கதைப் பாடல்: பச்சைக்கிளியும் சிறுவனும்!
செல்வன் என்று ஒரு சிறுவன் சென்றான் ஒரு நாள் மாந்தோப்பு -அவன்கையில் அழகாய் ஒரு கூண்டு!
செல்வன் என்று ஒரு சிறுவன்
சென்றான் ஒரு நாள் மாந்தோப்பு -அவன்
கையில் அழகாய் ஒரு கூண்டு!
கிளைதனில் கண்டான் ஒரு கிளியை!
பச்சைக்கிளியே இங்கே வா
பண்பாய் உன்னுடன் பழகிடுவேன்
அச்சம் ஏதும் இல்லாமல்
அன்பாய் வீட்டில் இருந்திடலாம்!
கழுத்து மணியும் நான் தருவேன்
காலுக்கு அணியும் நான் தருவேன்!
பழுத்த பழங்கள் நான் தருவேன்
வெள்ளிக்கூண்டில் வசித்திடுவாய்!
வெள்ளிக்கூண்டால் என்ன பயன்? - வான்
வெளியில் பறந்திட இயன்றிடுமா?
விருப்பப்பட்ட மரங்களிலே
விரைந்து அமர இயன்றிடுமா?
தேடிப் பழத்தை அடைந்தால்தான்
தேடலில் உள்ள மகிழ்ச்சி வரும்!
எளிதாய் எல்லாம் கிடைத்தாலோ
உழைப்பின் மதிப்பும் குறைந்து விடும்!
எனக்குப் பிடித்தவை இன்மரங்கள்
இயற்கைக் காற்று, நற்சூழல்! - நான்
பறக்கும் அழகைப் பார்த்து ரசி!
பரவசப்படு! என் சுதந்திரத்தால்
அவரவர் எல்லையை மதியுங்கள்
அன்பெனும் பெயரில் தொல்லை ஏன்?
பச்சைக் கிளியின் உரிமைக் குரலை
மதித்தான் செல்வம் செவி கொடுத்து
மரத்தில் பழுத்த சுவைக் கனியை - மூக்கால்
பறித்துப் போட்டது சிறுவனுக்கு! - செல்வம்
புன்னகையோடு விடை பெற்றான்! - வானில்
பறந்து சென்றது பச்சைக் கிளி!