சமையல்! சமையல்!
கம்பு மாவை வறுத்துக் கொள்ளவும், நல்லெண்ணெய்யைச் சூடாக்கி கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, சீரகம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
கம்பு கொழுக்கட்டை
தேவையானவை:
கம்பு மாவு - 1 கிண்ணம்
நெய் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு, உளுந்து, கடலைபருப்பு - 1தேக்கரண்டி
சீரகம் - சிறிது
மிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தேவையான அளவு
செய்முறை: கம்பு மாவை வறுத்துக் கொள்ளவும், நல்லெண்ணெய்யைச் சூடாக்கி கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, சீரகம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதனுடன் சிறிது தண்ணீர், உப்பும் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்தவுடன் வறுத்த கம்பு மாவைக் கொட்டி, கட்டித் தட்டாமல் கிளறி, கை பொறுக்கும் சூட்டில், இக்கலவையை கொழுக்கட்டையாக பிடித்து, ஆவியில் வேகவிட்டு எடுத்தால் கம்பு கொழுக்கட்டை தயார்.
தினை கேசரி
தேவையானவை:
தினை ரவா - கால் கிலோ
வெல்லம் - 300 கிராம்
நெய் - 50 கிராம்
முந்திரி - 20
திராட்சை - 20
ஏலக்காய்த் தூள் - கால் தேக்கரண்டி
சுக்குத்தூள் - 2 சிட்டிகை
பன்னீர் - 2 தேக்கரண்டி
Advertisement
செய்முறை: தினை ரவாவை சிறிது நெய்விட்டு பொன் நிறமாக வறுத்தெடுக்கவும். வெல்லத்துடன் சிறிது நீர் சேர்த்து பாகாக்கிக் கொள்ளவும். 400 மி.லி. நீரை கொதிக்க வைத்து, அதில் வறுத்த தினை ரவாவை சேர்த்து கிளறவும். இடையிடையே சிறிது நெய் சேர்க்கவும். பிறகு வெல்லப் பாகு சேர்த்து கிளறவும். சுருண்டு வரும்போது வறுத்த திராட்சை, முந்திரி, ஏலக்காய்த் தூள், சுக்குத்தூள், பன்னீர் சேர்த்து இறக்கினால் தினை கேசரி கிடைக்கும்.
வரகு சேவை
தேவையானவை:
வரகு அரிசி - 1 கிண்ணம்
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு - தலா 1 தேக்கரண்டி
நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கிண்ணம்
மிளகாய் - 3
கறிவேப்பிலை - 2 கொத்து
நறுக்கிய கொத்துமல்லி,
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
செய்முறை: வரகு அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து நன்கு மிருதுவாக அரைத்துக் கொள்ளவும். சிறிது கெட்டியாக இருக்க வேண்டும். அரைத்த மாவை இட்லி போல் ஆவியில் வேகவிட்டு எடுத்து, மாவை இடியாப்ப அச்சில் சூடாக இருக்கும் போதே பிழிந்து எடுக்கவும். பின்னர், சூடான எண்ணெய்யில் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, தாளித்து சின்ன வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள், உப்பு சேர்த்து வதக்கிக் கொண்டு இடியாப்பத்தை சேர்த்துக் கிளறி, சூடாகப் பரிமாறினால் வரகு இடியாப்பம் ருசிக்கும்.
குதிரைவா− புட்டு
தேவையானவை:
குதிரைவாலி அரிசி மாவு - 1 கிண்ணம்
தேங்காய்ப் பூ - அரை கிண்ணம்
வெல்லம் - கால் கிண்ணம்
சுக்குத் தூள் - 2 சிட்டிகை
நெய் - 1 தேக்கரண்டி
முந்திரி - 50 கிராம்
உப்பு - சிறிது
செய்முறை: குதிரை வாலி மாவுடன் உப்பு கலந்த நீரை தெளித்து, கட்டி இல்லாமல் உதிரியாக பிசைந்து ஆவியில் வேக விடவும். அதில் வெல்லத்தூள், தேங்காய்ப்பூ துருவல் மற்றும் முந்திரியையும் சேர்த்து நெய்யில் வறுத்துப் போட்டு, ஏலக்காய்த் தூள், சுக்குத் தூள் கலந்து பரிமாறவும்.