அரங்கம்: புறங்கூறாமை!
மன்னரின் அரண்மனையில் பணிபுரிந்தவர்களுள் "பரமன்' என்றும் "பூபதி' என்றும் இரு பணியாட்கள் இருந்தனர். இவர்களுள் பூபதி எப்பொழுதும் எல்லோரிடத்திலும் குறை கண்டு கொண்டும் அதை உடனே தனது மேலதிகாரிகளிடம் போய் புகார் செய்துகொண்டும் இருந்தான்.
சிறுவர்மணிஅரங்கம்: புறங்கூறாமை!
மன்னரின் அரண்மனையில் பணிபுரிந்தவர்களுள் "பரமன்' என்றும் "பூபதி' என்றும் இரு பணியாட்கள் இருந்தனர். இவர்களுள் பூபதி எப்பொழுதும் எல்லோரிடத்திலும் குறை கண்டு கொண்டும் அதை உடனே தனது மேலதிகாரிகளிடம் போய் புகார் செய்துகொண்டும் இருந்தான்.
மன்னரின் அரண்மனையில் பணிபுரிந்தவர்களுள் "பரமன்' என்றும் "பூபதி' என்றும் இரு பணியாட்கள் இருந்தனர். இவர்களுள் பூபதி எப்பொழுதும் எல்லோரிடத்திலும் குறை கண்டு கொண்டும் அதை உடனே தனது மேலதிகாரிகளிடம் போய் புகார் செய்துகொண்டும் இருந்தான். அதோடு நில்லாமல் சக பணியாளர்களை மிரட்டிக்கொண்டும் இருந்தான். இதனால் பணியாட்கள் அனைவரும் பூபதியைக் கண்டு பயந்தனர். இது அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
காட்சி - 1
இடம் - அரண்மனைத் தோட்டம்
மாந்தர் - பரமன் மற்றும் பூபதி
(அரண்மனைத் தோட்டத்தில் பணியாட்கள் அனைவரும் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். பரமன் பளபளப்பான ஒரு சிறு கல்லைக் கண்டு எடுக்கிறான். பூபதி இதைப் பார்த்து விடுகிறான்)
பூபதி: ஏய், பரமா! இங்க வா! கீழே இருந்து என்ன எடுத்தே? எங்க காட்டு!
(பரமன் அதைக் காட்டுகிறான். அது விலை மதிக்கமுடியாத வைரம் என்பதையும் மன்னரின் ஆபரணத்திலிருந்து அது எப்படியோ விழுந்திருக்க வேண்டும் என்பதையும் அறிந்து கொள்கிறான்.)
பூபதி: அதை எங்கிட்ட குடு! அதை வைத்துக்கொண்டு நீ என்ன செய்யப்போகிறாய்?
பரமன்: என்னவோ செய்து கொள்கிறேன்! உனக்கென்ன?
பூபதி: சரி, நீ கண்டு எடுத்ததற்காக உனக்கு பரிசு தரேன்! இந்தா ஐந்து வெள்ளிகள்! அதை என்னிடம் கொடு! நான் தலைமை அமைச்சரிடம் கொடுத்து விடுகிறேன்!
பரமன்: எனக்கு காசு எதுவும் வேண்டாம்! நானே கொடுத்து விடுகிறேன்!
பூபதி: சரி, இருபது பொற்காசுகள் எடுத்துக்கொண்டு அதை எனக்குக் கொடுத்துவிடு!
(இப்படியே அவன் நூறு பொற்காசுகளுக்கும் மேல் பேரம் பேசியதும் தன் கையில் இருப்பது விலை மதிக்க முடியாத வைரக்கல் என்பதை பரமன் புரிந்துகொள்கிறான். எல்லோரையும் புறம் கூறி மாட்டிவிடும் பூபதியை தண்டிக்க நினைக்கிறான்)
பரமன்: அண்ணே! இப்பொழுது ராகு காலம்! ஆகவே எந்தப் பொருளையும் கொடுக்கவோ வாங்கவோ கூடாது. மூன்று மணிக்குமேல் நீங்கள் இருநூறு பொற்காசுகள் தந்தால் அதை உங்களுக்காக தருகிறேன்!
பூபதி: வேற யார்கிட்டயும் கொடுக்காதே! சரியா மூணு மணிக்கு 200 பொற்காசு கொண்டு வருகிறேன்.
