அன்பின் வடிவாம் குருநானக்
அன்றைய பொழுது ஓர் ஊரில்
இனிதாய் நல்வழி காட்டுதற்கு
இசைந்தே வந்தார் இரவினிலே!
தங்கி இருந்தார் ஓரிடத்தில்
தகவல் தெரிந்து அவ்வூரின்
தலைவன் பெரிய பணக்காரன் - சமயத்
தலைவரைக் கண்டு கை தொழுதான்!
""இந்த உலகில் என்னைப் போல்
எல்லையில்லாச் செல்வத்தைக்
கொண்டவன் என்று எவனுமில்லை!
கோடிக்கணக்கில் பணம் பொருட்கள்!.....
....உதவி ஏதும் தேவையென்றால்
உடனே எனக்குச் சொல்லுங்கள்!
எல்லாம் முடியும் என்னாலே
எதையும் செய்வேன் பணத்தாலே!''
""தேவை எனக்குச் சிறு உதவி'' - என
குரு நானக் வாய் திறந்தார்!
""எதையும் தருவேன் இப்போதே
எல்லாம் எனக்குத் துரும்பேதான்!'' - அவர்
பையில் இருந்து ஓர் ஊசி எடுத்துப்
பணக்காரன் தன் கையில் கொடுத்தார்!
பழைய ஊசி அதுவாகும் - அதைப்
பார்த்தான் எதுவும் விளங்கவில்லை!
""இதை நீ பொறுப்பாய் வைத்திடுவாய்
இவ்வுலகம் விட்டு மேல் உலகம்
இன்னொரு நாளில் வரும்போது - அங்கே
இருக்கும் என்னிடம் தந்திடுவாய்! ''
....""இறந்த பின்னாலே எதுவும் நாம்
எடுத்துச் செல்ல முடியாதே!
இச்சிறு ஊசிக்கும் வாய்ப்பில்லை!
எதற்கு இந்தச் சோதனையோ?''
""எல்லாம் முடியும் என்னாலே
எதையும் செய்வேன் பணத்தாலே
என்றே முழங்கும் பணக்காரா!...
இதுவா உன்னால் முடியாது?''
அவனும் உடனே தலைகுனிந்தான்
அகந்தையை நீக்கித் தெளிவடைந்தான்!
இருந்ததை எல்லாம் எளியோர்க்கு
ஈந்தான்!!.... சேர்த்தான் புண்ணியத்தை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.