முகப்பு
மகளிர்மணி

கதம்பம்!

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவைச் சேர்ந்த மார்கரேட் என்பவருக்கு 68 வயதாகிறது. 1974-ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது. இவரது கணவர் பெயர் நோவா அடெங்குவா.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

அதிக வயதில் குழந்தை பெற்ற பெண்!


ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவைச் சேர்ந்த மார்கரேட் என்பவருக்கு 68 வயதாகிறது. 1974-ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது. இவரது கணவர் பெயர் நோவா அடெங்குவா. இவருக்கு 77 வயதாகிறது. இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது.

நைஜீரியாவில் உள்ள பிரபலமான மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், எந்தப் பயனும் இல்லை. இதையெடுத்து, சோதனை குழாய் நடைமுறை மூலம் குழந்தை பெற முயற்சித்தனர் மூன்று முறை முயற்சித்தும், தோல்விதான் கிடைத்தது. இந்நிலையில், லாகோஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த சில ஆண்டுகளாக, சோதனைக் குழாய் நடைமுறை வாயிலாக, மார்கரேட் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து, சமீபத்தில் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. இதில் ஒரு குழந்தை ஆண், மற்றொன்று பெண் குழந்தை.

இது குறித்து மார்க்ரேட் கூறியதாவது:

""எனக்கு 68 வயதானாலும் குழந்தை பெற்றுக் கொள்வதில் உறுதியாக இருந்தேன். இதற்காக பல லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளேன். இறுதியில், கடவுள் கண்ணைத் திறந்துவிட்டார். பாட்டி வயதில் இருக்கும் நான் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்'' என்றார். இதன்மூலம், ஆப்பிரிக்க நாடுகளில் மிக அதிகமான வயதில் குழந்தை பெற்றுக் கொண்ட பெண் என்ற பெருமை மார்க்ரேட்டுக்கு கிடைத்துள்ளது.

- கோட்டாறு. ஆ.கோலப்பன்


சென்னப்பட்ணா பொம்மைகள்!


கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் சென்னப்பட்ணா பகுதி மர பொம்மைகள் மிகவும் பிரபலம். 200 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு பொம்மைகள் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. திப்புசுல்தான், பெர்சியாவிலிருந்து பொம்மை கலைஞர்களை வரவழைத்து இவர்களுக்கு பயிற்சி அளித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த மரபொம்மை தொழிலுக்கு தந்தை என அழைக்கப்படுபவர் பாவால்மியான். இவர் ஜப்பானிய தொழில் நுட்பத்தை தான் கற்று, இங்கு உள்ளவர்களுக்கும் பயிற்றுவித்தார். அத்துடன் இந்த பொம்மைகளுக்காகவே வாழ்ந்தவர்.

இந்த பொம்மைகளுக்கு புவியியல் அடையாளம் (எஐ) கிடைத்துள்ளது. வெப்பாலை மரத்தில் முதலில் செய்து வந்தனர். ஆனால், தற்போது ரப்பர், சைக்கோமோர், சிடார், பைன் மற்றும் தேக்கு மரங்களிலும் செய்கின்றனர்.

இந்த பொம்மைகளை குழந்தைகள் அதிகம் பயன்படுத்துவதால், காய்கறி சாயங்களையே இதற்குப் பயன்படுத்துகின்றனர், கர்நாடக அரசு, தன்னுடைய கைவினைப் பொருள்கள் மேம்பாட்டு கழகத்தின் மூலம், இந்த பொம்மைகளை மார்க்கெட்டிங் செய்து உதவுகிறது. குடிசைத் தொழிலாக இன்றும் சுமார் 250-க்கும் அதிகமான வீடுகளில், 50-க்கும் அதிகமான சிறு தொழிலகங்கள் மூலம், 6 ஆயிரம் நபர்களால், பொம்மைகள் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.

சந்தனம்... செம்மரத்திலும் இந்த பொம்மைகள் செய்யப்படுகின்றன. இதனால் சென்னபட்ணாவை கன்னடர்கள் செல்லமாக "பொம் பேகல ஊரு' (பொம்மைகள் செய்யும் நகரம்) என அழைக்கின்றனர்.

