மகளிர் பற்றிய செய்திகள் ஒரு கதம்பம்
தன்னம்பிக்கை அளிக்கும் மகளிர் பற்றிய செய்திகள் ஒரு கதம்பம்
காமிக் ராணி
2019 - இல் மார்வல் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம், ஸ்காலஸ்டிக் என்ற நிறுவனத்துடன் இணைந்து தன்னுடைய கேரக்டர்களுக்கு புதிய பாணியில் எழுத ஆட்களை தேடியது.
அப்போது இளம் கதாசிரியர் , பேச்சாளர் மற்றும் எழுத்தாளரான பிரீத்தி சிப்பர் தேர்வு செய்யப்பட்டு, முதலில் "அவெஞ்சர்ஸ் அசெம்பளி' என்ற நாவலை எழுதச் சொல்லி வெளியிட்டது.
அமெரிக்க காமிக் பாத்திரங்களில் "ஜடானா' என ஒரு கதாபாத்திரம் உண்டு. இதனை டி.சி. காமிக்ஸ் வெளியிடுகிறது. ஜடானா ஒரு கற்பனை சூப்பர் ஹீரோ.
ஜடானாவுக்கு பெண் வடிவம் கொடுத்து, அவர் ஒரு கற்பனையான விந்தை உலகில் எதிர்பாராமல் சிக்கிக் கொள்கிறார். பிறகு எப்படி அதிலிருந்து மீள்கிறார் என்பதுதான் கதை. இந்த காமிக்ஸ் கதைக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் "காமிக்குயின்' என்ற அந்தஸ்து பிரீத்திக்கு கிடைத்துள்ளது.
மானஸி சௌத்திரி
பத்தொன்பது வயதான மானஸி சௌத்ரி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலுள்ள புனித சேவியர் கல்லூரியில் பி.பி.ஏ படித்து வரும் மாணவி. மானஸிக்கு கரோனா தொற்று பாஸிடிவானதால், மருத்துவர்கள் அவரை தனிமையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதனால், தனது வீட்டிலேயே ஓர் அறையில் தனிமைப் படுத்திக் கொண்டார் அவர்.
சுமார், 18 அங்கத்தினர்களைக் கொண்ட பெரிய கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த மானஸிக்கு தனிமையில் இருப்பது மிகப் பெரிய சவாலாக இருந்துள்ளது.அவரது செல்போன் செயலிழந்து போய்விட்டது. சாப்பாடு அறை வாசலில் வைக்கப்பட்டது. உணவு பிடிக்கவில்லை வாசனையை உணர முடியவில்லை. ஒரு மாதம் எப்படி கழித்தார் மானஸி?
டைரி எழுத ஆரம்பித்தார் அன்றாடம் ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஒரு நாள் பாக்கியில்லாமல் முழுவதும் பதிவு செய்தார்.
தற்போது, அவரது டைரிக் குறிப்பை "ஒன் மன்த் ஸ்டோரி' என்ற பெயரில் எழுதியுள்ளார். இதனை ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளில் நோஷன் பிரஸ் என்ற பதிப்பகம் நூலாக வெளியிட்டுள்ளது. தற்போது இந்நூல் அம்மாநிலத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
- அபி
சம்பளத்துடன் கூடிய விடுப்பு!
உலக சுகாதார நிறுவனம், குழந்தை பெற்ற பெண்களுக்கு 16 வாரங்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு தரலாம் என அறிவித்துள்ளது.
ஆனால், ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் தங்கள் இஷ்டப்படியே வழங்குகின்றன. அந்த வகையில் இந்த விடுமுறை ( விடுப்பு) தருவதில் முதல் இடம் எஸ்டோனியாவுக்கு. இவர்கள் 85 நாள்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பை தருகிறார்கள்.
இனி மேலும் சில நாடுகள் பற்றி அறிந்து கொள்வோம்.
ஹங்கேரி - 72 நாள்கள்
ஆஸ்திரியா - 51 நாள்கள்
ஜெர்மனி - 43 நாள்கள்
ஜப்பான் - 36 நாள்கள்
ஸ்வீடன் - 35 நாள்கள்
கனடா - 27 நாள்கள்
இத்தாலி - 25 நாள்கள்
தென்கொரியா - 25 நாள்கள்
பிரான்ஸ் - 19 நாள்கள்
ஸ்பெயின் - 16 நாள்கள்
பிரிட்டன் - 12 நாள்கள்
ஆஸ்திரேலியா - 8 நாள்கள்
இந்தியா - 84 நாள்கள் தருகிறது.
- ராஜிராதா
சிறந்த ஆசிரியர்
யு.ஏ. இ -ல் ஆசிரியராக பணிபுரியும் இந்தியர் அன்னம்மா லூசிக்கு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் பிரஸ்ஸின் 2021-ஆம் ஆண்டின் "அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஆசிரியர்' விருது வழங்கப்பட்டுள்ளது.
சமூக அறிவியல் ஆசிரியரான இவர், கடந்த ஆண்டு கொவைட் சமயத்தில் கூடுதல் அக்கறையுடன் மாணவியருக்கு பாடம் போதித்தார் என இந்த விருது தரப்பட்டுள்ளது. 112 நாடுகளிலிருந்து சுமார், 13,000 ஆசிரியர்களில், அன்னம்மா லூசி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு!
முதல் பெண் போர் விமானி!
சுவிட்சர்லாந்தில் முதன் முறையாக பெண் ஒருவர் போர் விமானி பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். லெப்டினன்ட் தகுதி பெற்ற பேன்னி சோலட் என்ற அந்தப் பெண் , போர் விமானத்தை ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக சுவிஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.
"ஷோட்டி' என்ற செல்லப்பெயரால் அழைக்கப்படும் 26 வயது சோலட், செயின்ட்லேகீரைச் சேர்ந்தவர். அவர் தனது 17 -ஆவது வயது முதலே போர் விமானி ஆக வேண்டும் என்பதே அவரது விருப்பம். அதன்படி தற்போது போர் விமானிக்கான பயிற்சியில் தீவிரமாக உள்ள சோலட், விமானவியலில் ஒரு பட்டமும் பெற்று உள்ளார்.
- கோட்டாறு. ஆ. கோலப்பன்
மேலும் ஒரு புதிய கட்சி!
ஷர்மிளா ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் ஓய். எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை. இவர் தனது தந்தை பெயரில், அவரின் பிறந்தநாளான ஜூலை 8}ஆம் தேதியன்று தெலங்கனாவில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கப் போகிறார்.
கட்சியின் பெயர்: ஓய்.எஸ்.ஆர் தெலங்கானா பார்ட்டி.
தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பதிவு வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டதாக, இதன் ஒருங்கிணைப்பாளரான வடுகு ராஜகோபால் தெரிவித்திருக்கிறார்.