தொடர்ந்து படங்களில் நடிப்பது கடவுளின் கருணை!
திரையுலகில் 20 ஆண்டுகளாக படங்களில் நடித்து வருவதற்கு கடவுளின் கருணையும் ஒரு காரணம் என்று கூறும் ப்ரியாமணி தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்:
திரையுலகில் 20 ஆண்டுகளாக படங்களில் நடித்து வருவதற்கு கடவுளின் கருணையும் ஒரு காரணம் என்று கூறும் ப்ரியாமணி தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்:
""அறிமுகமான "பருத்திவீரன்' ( 2007) முதல் படமே எனக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்று தருமென நான் எதிர்பார்க்கவே இல்லை. ஒரு படத்தில் நடித்து முடித்தவுடன் அதன் வெற்றியோ தோல்வியோ அது நடிகையை பாதிக்காது என்று நினைத்திருந்தேன். ஆனால், துரதிருஷ்டவசமாக ஒரு படம் தோல்வியடைந்தால் முதலில் பாதிக்கப்படுவது அதில் கதாநாயகியாக நடித்த நடிகைதான். உடனே ஓரங்கட்டிவிடுவார்கள். நடிகரைப் பொருத்தவரை பாதிப்பில்லை. தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும். நடிகைகளுக்கும் உரிய வாய்ப்பினை அளிக்க வேண்டுமென்று நான் நினைப்பதுண்டு. இப்போது நிலைமை மாறிவருவது சந்தோஷமாக இருக்கிறது.
இப்போது புதுமுகங்களுக்கு வாய்ப்பளிப்பது போல், திருமணமான நடிகைகளுக்கும் வாய்ப்பளிப்பது வரவேற்புக்குரியதாகும். உதாரணமாக சமந்தா அக்கினேனி திருமணத்திற்குப் பின் நடித்த படங்கள் வெற்றி பெறவே அவருக்கேற்ற கதைகளை உருவாக்கி வாய்ப்பளிக்கின்றனர். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது சற்று அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது. நான் பல மொழிப் படங்களில் நடித்து வருவதோடு, வெற்றிப் படங்களையும் கொடுத்ததால் நிறைய வாய்ப்புகள் தொடர்ந்து எனக்கு கிடைக்கின்றன. இந்த விஷயத்தில் கடவுளின் கருணையும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.
நான் நடித்த பல ரீமேக் படங்கள் வெற்றிப் பெற்றுள்ளன. தற்போது "அசுரன்' தெலுங்கு ரீமேக்கான "நரப்பா'வில் நடித்து முடித்துள்ளேன். மதுரையில் இதன் படப்பிடிப்புத் தொடங்கியபோது, முதலாவது பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் ஜனவரியில் படப்பிடிப்புத் தொடங்குவதற்குள் இடையில் "வீராடபர்வம்' என்ற தெலுங்கு படத்தில் நடித்து முடித்தேன். நவம்பரில் முடிந்த இப்படத்தில் அனந்தபூர் வட்டார மொழியில் டப்பிங் பேசியது சவாலாக இருந்தது. இதற்காக பயிற்சியளிக்க இயக்குநர் ஸ்ரீகாந்த் அடாலா தனி பயிற்சியாளரை ஏற்பாடு செய்திருந்தார்.
"அசுரன்' தமிழில் மஞ்சு வாரியர் நடித்த சுந்தரம்மா பாத்திரத்தில் நான் நடிக்கிறேன். இது கதாநாயகனுக்கு இணையான பாத்திரம் என்பதால் மஞ்சு வாரியார் நடிப்பில் பத்து சதவிகிதமாவது நான் செய்திருப்பதாக ரசிகர்கள் கருதினால் அதுவே எனக்கு வெற்றிதான். ரீமேக் படங்களில் நடிக்கும்போது என்னுடைய தனித்திறமையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.
"சென்னை எக்ஸ்பிரஸ்' படத்திற்குப் பின் எட்டு ஆண்டுகள் கழித்து ஹிந்தியில் "மைதான்' என்ற படத்தில் நடித்துள்ளேன். இந்திய கால்பந்து பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹ்மான் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் இதில் சையத் அப்துல் ரஹ்மான் மனைவியாக நடித்துள்ளேன். இப்படத்தில் நான் நடிக்க வேண்டிய பகுதிகள் படமாக்கப்பட்டுவிட்டன.
இதுவரை நான் நடித்த பாத்திரங்களிலேயே அமேசான் பிரைம் தொடரான "தி பேமிலி மேன் - 2' இரண்டாவது பகுதியில் நான் ஏற்றுள்ள சுசி ( சுதித்ரா ஐயர்) பாத்திரம்தான் சிறந்ததென கருதுகிறேன். முதல் பகுதியை விட இரண்டாவது பகுதியில் என்னுடைய பாத்திரத்துக்கு வலுவேற்றியிருப்பது நிச்சயம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறுமென எதிர்பார்க்கிறேன்.
இனி எதிர்காலத்தில் நம் நாட்டில் ஓடிடி தளத்தில் தொடர்கள், திரைப்படங்கள் வெளியாவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. தியேட்டர்களில் வெளியிடுவதற்கு மாற்று இதுதான் என்பதோடு, ரசிகர்களுடன் மிக நெருக்கமான உணர்வையும் ஏற்படுத்துவதாக கருதுகிறார்கள். இதனால் தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவத்தை இழந்து விடுவோமோ என்ற ஏக்கமும் ஏற்படுகிறது. ஓடிடி தளங்களில் வெளியாகும் தொடர்களில் நடிக்க நடிகர்- நடிகையர் பலரும் ஆர்வம் காட்டுவதென்னவோ உண்மைதான்'' என்கிறார் ப்ரியாமணி.