முகப்பு
சிறுவர்மணி

கருவூலம்: நாகப்பட்டினம் மாவட்டம்

வங்கக் கடலோரம் அமைந்த தமிழக மாவட்டங்களில் நாகப்பட்டினம் மாவட்டமும் ஒன்று. 1991இல் அன்றைய தஞ்சை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு இந்த மாவட்டம் உருவானது.

Updated On : 23 டிசம்பர், 2017 at 11:55 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:55 PM

வங்கக் கடலோரம் அமைந்த தமிழக மாவட்டங்களில் நாகப்பட்டினம் மாவட்டமும் ஒன்று. 1991இல் அன்றைய தஞ்சை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு இந்த மாவட்டம் உருவானது. 2715.83 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தை கிழக்கில் வங்காளவிரிகுடாவும், தெற்கில் பாக் நீரிணையும், பிற பகுதிகளில் திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களும் சூழ்ந்துள்ளன. 
தமிழகத்தின் நில அமைப்பினால் இரண்டாகப் பிரிந்து இருக்கும் மாவட்டம் இது ஒன்றுதான். தரங்கம்பாடிக்கும், நாகப்பட்டினத்திற்கும் இடையே கடற்கரையை ஒட்டி, பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த காரைக்கால் உள்ளது. அதாவது காரைக்காலுக்கு வடக்கே பாதி மாவட்டமும், தெற்கே பாதி மாவட்டமுமாக இரண்டு தனித்தனி பகுதிகளாக அமைந்துள்ளது. 
வடக்கு தெற்காக நீண்டுள்ள இம்மாவட்டத்தில் 187 கி.மீ. நீளத்திற்குக் கடற்கரை உள்ளது. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்டது இப்பகுதிதான். 
நிர்வாக வசதிக்காக நாகப்பட்டினம், மயிலாடுதுரை, சீர்காழி, தரங்கம்பாடி, கீழ்வேளூர், திருக்குவளை, வேதாரண்யம், குத்தாலம் என 8 வட்டங்களாக ((பஅகமஓந) பிரிக்கப்பட்டுள்ளது. "நாகை' என அழைக்கப்படும் நாகப்பட்டினம் (சிறப்பு நிலை நகராட்சி) நகரமே மாவட்ட தலைநகரமாகும். 
பூம்புகார் முற்கால சோழர்கள் காலத்திலும், நாகப்பட்டினம் பிற்கால சோழர்கள் காலத்திலும் முக்கியதுறைமுகமாகவும், வணிக நகரமாகவும், இருந்துள்ளது! ஆனால் இன்று இந்தியாவின் 250 அதிகம் பின்தங்கிய மாவட்டங்களில் நாகப்பட்டினமும் ஒன்று. 

வரலாற்றுச் சிறப்புகள்!

நாகை பகுதியில் கிடைத்த முதுமக்கள்தாழிகள் சங்க காலத்திலேயே மக்கள் வாழ்ந்ததற்கு சான்றாக உள்ளன. 
இந்நிலப்பகுதி பண்டைய சோழநாட்டினை சேர்ந்தது. காவேரிப்பூம்பட்டினம் என்கிற பூம்புகார், முற்கால சோழர்களின் தலைநகரமாகவும், உலகத்தரம் வாய்ந்த வணிகத் துறைமுகமாகவும் இருந்துள்ளது. 
அதன் பின் வந்த பல்லவர்களின் ஆட்சிக்குட்பட்டதாக இம்மாவட்டத்தின் சில பகுதிகள் இருந்துள்ளது. அவர்களின் வீழ்ச்சிக்குப்பின், காலப்போக்கில் மீண்டும் சோழப்பேரரசின் ஒரு பகுதியானது. இதன் பின்னர் வாணிபத்திற்காக இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர்களான பிரிட்டிஷார், டச்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள் என இப்பகுதியில் வணிகத்துடன் ஆதிக்கமும் செலுத்தியுள்ளனர். 
ராஜ ராஜ சோழன் காலத்தில் சோழர்களின் 80 போர்க்கப்பல்களும், பிற நாட்டு வணிக கப்பல்களும் அணிவகுத்து நின்ற இடம் இது! 
ராஜராஜ சோழனின் பட்டப்பெயரான் "க்ஷத்திரிய சிகாமணி' என்ற பெயரில் அமைக்கப்பட்ட பகுதியின் தலைமையிடமாகவும் "நாகப்பட்டினம்' இருந்துள்ளது. மேலும் "சோழர் குலவள்ளிப் பட்டினம்' என்றும் அழக்கப்பட்டது. 
கி.மூ. 3 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பர்மிய நூல் ஒன்றில் நாகை பற்றிய குறிப்புகள் உள்ளன. அந்நூலில் பேரரசர் அசோகர் கட்டிய புத்த விஹார் இங்கு இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
அதே போல் சீனப்பயணி "யுவான்சுவாங்' என்பவரும், தன் நூலில் அந்த புத்த விஹாரைப் பற்றி எழுதியுள்ளார். கிரேக்க அறிஞர் "டோலெமி' என்பவர் இந்நகரை முக்கியமான வணிக மையம் என குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

நில அமைப்பும், நதிகளும்!

