பரவுவதற்குத் தனிநபர் பழக்க வழக்கமே முக்கியக்காரணம். நான் பார்க்கும் பலரும் கைக்குட்டையை முகக்கவசமாக பயன்படுத்துகின்றனர். கைக்குட்டை முகக்கவசமாகாது. பொது இடத்தில் முகக்கவசம் அணியாமல் இருப்பது மிகப்பெரிய தவறு. எனவே, வெளியில் செல்லும்போது நாம் கட்டாயமாக முகக்கவசத்தை பயன்படுத்த வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். வெளியில் சென்று திரும்பிய உடன் கை, கால்களை சோப்பு போட்டுக் கழுவி சுத்தமாக இருப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். நமது ஒன்றிணைந்த முயற்சிகளால்தான் கரோனா பரவலை தடுக்க முடியும்.''
சுறுசுறுப்பான சைக்கிள் பயணம்
கிரண் பேடி வார இறுதி நாள்களான சனிக்கிழமை மாணவர்களுடன் சேர்ந்து சைக்கிளில் தூய்மை பிரசாரத்தை மேற்கொள்கிறார். ஞாயிற்றுக் கிழமைகளில் ஏரி, குளம், வாய்க்கால்களை சுத்தம் செய்யும் பணியைச் செய்கிறார். சைக்கிள் பயணம் பற்றி கேட்டால்: ""சைக்கிள் பயணத்தின் நோக்கம் புதுச்சேரியை தூய்மையாக வைத்திருப்பது, அதில் மாணவர்களையும், மக்களையும் பங்கேற்கச் செய்வதும் தான். இப்பேரணியில் பங்கேற்பதன் மூலம் மாணவர்கள், தங்கள் வீடுகளையும், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளையும் தூய்மையாக வைத்திருக்க முயற்சி செய்வார்கள்'' என்கிறார்.