அதுபோன்று சுருட்டை மூடி கொண்ட பொம்மைகள். கர்லிங் மூடி கொண்ட பெண் பொம்மைகளுக்கு எப்பவுமே கூடுதல் டிமாண்டு உண்டு. இதனை உணர்ந்த அனிஷா என்பவர், கர்லி உர்லி (ஸ்ரீன்ழ்ப்ஹ் ஜ்ன்ழ்ப்ஹ்) என்ற பொம்மை தொழிலகத்தைத் தொடங்கி அதன் மூலம் 13 வகையான கர்லிங் முடி கொண்ட பெண் பொம்மைகளை உருவாக்கி வருகிறார். மார்க்கெட்டில் மார்டன் பெண்களிடம் இந்த பொம்மைகளுக்கு நல்ல வரவேற்புள்ளது. பலர், இதனை வாங்கி, வீட்டு ஷோகேஸில் வைப்பது லேட்டஸ்ட் பேஷன்.

- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன்


தாய்லாந்தின் சிங்கப் பெண்!


உலகின் சுற்றுலாத் தளங்களில் ஒன்றான தாய்லாந்தின் தலைநகரமான பாங்காக் வீதிகள் இன்று போராட்ட சாலையாக மாறியுள்ளன. அரசுக்கு எதிரான இந்தப் பேரணியில் பெரும் கவனம் ஈர்த்து வருபவர் 22 வயது மாணவி ஒருவர். அவர், தாய்லாந்து நாட்டின் மாணவர்கள் யூனியனின் செய்தித் தொடர்பாளராக இருக்கும் பானுசயா சிதிஜிராவட்டனகுல். சமீபகாலமாக, தாய்லாந்தின் சிங்கப் பெண்ணாக பார்க்கப்படுபவர் இவர்.

தாய்லாந்து, பிரதமரைக் கொண்ட ஒரு ஜனநாயக நாடு. ஆனாலும் அங்கு இன்னமும் மன்னராட்சிதான் நடைபெறுகிறது. பல முறை போராட்டங்கள் நடத்தப்பட்டும், மீண்டும் மீண்டும் மன்னர்களே ஆட்சியைக் கைப்பற்றி வந்துள்ளனர். அதனை மாற்றி புதிய முறையில் தேர்தல்களும் அரசியலமைப்பும் வரவேண்டும் என்பதே போராடுபவர்களின் கோரிக்கை.

தற்போது தாய்லாந்தின் 10-வது மன்னராக ஆட்சி செய்து வருபவர், வஜிரலோங்கார்ன். தற்போதைய பிரதமராக இருப்பவர் பிரயுத் சன் ஒச்சா. இவர், முன்னாள் ராணுவத் தளபதி. இவர்கள் இருவரின் மீதும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, பிரதமர் பதவி விலக வேண்டும் என்று மக்களும், இளைஞர்களும் போராடி வருகின்றனர். தாய்லாந்தில் மக்கள், மன்னரின் அடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள். அதிலும், பெண்களின் நிலை மிக மோசமானது. இதனைக் காண சகிக்காமல் பெண் உரிமைக்காக, அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் பானுசயா. அந்த எழுச்சியில் உள்ள உணர்வுக்காகவும் உண்மைக்காகவும் பெண்கள் பலர் சமீபகாலமாக அவரை பின்தொடர்ந்து நிற்கிறார்கள். ஆனால், வெளியுலகப் பார்வைக்கு தாய்லாந்து பெண்ணுரிமையில் ஆசியாவிலேயே முன்னோடியாக கருதப்படுகிறது. 1932-லேயே இங்கு பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. நாட்டின் மொத்த வேலைபார்க்கும் மனிதவளத்தில் 45% பெண்கள்தாம். ஆனாலும் தாய்லாந்து ஆண்களின் நாடு. அங்கே பெண்கள் அடிமைகள்தான். அதுதான் பானுசயாவின் போராட்டத்துக்கு காரணம்.

இது குறித்து பானுசயா கூறுகையில், ""கடந்த சில ஆண்டுகளில் மன்னராட்சியை எதிர்த்து விமர்சனம் செய்தவர்கள் பலர் நாடு கடத்தப்பட்டு காணாமல் போயிருக்கிறார்கள். இந்த விஷயம் எனக்குத் தெரியாமல் இல்லை. "இத்தனை ஆபத்தான விஷயத்தை முயலாதே' என்று என் மூளை சொல்கிறது. ஆனால், "இதை செய்து முடி' என்று என் மனம் சொல்கிறது. எனவே என் மனது சொல்லும் பாதையில் நான் செல்கிறேன்'' என்கிறார் பானுசயா.

- ரிஷி


நீண்ட நாள் கனவு!


"ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டுமென்ற எங்கள் மூன்றாண்டு கால கனவு சட்டப் பூர்வமாக நிறை வேறியதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்' என்று பாலிவுட் நடிகை மந்த்ராபேடி தன்னுடைய சமூக வலை தளத்தில் தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

""எனக்கும், என்னுடைய கணவர் ராக் கவுசலுக்கும் ஏற்கெனவே ஒன்பது வயதில் வீர் என்ற மகன் இருந்தாலும், ரத்த சம்பந்தமில்லாத ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க ஆசைப்பட்டோம். இதற்காக பிறந்த சில மாதங்களே ஆன குழந்தையை விட சற்று வளர்ந்த பெண் குழந்தையை தத்தெடுப்பதென தீர்மானித்தோம். ஏனெனில் எங்களுடைய மகனுக்கும், தத்தெடுக்கும் குழந்தைக்கும் இடையே அதிக வயது வித்தியாசம் இருக்கக் கூடாதென்பதற்காக முயற்சித்தோம். நாங்கள் எதிர்பார்த்தபடி ஜபல்பூர் அருகே ஒரு பெண் குழந்தை இருப்பதை அறிந்த என் கணவர் முதலில் ஜபல்பூர் சென்று பார்த்தார். மறுநாள் நானும் அங்கு சென்றேன். நான்கரை வயதான தாராவைப் பார்த்தவுடனே எங்களுக்குப் பிடித்துவிட்டது. முறைப்படி பதிவு செய்து தத்தெடுத்துக் கொண்டோம்.

கடந்த ஜூலை மாதம் முதல் தாரா எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகிவிட்டாள். இந்த மகிழ்ச்சியான தகவலை தாமதமாக அறிவிப்பதற்கு காரணம், நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைதான். ஜபல்புரி மொழி மட்டும் தெரிந்திருந்த தாராவுக்கு ஆங்கிலம் பேசவும், எழுதவும் பயிற்சியளித்து வருகிறோம். பள்ளிகள் திறந்தவுடன் பள்ளியில் சேர்த்துவிடுவோம். என்னுடைய மகனும் அவளை தன்னுடைய தங்கையாக ஏற்றுக் கொண்டான்.

அவளும் அவனை அண்ணா என்று அழைக்கிறாள். இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளார் மந்த்ரா பேடி.

- அ.குமார்


முதல் பெண் ஆசிரியர்!

1831- இல் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் சிற்றூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சாவித்திரிபாய் புலே. அக்கால வழக்கப்படி இவரது 9-ஆவது வயதில் 13 வயதான ஜோதிராவ் புலே என்பவரை 1840-இல் இவர் மணந்தார். சமூக சீர்திருத்த எண்ணம் கொண்ட ஜோதிராவ் புலே, தனது மனைவி சாவித்திரிபாய்க்கு கல்வி கற்றுத் தந்தார்.

1847- ஆம் ஆண்டு இத்தம்பதி, தாழ்த்தப்பட்ட மற்றும் விதவைப் பெண்களுக்காக ஒரு பள்ளியை தொடங்கினர். பின்னர் 1848-இல் பெண் குழந்தைகளுக்காக ஒரு பள்ளியை நாட்டிலேயே முதன் முதலில் புணேவில் தொடங்கினர். 9 பெண் பிள்ளைகளுடன் தொடங்கப்பட்ட இந்த பள்ளிக்கு சாவித்திரிபாய் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் ஆனார்.

சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி கற்பிப்பது என்பது அத்தனை எளிதான பணியல்ல. சாவித்திரிபாய் பள்ளிக்குச் செல்லும் வழியில், அவர் மீது சேற்றையும், சாணத்தையும் மாறி மாறி வீசுவார்களாம். இதை தனது கணவர் ஜோதிராவிடம் கூறியுள்ளார் சாவித்திரி. அதற்கு அவர், ""மாற்று ஆடையை எடுத்துச் செல், பள்ளிக்கு சென்றதும் அதனை மாற்றிக் கொண்டு பாடம் நடத்து'' என்று கூறினாராம். அதன்படியே செய்தாராம் சாவித்திரி.

பின்னாளில், பெண் சிசு கொலை, விதவை மறுமணம், சாதி ஒழிப்பு என பல்வேறு சீர்திருத்தப் போராட்டங்களில் ஈடுபட்டார். இதற்கான இலக்கியங்களையும் படைத்துள்ளார் சாவித்திரிபாய்.

- தவநிதி
 

முழு கட்டுரையைப் படிக்க →