வடக்கு தெற்காக நீண்டுள்ள இம்மாவட்டத்தில் ஒரு சில மணல்மேடுகள் தவிர சமவெளிப் பகுதியாக இருக்கிறது. திருச்சிக்கு அருகே காவிரி ஆறு, காவிரி மற்றும் கொள்ளிடம் என இரண்டாகப் பிரிகிறது. இரண்டும் பின்னர் பல கிளைகளாகப் பிரிந்து இம்மாவட்டத்தை கடந்து கடலில் கலக்கிறது. 
காவிரி டெல்டா மாவட்டமான இங்கு காவிரி, கொள்ளிடம், அடப்பாறு, திருமலைராஜன், வெட்டாறு, வீரசோழன் ஆறு ஆகிய நதிகள் பாய்ந்தோடி வளம் சேர்க்கின்றன. 

விவசாயமும், மீன் பிடித்தலும். 

காவிரி டெல்டா பகுதி என்பதால் விவசாயமும், அதைச் சார்ந்த கால்நடை வளர்ப்பும், கடற்கரை மாவட்டம் என்பதால் உப்பு உற்பத்தியும் மீன் பிடித்தலும் பிரதான தொழில்களாக உள்ளன. 
நெல், பருத்தி, பருப்பு வகைகள், தேங்காய், வாழை, கரும்பு உள்ளிட்டவை பிரதான சாகுபடி பயிர்களாகும். 

புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்கள்!

இம்மாவட்டத்தில் இந்துக்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் என மூன்று மதத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆன்மீக பயணமாக இங்கு லட்சக்கணக்கான மக்கள் வருகின்றனர். மாவட்டத்தின் முக்கிய பொருளாதார ஆதாரமாக இந்த புனித ஆன்மீக யாத்திரைகள் உள்ளன. 

நாகூர் தர்கா!

"ஹஸரத் சையித் ஷாஹுல் ஹமீத் தர்கா' என்றழைக்கப்படும் இந்த தர்கா இஸ்லாமியர்களுடன், இந்துக்களும் வணங்கும் புனிதத் தலமாக திகழ்கிறது. 
"நாகூர் ஆண்டவர்' என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் சூஃபி ஞானி "நாகூர் சாகுல் ஹமீது ‘ அவர்களின் சமாதி மீது கட்டப்பட்டுள்ளது. இவர் தன் வாழ்நாளில் பல அற்புதங்களைச் செய்ததுடன் பலரின் உடல்நலக் குறைகளையும் சீர் செய்தார். தஞ்சை மன்னர் "அச்சுதப்ப நாயக்கரின்' உடல் நலக் குறைவையும் சரிப்படுத்தினார். அதனால் மன்னன் அன்புடன் அளித்த நிலத்தில்தான் தர்கா உள்ளது. இன்று பலரும் செய்த திருப்பணிகளால் 5 
ஏக்கர் பரப்பில் 4 நுழைவாயில்கள் தங்கக் குவிமாடங்கள் மற்றும் 5 மினார் கோபுரங்களுடன் கம்பீரமான அழகுடன் காட்சியளிக்கிறது. 
இங்கு கொண்டாடப்படும் "கந்தூரி திருவிழா' மிகவும் பிரசித்தி பெற்றது. 

வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயம்! 

நாகப்பட்டினத்திற்கு 10 கி.மீ. தூரத்தில் வேளாங்கண்ணி, கடற்கரை நகரமான இங்கு அன்னை மேரி மாதா தோன்ற 16ஆம் நூற்றாண்டில் மூன்று அற்புதங்களை நிகழ்த்தினார். அதனால் அன்னை மீது மக்கள் பக்தியும் நம்பிக்கையும் கொண்டனர். 
அதனால் 17 ஆம் நூற்றாண்டில் இந்த தேவாலயம் கட்டப்பட்டது. கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனிதத் தலமான இத்தேவாலயத்திற்கு பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் நம்பிக்கையுடன் வருகை தருகின்றனர். பலரின் உடல் நலக்குறைவு இம்மாதாவை வழிபட்டதால் சீரானதால் "ஆரோக்கிய மாதா' என்று அழைக்கப்படுகிறார். 
இத்தேவாலயத்தின் மூலம் பல கல்வி நிறுவனங்களும் ஆதரவற்றோர் இல்லங்களும், சமூக சேவை மையங்களும் நடத்தப்படுகின்றன. 

