ஓராசிரியர் பள்ளிக்காக ஆன்லைனில் இசைக் கச்சேரி!
தமிழ்நாட்டின் தொலைதூர கிராமங்களில் பயிலும் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தலை எளிதாக்க, "ஓராசிரியர் பள்ளி' எனும் திட்டம் சுவாமி விவேகானந்தா ஊரக வளர்ச்சி சங்கத்தால் செயல்படுத்தப்பட்டு
தமிழ்நாட்டின் தொலைதூர கிராமங்களில் பயிலும் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தலை எளிதாக்க, "ஓராசிரியர் பள்ளி' எனும் திட்டம் சுவாமி விவேகானந்தா ஊரக வளர்ச்சி சங்கத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 14 ஆண்டுகளாக நடந்து வரும் இக் கல்வி முறையில், தற்போது கூடுதலாக 1000 பள்ளிகளை தொடங்குவதற்காக பிரபல இசை கலைஞர்கள் ஆன்லைன் கச்சேரி நடத்தி நிதி திரட்டி வருகின்றனர். இது குறித்து இந்த அமைப்பின் துணைத்தலைவர் அகிலா சீனிவாசன் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
""ஓராசிரியர் பள்ளி என்பது கடந்த 2006- ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தா ஊரக வளர்ச்சி சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டது.
கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியருக்கும், ஏதோ சில காரணங்களால் பள்ளிப் படிப்பை தொடர முடியாமல் போன குழந்தைகளுக்காகவும் தொடங்கப்பட்ட மாலை நேரப்பள்ளி இது. அதாவது, குழந்தைகள் டியூசன் செல்வது போன்றது. நாங்கள் இதனை சப்ளிமென்டரி கல்வி எனச் சொல்கிறோம்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி ஆகிய 10 மாவட்டங்களில் 1,057-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 31,000 குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப் பட்டுவருகிறது.
கிராமங்களில் உள்ள கம்யூனிட்டி ஹால் அல்லது டீச்சரின் வீடு அல்லது கோயில் வளாகங்கள் போன்ற இடங்களை தேர்வு செய்து கல்வி கற்பிக்கப்படுகிறது. 1- 5 ஆம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள் இதில் இருப்பார்கள். இவர்களுக்கு ஓர் ஆசிரியர் தான் இருப்பார். கணிதம், அறிவியல், சமூக அறிவியல், தமிழ், ஆங்கிலம் என அனைத்து பாடங்களையும் அவர் ஒருவரே கற்றுத் தருவார்.
இதைத் தவிர, விளையாட்டுக்கு முக்கியத்துவம் இருக்கும். யோகா கண்டிப்பாக உண்டு, தியானம் உண்டு, திறன் வளர்ச்சி பயிற்சி (கேரக்டர் பில்டிங்), கற்றல் திறன்களை கூர்மைப் படுத்துதல், நடத்தை முறைகள், சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவையும் கற்றுத்தரப்படுகிறது.
அந்தந்த கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண்களே இவர்களுக்கு ஆசிரியர்களாக இருப்பார்கள். இது முழுக்க முழுக்க பெண்களால் மட்டுமே நடத்தப்படும் பள்ளி. இவர்களுக்கு பீல்டு சூப்பர்வைசர் இருக்கிறார்கள் அவர்களும் பெண்களே. அவர்கள் திடீரென்று வந்து பள்ளி நடப்பதை பார்வையிட்டு எங்களுக்கு அறிக்கை அனுப்புவார்கள்.
பள்ளிக்கு போக முடியாத குழந்தைகளைத் தேடிச் செல்லும் பள்ளி இது. அதாவது, எந்த ஒரு குழந்தையும், எந்த சூழல் காரணமாகவும், ஆரம்ப கல்வியை இழந்து விடக் கூடாது என்பதே எங்களின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் சத்தமில்லாமல் பெரிய புரட்சி செய்து வருகிறது ஓராசிரியர் பள்ளி.
ஆரம்பத்தில் இதில் பயின்ற மாணவர்கள், தற்போது கால்நடை மருத்துவராக, ஆசிரியராக, செவிலியராக, காவல்துறையில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த ஓராசிரியர் கல்வி முறைக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதியுதவி செய்து வருகிறார்கள். தற்போது, இருக்கும் 1057 பள்ளியிலிருந்து , இன்னும் கூடுதலாக ஆயிரம் பள்ளிகளை தொடங்க முடிவு செய்திருக்கிறோம். இதற்காக தற்போது, கூட்டு நிதி தொண்டு நிறுவனமான "மிலாப்' எங்களுடன் இணைந்திருக்கிறார்கள்.
கடந்த விநாயக சதுர்த்தி அன்று இதற்கான பிள்ளையார் சுழி போட்டிருக்கிறோம். இதற்காக எங்களுக்கு உதவிட கர்நாடக இசைக்கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ தலைமையில் இசை கலைஞர்கள் பலரும் உதவ முன் வந்திருக்கிறார்கள்.
இவர்கள், ஒவ்வொரு பத்து நாள் இடைவெளியில், 15 நிமிடம் ஓடக் கூடிய வகையில், கீர்த்தனைகளைப் பாடி மிலாப் மற்றும் எங்களது முகநூலில் பதிவிடுவார்கள்.
இதை பார்க்கும், அவர்களது ரசிகர்களும், பார்வையாளர்களும் எங்களுக்கு உதவ வாய்ப்பு உள்ளது. இது ஊர் கூடி தேர் இழுக்கிற விஷயம்தான்'' என்றார்.
ஓராசிரியர் பள்ளி குறித்து பாம்பே ஜெயஸ்ரீ நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
""எனக்கு இந்தப் பள்ளியைப் பற்றி எப்படி தெரிய வந்தது என்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன், வாணிமகாலில் கச்சேரி இருப்பதாக கேள்விப்பட்டு சென்றிருந்தேன். நான் கச்சேரியை ரசிப்பதற்காகதான் சென்றேன்.
ஆனால், அங்கு சென்ற பிறகுதான் இந்த ஓராசிரியர் பள்ளியைப் பற்றி தெரிந்து கொண்டேன். அவர்களது பணியைப் பற்றி கேள்விப்பட்டு நெகிழ்ந்து போனேன். அதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்காக கச்சேரி செய்து தருகிறேன். இந்த சமயத்தில்தான் அகிலா சீனிவாசன், இந்த புது முயற்சியைப் பற்றி சொல்லி இசைக் கச்சேரி செய்து தர முடியுமா என்றார்.
இதனால் கடந்த விநாயக சதுர்த்தி அன்று முதல் ஆன்லைனில் பாடல் கச்சேரிக்கு ஏற்பாடு செய்து நடத்தி வருகிறோம். இதற்காக, இசைக் கலைஞர்கள் ஜெயந்தி குமரேஷ், அபிஷேக் ரகுராம், லால்குடி ஜி.ஜே.ஆர். கிருஷ்ணன், லால்குடி விஜயலட்சுமி, அம்ரிதா முரளி மற்றும் அஷ்வத் நாராயணன் ஆகியோர் பங்களிப்பு வழங்கி வருகின்றனர்.
மற்றபடி, இதில் எனது பங்கு என்பது மிகவும் சிறியதுதான். இசையாளர்கள், கலைஞர்கள் போன்றோருக்கு இதில் ஈடுபாடு இருந்தால் இன்னும் பரிபுரணமாக இருக்கும் என்பது எனது ஆசை, லட்சியம்'' என்றார்.