மார்கழி அதிகாலை நீராடல் என்பது எப்படி தொன்று தொட்டு வரும் மரபாக இருக்கிறதோ, அவ்வாறே மார்கழியில் கோலமிடுவதும் மரபு. அதிகாலை கோலமிடுவதும் போது கிடைக்கும் காற்று நம் ஆரோக்கியத்திற்கும் நல்லது. அது மட்டுமல்லாமல் கோலமிடுவதால் நம் மனம், உடல் இரண்டிற்கும் புத்துணர்ச்சி கிடைப்பதோடு, வீடே அழகுற தெய்வீக கலையுடன் திகழும். நமது மரபு ஓவியங்கள் நாட்டின் குறிப்பிட்ட பிரதேசங்கள், தனித் தன்மைகள் கொண்டவை. இந்தியக் கலையில் அழகுக்காகவோ அல்லது அலங்காரத்துகாகவோ மட்டும் கலைப் பொருள்கள் படைக்கப்படவில்லை. அவை அன்றாட வாழ்வில் ஆன்மிக. இறையியல், மத நம்பிக்கையைப் பயன்பாடுகளுக்காகவே படைக்கப்பட்டன எனலாம். அம்பாசமுத்திரத்தில் வசிக்கும் பா.லெட்சுமி தேவி என்பவர். கருவுக்கு ஏற்றார் போல ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கலை அல்லது ஓவியத்தை பிரதிபலிக்கும் வகையில் கோலமிடுகிறார். இதனால் ஒவ்வொன்றும் தனித்தனி அழகை சேர்க்கிறது.
இவரிடம் பேசியதிலிருந்து- கோலமிடும் ஆர்வம் எப்படி உருவானது?
சிறுவயதில் கிராமத்தில் இருந்த நாட்களில் அதிகாலை 3 மணிக்கு எழுந்து நீராடி கோலமிட்டு வீதிவுலா பஜனைக்கு செல்வது வழக்கமாக இருந்தது. ஊரின் நடுவில் இருந்த சிவன் கோயிலில் திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியும் ஒலி நாடாவில் இசைக்கும் அதனால் அது மனப்பாடமானது. அது போல பெருமாள் கோயிலில் ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்களை பெரியவர்கள் பாட அதை திரும்ப இசைத்ததால் திருப்பாவையும் மனப்பாடம். அப்பொழுதுதெல்லாம் புள்ளி, கம்பி, பூ, பறவை, மிருகம், பழம் என கோலமிடுவது பழக்கம். அதில் அழகு இருந்தாலும் கண்ணன் கதைகளும் திருப்பாவையும் படிக்க, படிக்க திருப்பாவை பாசுரங்களில் சொல்லப்படும் கண்ணன் கதைகளை மையக் கருவாக வைத்து கோலமிடலாம் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது. அவை இறை உருவங்களாக இருப்பதால் கால் மிதி படாத வண்ணம் பூஜை அறையில் கோலமிட தொடங்கினேன். பல ஆண்டுகளாக மார்கழியில் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் ஆண்டாள் தாயாரின் திருப்பாவை பாசுரங்களுக்கு அதில் ஒரு வரியை தேர்தெடுத்து கோலமிட்டேன். இந்த முறை தாய் திருநாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஓவியக்கலையை கோலமிட எண்ணினேன்.
மாநிலங்களின் ஓவியத்தை கோலமிடுவதும். அதன் சிறப்பும் பற்றி?
பல்வேறு மாநிலங்களின் ஓவியத்தை கோலம் மூலமாக வரைந்தாலும் சில மாநிலங்களை இங்கே சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ராஜஸ்தான், பிச்வாய் என்று அழைக்கப்படும் ஓவியங்கள் இம்மாநிலத்தில் தோன்றிய ஒரு பாரம்பரிய இந்திய கலை பிச்வாய் என்பது சம்ஸ்கிருத வார்த்தை சம்ஸ்கிருதத்தில் பிச் என்றால் பின், வை என்றால் தொங்குதல் பிச்வாய் கலை முதலில் நத்வாராவின் ஸ்ரீநாத்ஜி கோயில்களில் தெய்வங்களுக்கு பின்னால் உள்ள சுவர்களை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டது.
பொதுவாக இயற்கை சாயங்களைப் பயன்படுத்தி துணியில் வரையப்பட்ட பிச்சுவாய்கள் சந்நிதியை அலங்கரிக்கவும் கிருஷ்ணரின் வாழ்க்கையின் வெவ்வேறு பண்டிகைகள் மற்றும் நிகழ்வுகளைக் கொண்டாடவும் பயன்படுத்தப்பட்டன. இந்த பாணியில் உள்ள பெரும்பாலான படைப்புகள் ஸ்ரீநாத் துவாரகை கிருஷ்ணரின் உருவத்தைச் சுற்றி சுழன்று அமைந்துள்ளது. இந்தக் கலையானது கிருஷ்ணரின் மயக்கும் கதைகளின் சித்திரக் கதையாகும்.
