முகப்பு
சிறுவர்மணி

கருவூலம்: பழமை மிகுந்த கோயில் சித்திரங்கள்!

பழங்காலத்திலேயே தமிழகத்தில் ஓவியக்கலை சிறந்து விளங்கியுள்ளதை பல சங்க இலக்கிய நூல்களில் உள்ள குறிப்புகளின் மூலம் அறிய முடிகிறது. தற்போதும் பல நூற்றாண்டுகளுக்கு

Updated On : 28 நவம்பர், 2015 at 4:31 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:09 PM

பழங்காலத்திலேயே தமிழகத்தில் ஓவியக்கலை சிறந்து விளங்கியுள்ளதை பல சங்க இலக்கிய நூல்களில் உள்ள குறிப்புகளின் மூலம் அறிய முடிகிறது. தற்போதும் பல நூற்றாண்டுகளுக்கு முன் வரையப் பட்ட ஓவியங்கள் பலவற்றை கோயில்களில் காண முடிகிறது.

சத்திய வாகீஸ்வரர் கோயில் ஓவியங்கள்.

இந்தக் கோயில் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு என்ற ஊரில் உள்ளது. கி.பி. 11ஆம் நூற்றாண்டில் "வீரமார்த்தாண்டர்' என்ற சேர மன்னரால் "சத்திய வாகீஸ்வரர் ஆலயம்' என்று அழைக்கப்படும் இந்த சிவன் கோயில் கட்டப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

Advertisement

இக்கோயிலின் 9 அடுக்குகளைக் கொண்ட 136அடி ராஜ கோபுரத்தின் உட்பகுதியில் உள்ள சுவர்களில் ராமாயணம், மகாபாரதம், உள்ளிட்ட புராண இதிகாச கதைகளின் நிகழ்வுகள் பல அழகிய ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. தற்சமயம் 1000 ஆண்டுகள் பழமையான இந்த சுவரோவியங்களைப் புனரமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

குற்றாலம் சித்திர சபை (நடராஜர் ஆலயம்) ஓவியங்கள்

"சித்திர சபை' என்னும் இந்த ஆலயம் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் கோயிலுக்கு அருகில் உள்ளது. இச்சபை தனியாக அமைந்துள்ளது. குற்றாலநாதர் கோயில் ஆரம்பத்தில் வைணவ கோயிலாக இருந்து பின்னர் அகஸ்திய மாமுனிவரால் சிவன் கோயிலாக மாற்றப்பட்டதாக தலபுராணம் கூறுகிறது. தமிழகத்தின் நடராஜருக்கான ஐந்து சபைகளில் இது சித்திரசபையாகும். இந்த கோயிலில் இறைவன் ஓவிய வடிவில் காட்சியளிக்கிறார்.

கி.பி. 16ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இந்த சித்திரசபை "பராக்கிரம பாண்டியன்' என்ற மன்னரால் தொடங்கப்பட்டு "உதய மார்த்தாண்ட வர்மன்' என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது என கல்வெட்டு ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வருகிறது. சித்திர சபை பிரமிடுபோல் வடிவமைக்கப்பட்டு மேற்கூரை தாமிர தகடுகளால் உருவாக்கப்பட்டுள்ளது.

சித்திரசபையில் உள்ள 600 ஆண்டுகள் பழமையான ஓவியங்கள் மூலிகை வண்ணங்களால் வரையப்பட்டவை! இங்கு வைணவ கோயிலான குற்றாலநாதர் கோயில் சைவக்கோயிலாக மாற்றப்பட்ட நிகழ்வு, இறைவனின் திருமணக்காட்சி, கஜேந்திர மோட்சம், 63 நாயன்மார்கள், பத்மநாப சுவாமியின் அனந்தசயனக் காட்சி, மதுரை மீனாட்சியம்மனின் திருவிளையாடல், வாலிவதம், ஸ்ரீராமரின் பட்டாபிஷேக காட்சி, ரதி மன்மதன், திருமாலின் அவதார ஓவியங்கள், திருவிளையாடல் புராணக் காட்சிகள், மற்றும் துர்க்கை, பைரவர், பிரம்மன், கணபதி, துவார பாலகர் போன்ற இறை ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.

மேலும் நடராஜரின் திருநடன ஓவியம், ஆனந்த தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், கால்மாறி ஆடிய நடனம், என அழகுற ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. இவற்றுடன் இயற்கை காட்சிகளும் வண்ணமயமாக காட்சியளிக்கின்றன.

தாணுமாலயன் கோயில் ஓவியங்கள்

இந்த சிவன் கோயில் கன்னியாகுமரியிலுள்ள சுசீந்திரத்தில் உள்ளது. ஏழு அடுக்குகளைக் கொண்ட 133 அடி உயர ராஜகோபுரத்தின் உட்பகுதியில் அழகிய சுவரோவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

கி.பி. 1544 ஆம் ஆண்டு கிருஷ்ணதேவராயரின் படைதளபதியும், உறவினருமாகிய "விட்டலார்' என்பவர் தன் சகோதரனுடன் இணைந்து இந்த கோபுரத்தின் ஆதிஸ்தானத்தை விஜய நகர கட்டிட பாணியில் அமைத்துள்ளார்.

336ஆண்டுகளுக்குப் பின்னர் 1881இல்தான் திருவாங்கூர் மன்னர் "விசாகம் திருநாள்' அவர்கள் கோபுரத்தைக் கட்டத் தொடங்கினார். இவரை அடுத்து ஆட்சிக்கு வந்த மன்னர் "மூலம் திருநாள்' அவர்கள் 1888}இல் கட்டி முடித்தார்.

இக்கோபுரத்தின் ஏழு அடுக்குகளின் உட்புற சுவரிலும் 1888 முதல் 1890க்குள் 186 ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மூலிகைகளிலிருந்து எடுக்கப்பட்ட நீலம், கருப்பு, சிவப்பு, மஞ்சள், மற்றும் பச்சை வண்ணங்களைப் பயன்படுத்தி ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இராமாயண காட்சிகள், தலபுராணம், பல்வேறு பெண் தெய்வ உருவங்கள், கடவுள்கள், ரிஷிகள், பெரியபுராண காட்சிகள் மற்றும் திருவாங்கூர் மன்னர்களின் உருவங்களும் வரையப்பட்டுள்ளது.

இவற்றுடன் திருவாங்கூர் மன்னர் காலத்திய காவலர்கள், திவான்கள், உதவியாளர்கள், கோயில் அர்ச்சகர்கள், செய்திகளை அனுப்புவதற்கு பயன்படுத்தப்பட்ட ஓட்டக்காரர்கள் போன்ற சமுதாயம் சார்ந்த ஓவியங்களும் அந்நாளைய ஆடை, ஆபரண முறைகளை தெளிவாக தெரிந்து கொள்ளும் வகையில் நன்கு நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் வரையப்பட்டுள்ளது.

இதுபோன்ற சோழர் கால, பல்லவர் கால, நாயக்கர் கால அழகிய ஓவியங்கள், மதுரை, தஞ்சாவூர் கோயில்களிலும், ஏனைய பற்பல கோயில்களிலும் காணப்படுகின்றன. பெரும்பாலான ஓவியங்கள் அவற்றின் மதிப்பும், பெருமையும் தெரியாமல் பார்வையாளர்களால் சிதைக்கப் பட்டுக் காணப்படுகின்றன. தற்போது பல கோவில்களில் இவற்றைப் புதுப்பிக்கும் பணி நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த வண்ண ஓவியங்களை பாதுகாக்க அனைவரும் முயற்சி செய்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.