காட்சி - 2
இடம் - அரண்மனைத் தோட்டம்
மாந்தர்கள் - பூபதி, பரமன், தலைமை அமைச்சர், குறள் பித்தன்
(சரியாக மூன்று மணிக்கு இருநூறு பொற்காசுகளை எடுத்துக்கொண்டு பூபதி விரைந்து வருகிறான்)
பூபதி: ஏய், பரமா! எங்கே அந்தக்கல்! இந்தா இருநூறு பொற்காசுகள்!
பரமன்: ஐயோ..,அண்ணே! பத்து நிமிடம் முன்னாலதான் என் சொந்தக்காரருக்கு இருநூற்று ஐம்பது பொற்காசுகளுக்கு அதை விற்றேன்!
(ஆத்திரமடைந்த பூபதி, நேரே தலைமை அமைச்சரிடம் சென்று அரண்மனையிலிருந்து ஒரு பொருளைப் பரமன் எடுத்து வேறு ஒருவரிடம் விற்று விட்டதாகக் கூறுகிறான்)
தலைமை அமைச்சர்: என்ன பரமா! பூபதி கூறுவது உண்மையா?
பரமன்: ஐயா! அது ஐந்து காசு கூட பெறாத சாதாரண கூழாங்கல்! அதை என் உறவினருக்குக் கொடுத்துவிட்டேன்!
பூபதி: (தன்னையும் அறியாமல்) அடப்பாவி! இரண்டாயிரம் தங்கக் காசுகள் பெறுமானமுள்ள வைரக்கல்லை இப்படி இருநூற்று ஐம்பது பொற்காசுகளுக்கு விற்றுவிட்டாயே!
தலைமை அமைச்சர்: (அதிர்ச்சி அடைந்து பூபதியிடம்) முதலில் உன்னைத்தான் சிறையில் அடைக்க வேண்டும்...,இந்த விஷயத்தை நீ ஏன் முதலிலேயே கூறவில்லை என்னிடம்? பிறரைப் பற்றி சதா குறை கூறிக்கொண்டிருக்கும் நீ மட்டும் யோக்கியனா என்ன? நீயும் அதை அபகரிக்கத் திட்டமிட்டுள்ளாய்! அது கிடைக்காத பட்சத்தில் என்னிடம் முறையிட்டுள்ளாய்!
(பரமன் உடனே தன் இடுப்பில் இருந்து வைரக்கல்லை எடுத்து தலைமை அமைச்சரிடம் கொடுக்கிறான்)
பரமன்: ஐயா! நான் இதைத் தங்களிடம் கொடுக்கவே விரும்பினேன்! அவர் பேரம் பேசியதிலிருந்து இது விலை மதிக்கமுடியாத பொருள் என்பதை உணர்ந்து கொண்டேன். தயவு செய்து என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.
(குறள் பித்தன் அங்கு வருகிறார்)
குறள் பித்தன்: நல்ல காரியம் செய்தாய் பரமா! பூபதியின் கையில் சிக்கியிருந்தால் அது இந்நேரம் மறைக்கப்பட்டு இருக்கும்.
(பிற ஊழியர்கள் ஒவ்வொருவராக பூபதியின் குற்றங்களைத் தலைமை அமைச்சரிடம் பட்டியலிட்டு எடுத்துக் கூறுகின்றனர்)
தலைமை அமைச்சர்: (பூபதியை நோக்கி) நீ இத்தனை மோசமானவனா? உன்னைப் பதவியிலிருந்து நீக்குகிறேன்!
குறள் பித்தன்: திருவள்ளுவர் புறங்கூறாமை அதிகாரத்தில்,
"பிறன் பழி கூறுவான் தன் பழியுள்ளும்
திறன் தெரிந்து கூறப்படும்'...
இதன் பொருள்..., "பிறரது குற்றங்களைக் கண்டறிந்து கோள் சொல்பவன், பிறரால் அவன் குற்றங்கள் எடுத்துரைக்கப்பட்டு பழிக்கப்படுவான்' என்பதாகும். ஆகவே "புறங்கூறாமை' மிக நன்று.
பிற பணியாட்கள்: ஆமாம் ஐயா! தாங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மேயே!
திரை