பிச்வாய் கலை மேவார் ஜவுளி ஓவியப் பள்ளியைச் சேர்ந்தது. பிரமிக்க வைக்கும் இந்த ஓவியங்கள் கிருஷ்ணரை வணங்கும் வல்லப்பாச்சாரியரின் புஷ்டி மார்க் பிரிவைச் சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டவை.
பீஹார்- மதுபானி அல்லது மிதிலா ஓவியப்பாணி பீஹார் மாநிலத்தில் மதுபானி மாவட்டத்தில் வாழும் பெண்கள் தங்கள் வீட்டுச் சுவர்களில் விழாக்காலங்களில் ஓவியங்களை வரைந்தனர். ராமாயணக் காலத்திலேயே சீதையின் திருமணத்தின் போது பிரத்யேகமான ஓவியர்களால் மாளிகையின் சுவர்களில் இவ்வகை ஓவியங்கள் வரையப்பட்டதாம். மதுபானி ஓவியங்கள் பெரும்பாலும் சிக்கலான வடிவங்கள் மற்றும் தெளிவான வண்ணங்களால் வகைப் படுத்துகின்றன. ஓவியங்களில் இடைவெளி விடாமல் முழுவதும் பூ உருவங்களை வரைகின்றனர். இதுவே இந்த ஓவியங்களுக்குத் தனி அழகைத் தருகின்றன. கண், மூக்கு இவையும் சிறப்பானவை.
அஸ்ஸாம்- கையெழுத்து பிரதி- பாகவதம், புராணங்கள், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் கதைகளின் விளக்கப் படங்களை உடையவவை. பெரும்பாலும் இந்த ஓவியங்களுடன் எழுதப்பட்ட உரையை நிரப்புவதற்காக உருவாக்கப்பட்டன. இந்த ஓவியங்களுக்கு 15-ஆம் நூற்றாண்டில் புனித சங்கரதேவரால் பக்தி இயக்கத்தின் போது ஒரு திட்ட வட்டம் கொடுக்கப்பட்டது.
16-ஆம் நூற்றாண்டிலிருந்து ஒரு துடிப்பான கலை வடிவமாக இருந்தன. இருப்பினும் படிப்படியாக, இந்த ஓவியக் கலாசாரம் குறையத் தொடங்கியது. பொதுவாக வளைவு அல்லது ஜிக்ஜாக் பேனல்களில் வரையப்படுகின்றன. பின்னணி ஒரே வண்ணமுடைய சிவப்பு அல்லது நீலம், சாம்பல், பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது.
கேரளா மியூரல் - பாரம்பரிய தொன்மவியல் சார்ந்த கதை ஓவியங்களாகும். பழங்கால கோயில், தேவாலயம், அரண்மனைகள் ஆகியவற்றில் மியூரல் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இது களமெழுத்து என்னும் சடங்கு வடிவத்திலிருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. களமெழுத்து என்பது தெய்ல உருவங்களைக் கோலமாக இடும் முறையாகும். மேலும் தமிழகத்தின் பல்லவ ஓவியக்கலை வடிவங்களுடனும் சோழர் காலத்து ஓவியங்களுடன் இந்த சுவர் ஓவியங்களுக்கு உறவு இருப்பதாகவும் ஆய்வுகள் வெளியாகியுள்ளன.
ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருப்பு, வெளிர் சிவப்பு, வெளிர் மஞ்சள் போன்ற பல விதமான வண்ணங்களால் மிகவும் அற்புதமானவை இம்மியூரல் ஒவியங்களாகும்.
மகாராஷ்டிரா-குஜராத் வார்லி- வார்லி மக்கள் எனப்படுவோர் எல்லைப் பகுதிகளில் உள்ள மலைப்பாங்கான மற்றும் கடலோர பகுதிகளில் வசிக்கும் பூர்வ குடிப் பழங்குடிகள் ஆவர். இவ்ஓவியக்கலை 2000-முதல் 3000ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.
மேற்கு இந்தியாவில் மிகவும் தொன்மையான பழங்குடியினர்களால் உருவாக்கப்பட்டது. குகைகளில் வாழ்ந்த வார்லி இனப் பழங்குடி மக்கள், வார்லி ஓவியங்களை எளிய அடிப்படை வடிவங்களை கொண்டே வரைகின்றனர். அதாவது வட்டம், முக்கோணம், சதுரம் போன்ற வடிவங்களைக் கொண்டே தாங்கள் காணும் இயற்கை காட்சிகளை வரைகின்றனர். திருமண விழாக்களிலும் இவ்வகை ஓவியங்கள் வரையும் பழக்கம் இம்மக்களிடம் இருந்துள்ளது. வழக்கமாக இவ்வகை ஓவியங்களில் மையக் கருத்தாக காணப்படும் காட்சிகளான வேட்டையாடுதல். மீன் பிடித்தல், வேளாண்மை, திருவிழா, நடனம், மரம்,விலங்குகளாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.