கருவூலம்: மேற்கு வங்க மாநிலம்
இந்த மடம் ஹூக்ளி ஆற்றின் மேற்குக் கரையில் நாற்பது ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. ராமகிருஷ்ணா மடம் மற்றும் ராமகிருஷ்ணா மிஷனின் தலைமையகமாக உள்ளது.
சென்ற இதழ்த் தொடர்ச்சி.......
பேலூர் மடம்! - கொல்கத்தா
இந்த மடம் ஹூக்ளி ஆற்றின் மேற்குக் கரையில் நாற்பது ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. ராமகிருஷ்ணா மடம் மற்றும் ராமகிருஷ்ணா மிஷனின் தலைமையகமாக உள்ளது.
Advertisement
அழகான சுற்றுச் சூழலுடன் கூடிய அமைதியான இடம். எல்லா மத மக்களும் இங்கு வந்து இந்த மடம் அளிக்கும் அமைதியையும் ஆனந்தத்தையும் அனுபவிக்கிறார்கள்.
இது ராமகிருஷ்ண பரமஹம்சரின் தலைமை சீடரான சுவாமி விவேகானந்தர் அவர்களால் நிறுவப்பட்டது.
இந்த அமைதியான வளாகத்தில் ஸ்ரீராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர், மற்றும் ஸ்ரீசாரதா தேவி ஆகியோருக்கான கோயில்கள் உள்ளன.
இந்த மடம் அதன் சிறந்த கட்டடக் கலைக்குப் புகழ் பெற்றது. இந்த வளாகத்திற்குள் ஒரு அருங்காட்சியகம் மற்றும் பல இணைக்கப்பட்ட கல்வி நிறுவனங்களும் உள்ளன.
இந்த பேலூர் மடம் புனித யாத்திரைக்கான முக்கிய இடமாகத் திகழ்கிறது.
பிர்லா கோளரங்கம்! - கொல்கத்தா
ஆசியாவின் மிகப் பெரிய கோளரங்கம், மற்றும் உலகின் இரண்டாவது பெரிய கோளரங்கம் இது. இக்கோளரங்கம் ஜவாஹர்லால் நேரு அவர்களால் 1963 - ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியாவில் இருக்கும் மூன்று கோளரங்கங்களில் இதுவும் ஒன்று. பிர்லா பிளானட்டோரியத்தில் ஒரு மின்னணுஆய்வகம், மற்றும் ஒரு வானியல் கேலரியும் உள்ளன. அதில் ஓவியங்கள் மற்றும் வானியல் மாதிரிகள் உள்ளன.
இந்திய அருங்காட்சியகம்! - கொல்கத்தா
உலகின் ஒன்பதாவது பழமையான அருங்காட்சியகம் மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய அருங்காட்சியகம் இதுவே. 1814 - ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இங்கு ஓவியங்கள், புத்தரின் நினைவுச் சின்னங்கள், பண்டைய சிற்பங்கள், ஆபரணங்கள், ஆயுதங்கள் எனப் பலவகையான பொருட்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் 35 காட்சியகங்கள் உள்ளன.
டார்ஜீலிங்!
மேற்கு வங்காள மாநிலத்தின் புகழ்பெற்ற அழகிய மலைவாசஸ்தலம். கொல்கத்தாவிலிருந்து 700 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பசுமையான தேயிலைத் தோட்டங்கள் நிறைந்தது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 2000 மீ உயரத்தில் அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் இங்கு குளிர்ந்தே காணப்படுகிறது. டார்ஜீலிங் தேயிலை புகழ்பெற்றதாகும். பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட தேவாலயங்கள், மற்றும் அழகிய கட்டடங்கள் இங்குள்ளன.
உலகின் மூன்றாவது உயர்ந்த சிகரம் இது. இங்கிருந்து பார்த்தால் கஞ்சன்ஜங்கா சிகரம் தெளிவாகத் தெரியும்! தாவரவியல் பூங்காக்கள், மிருகக்காட்சி சாலை, ரங்கீத் பள்ளத்தாக்கு, உள்ளூர் சந்தையில் காணப்படும் கைவினைப் பொருட்கள், ஆகியவை ரசிக்கத்தக்கவை. ரோப்வே போன்ற பொழுது போக்கு அம்சங்களும் இங்குண்டு.
டார்ஜீலிங் இமயமலை ரயில்வே! - டார்ஜீலிங் பொம்மை ரயில்!
டார்ஜீலிங் இமயமலை ரயில்வே என்று சொல்லப்பட்டாலும், இது டார்ஜீலிங் பொம்மை ரயில் என்றே அன்புடன் அழைக்கப்படுகிறது. இது குறுகிய பாதை ரயில் ஆகும்.
