முகப்பு
சிறுவர்மணி

பருவநிலை மாற்றம்! : மாநாடுகளும் ஒப்பந்தங்களும்!

உலக வானிலை நிறுவனம் (ரஙஞ), ஐ.நா.சுற்றுச் சூழல் திட்டக்குழு (மசஉட0) ஆகிய இரண்டும் இணைந்து 1988 ஆம் ஆண்டில் உருவாக்கியதே ஐ.நா.பன்னாட்டு பருவநிலை மாற்ற ஆய்வுக்குழு (மசஐடஐஇ).

Updated On : 25 ஆகஸ்ட், 2018 at 10:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:05 PM

உலக வானிலை நிறுவனம் (WMO), ஐ.நா.சுற்றுச் சூழல் திட்டக்குழு (UNEP0) ஆகிய இரண்டும் இணைந்து 1988 ஆம் ஆண்டில் உருவாக்கியதே ஐ.நா.பன்னாட்டு பருவநிலை மாற்ற ஆய்வுக்குழு (UNIPIC).

இது பருவ நிலை சீர்கேடுகளால் உலக அளவில் ஏற்படும் பன்முகத் தாக்கங்களைப் பற்றிய முழுமையான நிலவரங்கள், அவற்றின் அளவீடு, அவற்றை எதிர்கொள்ளுதல், குறைக்கும் வழிமுறைகள் ஆகியன பற்றிய ஆய்வு அறிக்கைகளை (1990 - 2014 கால இடைவெளியில்) ஐந்து விரிவான அறிக்கைகளாக (ARI - AR5) சமர்ப்பித்துள்ளது.

1995 முதல் ஆண்டுக்கு ஒருமுறை ஐ.நா. பருவநிலை மாற்றம் பற்றிய உறுப்பு நாடுகளின் கலந்தாய்வு மாநாடு (COP) வெவ்வேறு மையங்களில் நடத்தப்படுகிறது. 

2005 முதல் ஆண்டுதோறும் நடத்தப்படும்  UNFCE கலந்தாய்வு கூட்டங்களில், உறுப்பு நாடுகள் பருவநிலை பாதிப்புகளை கட்டுப்படுத்த மேற்கொண்ட ,
மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. 
பாரீஸ் பருவ நிலை மாற்ற ஒப்பந்தம்

Advertisement

பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் நோக்கத்திலான சர்வதேச ஒப்பந்தம் பாரீஸ் நகரில் 2015 டிசம்பர் 12 ஆம் தேதி கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா, அமெரிக்கா, சீனா, உட்பட 198 நாடுகள் கையெழுத்திட்டன.  பூமியின் காற்று மண்டலத்தில் கரியமிலவாயு உட்பட பசுமைக்குடில் வாயுக்கள் மேலும், மேலும் அதிகரித்து வருவதைத் தடுத்து நிறுத்தி, அதன் மூலம் புவி வெப்பமடையும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம். அதற்கான முதல் முயற்சியாக நிலக்கரி, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைப்போம் என்று இந்த மாநாட்டில் பங்குகொண்ட நாடுகள் தெரிவித்தன. 

ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம்!

பூமியின் சராசரி  வெப்ப உயர்வு 1880 ஆம் இருந்ததைவிட இந்த நூற்றாண்டின் இறுதியில் 3.5 டிகிரி செல்ஷியஸ் உயர்ந்து விடும்.  இதனால் பருவநிலைகள் விபரீதமாகிவிடும். பயிர்கள் பாதிக்கப்படும்! பஞ்சம், பிணி, வன்முறை போன்றவை தலைவிரித்தாடும்! 

பசுமைக்குடில் வெளியேற்றும் வாயுக்களாலும் வெப்பம் ஏற்படுகிறது! அதாவது புற ஊதாக்கதிர்களை எளிதில்அனுமதிக்கும் கண்ணாடித்தடுப்புகள், பசுமைக்குடில் தாவரங்கள் வெளியேற்றும் வெப்பம் நிறைந்த வாயுக்கள் மறுபடி வளி மண்டலத்திற்குள் கலக்க எளிதில் விடுவதில்லை. இதனாலும் புவி வெப்பம் ஏற்படுகிறதாம்! இவற்றைத் தடுக்க பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதன் மூலம் சராசரி வெப்ப உயர்வை இந்த நூற்றாண்டு இறுதியில் இரண்டு டிகிரிக்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்வது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம். 
பிரச்னை  என்ன?

சுமார் 150 வருடங்களாக தொழில் வளர்ச்சிக்காக காற்று மண்டலத்தில் அளவுக்கு அதிகமாக கரியமில வாயு சேர்வதே பூமி வெப்பமடைவதற்கான முக்கிய காரணம்! உலகம், முன்னேறிய நாடுகள், முன்னேற முயற்சிக்கும் நாடுகள் என இரு பிரிவுகளாக உள்ளது. 

கரியமில வாயுவை குறைத்துக்கொள்வதில் பணக்கார நாடு, ஏழை நாடு என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருமே சமமாக ஈடுபட வேண்டும் என்று பாரீஸ் உடன்பாடு சொல்கிறது. ஆனால் அந்த அணுகுமுறை சரியாக இருக்காது என்று ஒரு கருத்து நிலவியது.  முன்னேறத் துடிக்கும் நாடுகள் பல் வேறு தொழில், உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபடுவதால் அவைகளால் முன்னேறிய நாடுகள் போல் கரியமிலவாயுவை கட்டுப்படுத்தும் செயல்களில் உடனடியாக ஈடுபடமுடியாது என்கிற கருத்தும் நிலவுகிறது.