புகழ்பெற்ற இந்து ஆலயங்கள்!

காயாரோகண சுவாமி ஆலயம்!

1500 ஆண்டுகள் பழமையான பல்லவர்களால் கட்டப்பட்ட ஆலயம் இது. 180மீ.நீளமும், 75 மீ. அகலமும் கொண்டதாக உள்ளது. இங்குள்ள ரதம் கண்ணாடித்தேர். 

திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் ஆலயம்!

அபிராமி அந்தாத இந்த ஆலயத்தில்தான் பாடப்பெற்றது! மணி விழா, பவளவிழா, சதாபிஷேகம், சஷ்டியப்த பூர்த்தி, போன்ற நிகழ்வுகளை பக்தர்கள் இங்கு வந்து செய்துகொள்கிறார்கள். அதனால் இந்த ஆலயத்தில் தினமும் திருவிழாக்கோலம்தான். 

திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயம்!

இந்த ஆலயத்தில் விஸ்வரூப கல் நந்தி ஒன்று உள்ளது. 14.5 அடி உயரமும் 11.3 அடி அகலமும் 16.4 அடி நீளமும் கொண்ட ஒரே கல்லால் ஆன இந்த நந்தி தஞ்சை பெரிய கோயில் நந்தியைவிடப் பெரியது! தமிழகத்தின் மிகப்பெரிய கல்நந்தி இதுதான். 

வைத்தீஸ்வரன் கோயில்

இத்தல இறைவனை வணங்கினால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. நவகிரக ஸ்தலங்களில் இது செவ்வாய்க்குரிய ஊர். 

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயம்!

வால்மீகியின் ராமாயண காவியத்திலேயே இத்தல இறைவனைப்பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.நவகிரக ஸ்தலங்களில் புதனுக்குரியது. 

மயிலாடுதுறை மயூரநாத சுவாமி கோயில்! 

காவிரிக்கரையில் அமைந்துள்ள காசிக்கு சமமான ஆறு திருத்தலங்களில் ஒன்று என்று சிறப்பித்துக் கூறப்படும் ஆலயம். இங்கு ஐப்பசி மாதம் நடக்கும் சப்தஸ்தான திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. 

விஷ்ணு ஆலயங்கள்! 

ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அதிலும் 24 ஆலயங்கள் இங்கு உள்ளன. சீர்காழிக்கு அருகில் உள்ள திருநாங்கூரில் 11 விஷ்ணு திருப்பதிகள் உள்ளன. 

ஆதீனங்கள்!

தருமபுரம் ஆதீனம் மற்றும் திருவாவடுதுறை ஆதீனம் இரண்டும் இம்மாவட்டத்தில் உள்ளன. 

சுற்றுலாத் தலங்கள்!

கோடிக்கரை வனவிலங்குகள் சரணாலயம்!
மாவட்டத்தின் தென்கிழக்கு முனையில் வங்கக்கடலும், பாக் நீரிணையும் இணையும் பகுதியில் கடற்கரையோரம் இச்சரணாலயம் இருக்கிறது. 17.26 ச.கி.மீ பரப்பளவு கொண்ட இவ்வனப்பகுதி பறவைகள் சரணாலயம், மற்றும் வனவிலங்குகள் சரணாலயம் என இரண்டும் ஒருங்கே அமையப் பெற்றது. 
இதற்கு கிழக்கே 80 கி.மீ. தூரம் வரை சதுப்பு நிலக்காடுகள் உள்ளன. இக்காடுகளில் இரண்டு இடங்களில் கடல்நீர் புகுந்து உப்பு ஏரியாக 30 கி.மீ. நீளம் 5 கி.மீ. அகலத்திற்கு இருக்கிறது. இந்த ஏரியில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை மற்றும் மேல்மருத்தூர் பகுதியில் இருந்து மூன்று நதிகள் சங்கமிக்கிறது. இவை கோடிக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. 
இங்கு உப்பங்கழிகள், சதுப்பு நிலங்கள், அலையாத்திக் காடுகள், புதர்க்காடுகள், கடலோரம், கழிமுகம், நன்னீர்நிலைகள், உவர்நீர்நிலைகள் என பலவகையான உயிரின வாழ்விடங்கள் இப்பகுதியில் வாழ்கின்றன. 
இச்சரணாலயத்தில் புள்ளிமான், காட்டுப்பூனை, நரி உள்ளிட்ட பாலூட்டிகள், 274 வகையான பறவையினங்கள், 150 வகையான தாவரங்களும் இருக்கின்றன. வெளிநாட்டுப் பறவைகளும் 20 சதவீதத்திற்கு மேல் இங்கு வருகின்றன. 
1000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர்கால கலங்கரை விளக்கு சிதிலமடைந்த நிலையிலும், பிரிட்டிஷார் 1890 ஆம் ஆண்டு கட்டிய 13 மீ. உயர கலங்கரை விளக்கும் மற்றும் 45 மீ. உயரம் கொண்ட கோடியக்கரை கலங்கரை விளக்கும் இப்பகுதியில் உள்ளன.

