முகப்பு
மகளிர்மணி

ஓவியமும் ஒருவகை உடற்பயிற்சிதான்!

பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட கண் மருத்துவரான சாந்தி பிரியா, பெண்களை முன்னிலைப்படுத்தும் வகையில், கடந்த மகளிர் தினத்தன்று சென்னை ஆர்ட் ஹவுசில் ஓவியக்கண்காட்சி ஒன்றை நடத்தியிருந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:06 PM
பகிர்:


பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட கண் மருத்துவரான சாந்தி பிரியா, பெண்களை முன்னிலைப்படுத்தும் வகையில், கடந்த மகளிர் தினத்தன்று சென்னை ஆர்ட் ஹவுசில் ஓவியக்கண்காட்சி ஒன்றை நடத்தியிருந்தார். இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்த ஓவியங்கள் விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை தனது தொண்டுநிறுவன வளர்சிக்கு பயன்படுத்த உள்ளார். இது குறித்து அவர், நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

"" நான் கண் மருத்துவராக இருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பார்கின்சன் நோயால் நான் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. பார்கின்சன் நோய் என்பது நரம்பு மண்டலத்தை பாதித்து இயல்பாக கைகால்களை இயங்க விடாமல் செய்யும் ஒரு மோசமான இன்னமும் சரியான மருந்து கண்டுபிடிக்கமுடியாத நோயாகும். இதை அறிந்ததும் மிகவும் உடைந்துபோனேன்.

பின்னர், மெல்ல மெல்ல மருத்துவராக இருக்கும் நானே உடைந்து போனால் எப்படி என்று என்னை தேற்றிக்கொண்டு அதிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். இதற்காக இந்நோய் குறித்து நிறைய படிக்கத் தொடங்கினேன். அதன்மூலம் இந்த நோயிலிருந்து மீளமுடியா விட்டாலும் நிம்மதியாக வாழ முறையான உடற்பயிற்சி உதவும் என்பதை புரிந்து கொண்டேன். அதுமுதல் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள தொடங்கினேன்.

ஓவியம் வரைவதை பொருத்தவரை சிறு வயது முதலே எனக்கு ஓவியம் வரைவது மிகவும் பிடிக்கும். மருத்துவ கல்லூரியில் சேர்ந்த பிறகு, நேரமின்மை காரணத்தால் அதை அப்படியே விட்டுவிட்டேன். இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பருடைய மகளின் ஓவியக்கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அப்போதுதான், எனக்கு மீண்டும் ஓவியத்தின் மீது ஆர்வம் வந்தது. ஓவியமும் ஒருவகையான உடற்பயிற்சிதானே அதனால் தீவிரமாக ஓவியம் வரைவதில் கவனம் செலுத்தினேன்.

கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளேன். அதன்வெளிப்பாடுதான், கடந்த மகளிர் தினத்தன்று நடத்தப்பட்ட ஓவியக் கண்காட்சி. இதில் பெண்களின் பல்வேறு உணர்வுகளை சொல்லும் 30 வகையான ஓவியங்கள் காட்சிக்கு வைத்திருந்தேன். இதில் ஓவியங்கள் விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை பார்கின்சன் நோயால் பாதித்தவர்களுக்காக நண்பர்களுடன் இணைந்து நடத்தி வரும் "சார்' தொண்டு நிறுவனத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது மன நிறைவை தந்துள்ளது.

மேலும், இந்த கண்காட்சியில் "ஙஉபஅஙஞதடஏஞநஐந' என்ற புத்தகம் ஒன்றும் எழுதி வெளியிட்டேன். 36 கவிதைகளும், 36 ஓவியங்களும் கொண்ட புத்தகம் இது.

தற்போது, பார்க்கின்சன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புத்தகம் ஒன்றை எழுத தொடங்கியிருக்கிறேன். காரணம், கண்ணுக்கு தெரியாத இந்த பார்க்கின்சன் நோய் என்னவென்று பலருக்கும் தெரியவில்லை. அது என்னமாதிரி விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதெல்லாம் தெரிவதில்லை. இதற்கு தீர்வு அளிக்கும் வகையில் இந்த புத்தகம் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.