1997 ஆம் ஆண்டு ஜப்பானில் கியோட்டோ நகரில் நடந்த மாநாட்டில் சரியான அணுகுமுறை பின்பற்றப்பட்டு முன்னேறிய நாடுகள் ஒரு வகையாகவும், வளரும் நாடுகள் இன்னொரு வகையாகவும் பிரிக்கப்பட்டன. 

முன்னேறிய நாடுகள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள் கரியமில வாயு வெளிப்பாட்டை  குறிப்பிட்ட அளவு குறைத்துக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டது. 

வளரும் நாடுகள் மீது அப்படிப்பட்ட நிபந்தனை விதிப்பது நியாயமாகாது என்பதற்காக அவற்று இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. 

பாரீஸ் உடன்பாடு என்ன சொல்கிறது? 

கரியமில வாயு வெளிப்பாட்டைக் குறைத்துக் கொள்வதில் யார் மீதும் கட்டாயம் கிடையாது. இலக்கு கிடையாது. எனினும் உலகின் எல்லா நாடுகளும் கரியமில வாயு வெளிப்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நாடும் எந்த ஆண்டுக்குள் எவ்வளவு குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அந்தந்த நாடே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். 

முன்னேறிய நாடுகளில் நிலக்கரி, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் பயன்பாட்டைக் குறைத்து, சூரிய மின்சாரம், காற்று மின்சாரம், ஆகியவற்றுக்கு மாறும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இந்த முறைக்கு மாறிக் கொள்ள அவற்றிடம் போதுமான நிதி வசதி உண்டு. தகுந்த மாற்றுத் தொழில் நுட்பமும் உண்டு. 

முன்னேறிய நாடுகள் இந்தத் தொழில் நுட்பத்தை வளரும் நாடுகளுக்கு அளிக்க வேண்டும். 
வளரும் நாடுகளுக்கு ஆண்டுதோறும் 10,000 கோடி டாலர் வீதம் நிதி உதவி அளிக்க வேண்டும்.
இது தவிர பூமியின் வெப்ப மண்டலத்தில் அமைந்துவிட்ட நாடுகளுக்கு ஒரு சுமை உண்டு!....அது காற்று மண்டலத்திலிருந்து கரியமிலவாயுவை மேலும் அதிக அளவில் அகற்றுவதற்கான வகையில் நிறைய காடுகளை வளர்ப்பதாகும்!

அமலுக்கு வந்த ஒப்பந்தம்!

பாரீஸ் உடன்பாடு! 

மாநாட்டின் முடிவில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. உடன்பாட்டை குறைந்தது 55 நாடுகள் அங்கீகரித்திருக்க வேண்டும். அங்கீகாரம் அளிக்கும் 55 நாடுகள் வெளியேற்றும் கரியமில வாயு, உலகின் மொத்த கரியமிலவாயுவின் வெளிப்பாட்டில் 55 சதவீதம் மட்டுமே இருக்கவேண்டும். இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்ட தேதியிலிருந்து சரியாக முப்பது நாட்களுக்குப் பிறகு உடன்பாடு அமலுக்கு வரும்.  

உலகின் கரியமிலவாயு வெளிப்பாட்டில் முதல் இரண்டு இடங்களை வகிக்கும், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 2016 இல் உடன்பாட்டுக்கு அங்கீகாரத்தை அறிவித்தன. இந்தியா 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் நாள் மகாத்மா காந்தி பிறந்த நாளில் தனது அங்கீகாரத்தை அறிவித்தது. இதைத் தொடர்ந்து பல ஐரோப்பிய நாடுகளும் தங்களது அங்கீகார்ததை அளித்தன. 

2016 நவம்பர் 3 ஆம் தேதி பாரீஸ் உடன்பாடு அமலுக்கு வந்தது. 

விலகிய அமெரிக்கா!

நிதி ஒதுக்கீடு சுமையாக இருப்பதாகக் கூறி பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலகுவதாக புதிய அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப் 2017 ஆம் ஆண்டில் அறிவித்துவிட்டார். 
பாரீஸ் உடன்படிக்கையின் 

ஐந்து முக்கியக் கோட்பாடுகள்!

1. உலக நாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் முதல் உலகளாவிய பருவநிலை ஒப்பந்தம் இது! புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அனைத்து நாடுகளும் தமது புதை படிவ எரிபொருட்களின் பயன்பாட்டை படிப்படியாகக் குறைக்க வேண்டும். 

2. புவி வெப்ப அதிகரிப்பை ஆண்டுக்கு இரண்டு டிகிரிக்கு குறைவாக கட்டுப்படுத்துவது. 

3. வளர்ந்த பணக்கார நாடுகள் இத்திட்டத்தை ஏழை நாடுகள் அமல் படுத்துவதற்கு உதவியாக ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர்கள் வீதம் 2020 ஆம் ஆண்டு வரை நிதியுதவி அளிக்க வேண்டும்.

4. நாடுகள் தன்னார்வமாக இது தொடர்பான தத்தம் செயல் திட்டங்களை, திட்டமிட்ட இலக்குகளை உறுதிப்படுத்த வேண்டும். 2023 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுதி செய்யப்பட்ட இலக்குகள் மறு சீராய்வுக்கும், தேவைப்பட்டால் போதிய திருத்தங்களுக்கும் உட்படுத்தப்பட வேண்டும். 

5. 2050 -2100 காலத்திற்குள் உலக "கார்போ நியூட்ராலிடி' பூஜ்யம் அளவை எட்ட வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.