ஓர் எழுத்தாளர். அவர் ஆடம்பரமாக உடையணிவதில் ஆர்வமோ, அக்கறையோ கொள்வதில்லை. ஒருமுறை அரசாங்க உயர் அதிகாரி ஒருவர், அவர் நடத்தும் விருந்து ஒன்றுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு அனுப்பியிருந்தார். இதைக்கண்ட எழுத்தாளரின் மனைவி, ""விருந்தின்போது பல பெரிய மனிதர்கள் வருவார்கள். நீங்கள் வழக்கம்போல கோமாளி உடையில் அங்கு செல்லாமல், நல்ல ஆடம்பரமாக உடுத்திக்கொண்டு போங்கள்'' என்று கூறினார். அவரும் விருந்திற்குப் புறப்பட்டபோது வழக்கம்போல் சாதாரண உடையையே அணிந்து விருந்துக்குச் சென்று வந்தார். வீட்டுக்கு வந்ததும் அவரைக் கண்ட அவரது மனைவி கடுங்கோபம் கொண்டார். ""நான் இவ்வளவு சொல்லியும் நீங்கள் விருந்துக்குப் பகட்டாக உடையணிந்து செல்லவில்லையே. அங்கே வந்திருந்தவர்களெல்லாம் உங்களை யாரோ ஒரு பிச்சைக்காரன் என்றுதான் நினைத்திருப்பார்கள்'' என்று மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டார். எழுத்தாளருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அவர் மனைவியிடம், ""அதனாலென்ன! நான் செய்த தவறுக்கு மாற்று ஏற்பாடு செய்துவிடலாம்'' என்று கூறிவிட்டு, தமது அலமாரியிலிருந்த ஆடம்பரமான உடைகளுள் ஒன்றை எடுத்து, அதை ஒரு காகிதத்தில் சுற்றிக் கட்டி, ஒரு சீட்டு எழுதி அத்துடன் இணைத்து, விருந்துக்கு அழைத்திருந்த அந்த நபருக்கு அனுப்பிவிட்டார். அந்தச் சீட்டில், ""அன்புள்ள நண்பருக்கு! தாங்கள் அளித்த விருந்துக்கு நான் மிகவும் எளிமையான உடையணிந்து வந்ததற்காக என் மனைவி மிகவும் வருத்தப்படுகிறாள். அதனால், இந்த என்னுடைய ஆடம்பரமான உடையை அரை மணி நேரம் பார்த்துவிட்டு, திருப்பி அனுப்பி விடுங்கள்'' என்று எழுதியிருந்தார். அந்த எழுத்தாளர் வேறு யாருமில்லை. புகழ்பெற்ற நகைச்சுவை எழுத்தாளர் "மார்க்ட்வைன்'தான்.
ஆதாரம்: "சிரிக்க - சிந்திக்க - மேதைகளின் நகைச்சுவை' என்ற நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.