பூம்புகார்!

முக்கிய துறைமுகமாகவும், வணிக மையமாகவும் சங்க காலத்தில் இருந்துள்ளது. இவ்வூரின் சிறப்புகள் சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை போன்ற நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. 
சங்க இலக்கிய நூலான மணிமேகலையில் "காவிரிப்பூம்பட்டினம்' கடல் கொண்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் பூம்புகார் கடற்கரையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் 70 அடி ஆழத்தில் 5 கட்டடப் பகுதிகள் கண்டறியப்பட்டன. 
தற்போது பூம்புகார் கடற்கரையில் சிலப்பதிகாரக் கலைக்கூடம், பாவைமன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கால் மண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சிறுவர் பூங்காவும், கலங்கரை விளக்கமும் இங்கு உள்ளன. 

டேனிஷ் கோட்டை!

கி.பி. 1620 இல் தஞ்சாவூரை ஆட்சி செய்த விஜய ரகுநாத நாயக்கர் டென்மார்க் நாட்டை சேர்ந்தவர்களுக்கு தரங்கம்பாடி பகுதியில் வணிக மையம் அமைக்க அனுமதி கொடுத்தார். பின்னர் டென்மார்க்கின் பிரதிநிதியாக வந்த "ரொனால்ட் கிரேப்' என்பவர் தரங்கம்பாடியையும், சுற்றியிருந்த கிராமங்களையும் விலைக்கு வாங்கினார். அமைதியான மீனவ கிராமமாக இருந்த தரங்கம்பாடியில் கோட்டையும், பிற ஐரோப்பிய பாணி கட்டிடங்களும் கட்டப்பட்டன. இந்தியாவில் இருக்கும் ஒரே ஒரு டென்மார்க் நாட்டினரின் கோட்டை இதுதான். கோட்டைக்குள் அருங்காட்சியகம், 14 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மாசிலாமணிநாதர் ஆலயம், சியோன் தேவாலயம், புதிய ஜெருசலேம் தேவாலயம், கவர்னர் மாளிகை கேட் ஹவுஸ் போன்றவை உள்ளன. 

தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபம்!

தில்லையாடி கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி, மங்களத்தம்மாள் தம்பதி தென்னாப்பிரிக்காவில் வசித்து வந்தனர். அங்கு இத்தம்பதியினருக்கு 1898 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் நாள் பிறந்தவர்தான் தில்லையாடி வள்ளியம்மை! அப்போது தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கமே இருந்தது! அவர்கள் இந்திய மக்களை பலவிதங்களில் துன்புறுத்தினர். அதனால் ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த போராட்டங்களில் அண்ணல் காந்தியடிகளுடன் வள்ளியம்மை சிறு வயதிலேயே பங்கு பெற்று சிறைக்குச் சென்றார். சிறையில் கடுமையான பணிகளைக் கொடுத்துத் துன்புறுத்தியதால் உடல் நலம் கெட்டு 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் நாள் தன்னுடைய பிறந்த நாளில் 16 வயது நிறைவு பெற்றவுடன் உயிரிழந்தார். 
இவருடைய நினைவைப் போற்றும் வகையிலும், தியாகத்தையும், தைரியத்தையும் மதித்து அரசால் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு இவருக்கு மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் சில தகவல்கள்!

செயின்ட் "சீகன் பாக்' அவர்களால் வராந்தா பள்ளிக்கூடமாக தொடங்கப்பட்ட ஒரு பள்ளி இன்று மேல்நிலைப்பள்ளியாக இருக்கிறது. 
40 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வரை பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைபெற்றுள்ளது. 
வேதாரண்யம் அருகே "கோவில்பத்து' கிராமத்தில் ஒரு லட்சம் டன் கொள்ளளவு கொண்ட தானியக் கிடங்கு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. 

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் "காவிரி புஷ்கரம்' என்ற விழா மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இக்கொண்டாட்டம் இவ்வாண்டு (2017) நடைபெற்றது. 
நாகப்பட்டினம் எல்லா மதத்தினரின் ஆன்மீகச் சுற்றுலாவிற்கும், வரலாற்றுச் சிறப்புகளைப் பார்க்கவும், வனவிலங்குகள், மற்றும் பறவைகள் சரணாலயத்தைக் காண்பதற்கும் ஏற்ற சிறந்த இடமாகும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.