மகளிர்மணி

240  நாள்கள் நடைப்பயணம்!

அ. குமார்

அண்மையில் லண்டன் மற்றும் மெல்போர்ன் நகரங்களில் நடைபெற்ற இந்தியத் திரைப்பட விழாக்களில் அஜிதேஷ் சர்மா என்பவர் தயாரித்த "உமன் ஆஃப் மை பில்லியன்' என்ற ஆவணப்படம் திரையிட்டபோது மக்களிடம் ஏகோபித்த பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது. அஜிதேஷ் சர்மாவின் முதல் ஆவணப்படமான இதில் அப்படியென்ன சிறப்பு?

இது ஐக்கிய நாடுகளின் உமன் சாம்பியன் ஆஃப் சேஞ்ச், காமன்வெல்த் பாயிண்ட் ஆஃப் லைட் வின்னர் மற்றும் யங் கனெக்டர்ஸ் ஆஃப் பியூச்சர் ஃபெலோ என்ற அமைப்புகளின் உறுப்பினரான சிருஷ்டி பக்ஷி என்ற பெண் சமூக ஆர்வலரைப் பற்றிய ஆவணப்படமாகும். இவர் பெண்களின் சக்தியையும், உரிமையையும் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2018-ஆம் ஆண்டு கன்யாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 240 நாள்களில் 4 ஆயிரம் கி.மீ. தொலைவு நடைப்பயணம் செய்து பெண்களை சந்தித்து சாதனை படைத்துள்ளார். வழியில் தான் சந்தித்த நகர மற்றும் கிராமப் பெண்களிடம் கல்வியின் முக்கியத்துவம். பாலின வேறுபாடு காரணமாக சந்திக்கும் பிரச்னைகள், சுயதொழில் மூலம் வருவாய் ஈட்டுவது, சேமிப்பு போன்றவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இவரது நடைப் பயணத்தின் குறிக்கோளாகும்.

சிருஷ்டியின் விழிப்புணர்வு பயணத்தை ஆவண படமாக்கும் திட்டம் ஏதுமில்லை. இவர் தில்லி வழியே செல்லும்போது, சிருஷ்டியின் சகோதரியும் தில்லி கிரைம் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களில் ஒருவருமான ஆபூர்வா பக்ஷியை சந்திக்க நேர்ந்தது. அந்த நேரத்தில் தில்லி கிரைம் நிகழ்ச்சி இணை இயக்குநரான அஜிதேஷ் சர்மா இவரை சந்தித்து, இவரது நடைபயணத்தின் நோக்கத்தை கேட்டறிந்தார். சிருஷ்டியின் நடைப்பயணத்தை ஆவணப்படமாக எடுத்து உலகிற்கு தெரியபடுத்தலாமே என்ற எண்ணம் தோன்றவே, தன்னுடைய யோசனையை ஆபூர்வா பக்ஷியிடம் கூறினார்.

அவரும் தன் சகோதரி சிருஷ்டியிடம் ஒப்புதல் பெற்று, அஜிதேஷை உடன் அனுப்பி வைத்தார். அவரும் சிருஷ்டி குழுவினருடன் கூடவே சென்று, வழியில் அவர் சந்தித்த 300-க்கும் மேற்பட்ட பெண்களின் நேர்முக உரையாடல்களை படமாக்கி இதன்மூலம் பல உண்மை கதைகள், பெண்கள் சந்திக்கும் அவலங்கள் போன்றவை தெரிந்து கொண்ட அஜிதேஷ், அவைகளை தொகுத்து முழு ஆவணப்படமாக்கும் முயற்சியில் இறங்கினார். இதற்காக இவர் சிருஷ்டியுடன் ஆயிரம் மணிநேரம் செலவழித்ததாக கூறியுள்ளார்.

""முதன்முறையாக ஆவணப்படம் தயாரிப்பது எனக்கொரு புது அனுபவமாக இருந்தது. நான் சார்ந்துள்ள ஆண் வர்க்கத்தின் மீது எனக்கே வெறுப்பு ஏற்பட்டது. என்னுடைய கோபத்தை வெளிபடுத்தவும். நம் வீட்டுப் பெண்களுக்கான உரிமைகளை மீட்க வழிகாட்ட வேண்டுமென்று நினைத்தேன். இந்த ஆவண படத்திற்காக இயக்குநர் யாரையும் நான் நியமிக்கவில்லை. நானே எடிட்டிங் செய்து படத்தை உருவாக்க தீர்மானித்தேன். ஆனால் படமாக்கிய அனைத்து சம்பவங்களையும் கோர்வை படுத்துவது சவாலாக இருந்தது. இதற்கு இதுவரை எனக்கு பட தயாரிப்பு பற்றி ஏதும் தெரிந்திருக்கவில்லை. சம்பவங்களை படமாக்குவதோடு சரி.

முக்கியமான நேர்காணல்களை தொகுத்தேன். பாதிக்கப்பட்டப் பெண்களில் முதன்மையான விதவைப் பெண்மணி சங்கீதா, பாலியல் வன்முறையில் உயிர் தப்பிய நேஹா, அமில வீச்சில் பாதிக்கப்பட்ட பிராக்யா ஆகியோர் மூலம் சிருஷ்டியின் விழிப்புணர்வு நடைபயணத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவது போல் படத்தை உருவாக்கினேன். அவ்வப்போது சிருஷ்டியின் கருத்தை கேட்டறிந்தேன். சிருஷ்டியின் நடைப்பயணம் முடிந்து இரண்டாண்டுகள் கழித்தே இந்த ஆவணப்படம் நிறைவுற்றது.

முதலில் சர்வதேச இந்தியத் திரைப்பட விழாக்களில் இதை திரையிடுவதென தீர்மானித்தேன். எதிர்ப்பார்த்ததைவிட வரவேற்பும், பாராட்டுதல்களும் கிடைத்தன.

இந்த ஆவணப்படம் தயாரித்தன் மூலம் அடுத்து முழுநீள திரைப்படம் தயாரிப்பதற்கான அனுபவம் கிடைத்துள்ளது'' என்று கூறும் அஜிதேஷ் சர்மா, நடைபயணம் மூலம் இந்தியப் பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த துணிந்த சிருஷ்டி பக்ஷியை சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தியது பெருமையாக இருக்கிறதாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

சிஏஏ: 14 பேருக்கு இந்திய குடியுரிமை முதல் முறையாக அளிப்பு

ராஜஸ்தான் சுரங்க விபத்து: ஹிந்துஸ்தான் நிறுவன அதிகாரி உயிரிழப்பு

இந்திய ராணுவம் குறித்த சா்ச்சை கருத்து: ராகுல் காந்தி மீது தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

சாம் கரன் அசத்தலில் பஞ்சாப் வெற்றி

SCROLL FOR NEXT