முகப்பு
மகளிர்மணி

சின்னத்திரை மின்னல்கள்!: இன்னொருத்தராக நடிப்பது  சவால்தான்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "மகராசி' தொடரில் நாயகியாக நடித்து வருபவர் ஸ்ரீத்திகா.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:


சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "மகராசி' தொடரில் நாயகியாக நடித்து வருபவர் ஸ்ரீத்திகா. தனது சின்னத்திரை அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்கிறார்:

"மகராசி' பாரதி கதாபாத்திரம் குறித்து?

மகராசி தொடரில் இதற்கு முன்பு திவ்யாதான் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வந்தாங்க. இவ்வளவு நாளாக அவங்கதான் பாரதியா ரசிகர்கள் மனதில் பதிந்து போய் இருந்தாங்க. அந்த கதாபாத்திரத்துக்கு நான் வரும்போது கொஞ்சம் சவாலாகதான் இருக்கிறது. இருந்தாலும் நிச்சயம் ரசிகர்கள் ஏமாற்றம் அடையாத அளவுக்கு இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால், அவங்க பண்ணின அளவுக்கு நூறு சதவீதம் கொடுக்க முடியலன்னாலும், 90 சதவீதமாவது கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்.

அதுபோன்று இதில் இன்னொரு சவாலான விஷயம் என்னவென்றால், நாயகன் புவி கேரக்டருக்கு நான் பேசுவேன் என்று தெரியாது. அதனால், அவர் முன்னாடி வரும்போதெல்லாம், நான் வாய்ப்பேச வராத பெண்ணாக அமைதியாக இருக்க வேண்டும். அந்த நேரத்தில் இதுக்கு என்ன ரியாக்ஷன் கொடுப்பது, என்ன சைகை செய்வது என்பதெல்லாம், கொஞ்சம் சவால்தான். நான் செய்வதை பார்த்து செட்ல சுத்தி இருக்கிற எல்லோரும் சிரித்துக் கொண்டே இருப்பாங்க. அந்த வகையிலே இதுவும் கொஞ்சம் வித்தியாசமான அனுபவமாகத்தான் இருக்கிறது.

திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் என்ன?

புதிதாக மாற்றங்கள் எதுவும் இல்லை. நான் நானாகத்தான் இருக்கிறேன். ஒரேயொரு சின்ன மாற்றம் என்றால், திருமணத்திற்கு பின்பு அதிகம் வீடியோ காலில் இருக்கிறேன் அவ்வளவுதான். மாமனார், மாமியார் இருவரும் வயநாட்டில் இருப்பதால், அவங்க அடிக்கடி போன் செய்து பேசுவார்கள்.

உங்களது நடிப்பை பார்த்து கணவர் என்ன சொல்கிறார்?

அவருக்கு தினமும் தொடரைப் பார்க்க நேரம் இருக்காது. அப்படியே பார்க்கும்போது, "நடிப்பதெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், எப்போதும் ஏன் அழுதுக் கொண்டே இருக்கிறாய்' என்று கேட்பார். கதைக்கு அது தேவையாக இருக்கிறது என்று சொல்வேன். பின்னர், புரிந்து கொள்வார்.

கிராப்ட் ஒர்க் தொடங்கி சிகை அலங்காரம் வரை செய்வீங்களாமே?

கொஞ்சம் கொஞ்சம் வரும். "நாதஸ்வரம்' தொடரில் நடித்துக் கொண்டிருந்த போது, சூட்டிங் காரைக்குடியில் நடந்தது. அப்போது, எனக்கு ஒருநாள் அல்லது ரெண்டுநாள் சூட்டிங் இருக்காது. அந்த சமயத்தில் ஒருநாள், ரெண்டு நாளுக்காக சென்னை வந்து போக முடியாது இல்லையா. அதனால், பொழுதுபோக்காக, நானும் என் அம்மாவும் சேர்ந்து எங்களுடைய சேலைக்கு ஸ்டோன் ஓட்டுவது, பூ வேலை செய்வது, சில்க் த்ரெட் வலையல்கள் செய்வது போன்றவற்றை செய்து கொள்வோம். அப்படித்தான், ஒரு முறை அம்மாவுக்கு விளையாட்டாக, ஹேர் கட் செய்ய அது அவங்களுக்கு பிடித்துவிட்டது. அதிலிருந்து கடந்த ஏழு ஆண்டுகளாக நான்தான் அம்மாவுக்கு ஹேர் கட் செய்கிறேன். மற்றபடி பெரிய அளவுக்கு சிகை அலங்காரம் எல்லாம் செய்ய தெரியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.