இந்த ரயில் பாதை 1881 - ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இன்று இந்தியாவில் மீதமுள்ள சில நீராவி எஞ்ஜின்கள் கொண்ட ரயில்களில் இதுவும் ஒன்று. இந்த ரயில்பாதை 1999 - ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய தளமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த ரயில் பாதை மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள நியூ ஜல்பைகுரியிலிருந்து சிலிகுரி, குர்சியோங் மற்றும் கூம் வழியாக டார்ஜீலிங் வரை 80 கி.மீ. தூரம் செல்கிறது. கடல் மட்டத்திலிருந்து 7400 அடி உயரத்தில் இருக்கும் இடம்தான் "கூம்.' இந்த ரயிலில் பயணம் செய்வது மகிழ்ச்சியான ஓர் அனுபவமாகும். இந்த ரயில் ஐந்து பெரிய பாலங்களையும் 450 - க்கும் மேற்பட்ட சிறு பாலங்களையும் 870 - க்கும் மேற்பட்ட வளைவுகளையும் கடந்து செல்கிறது.
சிலிகுரி!
வடகிழக்கு இந்தியாவிற்கு நுழைவாயில் என சிலிகுரி அழைக்கப்படுகிறது. கோயில்களுக்கும், தேயிலைத் தோட்டங்களுக்கும் புகழ் பெற்ற இடமாகும். அண்டை நாடுகளான நேபாளம், பூட்டான், மற்றும் வங்காள தேசம் ஆகியவற்றிற்கு வான்வழி, தரைவழிச் சாலை, மற்றும் தொடர்வண்டிப் போக்குவரத்துக்கான சந்திப்பாகவும் உள்ளது.
சிலிகுரியில் சலுகரா மடாலயம், இஸ்கான் கோயில், மஹானந்தா வீர் வனவிலங்கு சரணாலயம், அறிவியல் மையம் உள்ளிட்ட பல இடங்கள் உள்ளன.
லிகுரி பாதை!
இது வடகிழக்கு இந்தியாவை இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் 21 கி.மீ. அகலம் கொண்ட குறுகிய பகுதியாகும். இதன் இருபுறமும், நேபாளம் மற்றும் வங்காள தேசம் நாடுகள் அமைந்திருக்கின்றன. இதன் வடபகுதியில் பூட்டான் உள்ளது. இப்பாதை 1947 - இல் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் உருவாக்கப்பட்டது.
இப்பாதை இந்தியாவிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. எல்லைப் பாதுகாப்புப்படை மற்றும் மேற்கு வங்காள காவல்துறை ஆகியவற்றால் கண்காணிக்கப்படுகிறது.
மஹானந்தா வீர் வனவிலங்கு சரணாலயம்!
மஹானந்தா மற்றும் தீஸ்தா நதிகளுக்கு இடையில் இச்சரணாலயம் அமைந்துள்ளது. இந்த பரந்த வனப்பகுதிகளில் அரிய வகை மலை ஆடு, சீட்டல் மான்கள், குரைக்கும் மான்கள், காட்டுப் பூனைகள், சாம்பார் வகை மான்கள், புலி, யானை காட்டெருமை போன்ற பலவகை விலங்குகளும் பறவைகளும்
காணப்படுகின்றன.
ஜல்தபாரா தேசியப் பூங்கா!
சிலிகுரி பகுதியில் ஜல்தபாரா தேசிய பூங்கா உள்ளது. இமயமலையின் அடிவாரத்தில் உள்ள, "டோர்சா' ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 215 ச.கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள இப்பூங்காவில் ராயல் பெங்கால் புலிகள், யானைகள், ஒற்றைக் கொம்பு காண்டா மிருகங்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. யானை சவாரி வசதியும் உள்ளது. செப்டம்பர் முதல் மே வரை இப்பூங்காவைப் பார்வையிட ஏற்ற காலமாகும்.
பக்ஸா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் ரிசர்வ் பூங்கா!
பூட்டான் மற்றும் அஸ்ஸாம் எல்லையில் மேற்கு வங்கத்தின் வடகிழக்கு மூலையில் பக்ஸா தேசியப் பூங்கா அமைந்துள்ளது. இது 769 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. சிஞ்சுலா மலைத்தொடரின் ஒரு பகுதியான பக்ஸா மலைகளில் அமைந்துள்ளது. இவ்வனப்பகுதியில் பல்வேறு ஊர்வன வகைகளும், பல்வேறு விதப் பறவையினங்களும் அடர்ந்த மரங்களும், மூலிகைத் தாவரங்களும், நீர்வாழ் உயிரினங்களும், நீர்த்தாவரங்களும் காணப்படுகின்றன.
பார்ப்போரை பிரமிப்பில் ஆழ்த்தும் வங்காளப் புலிகள், சிறுத்தைப் பூனை, காட்டுநாய்கள், மிகப் பெரிய அணில்கள், ஆசிய யானைகள் உள்ளிட்ட விலங்குகளும் காணப்படுகின்றன.
குரிசியோங்!
வெள்ளை மல்லிகைகளின் நிலம் என்று அழைக்கப்படும் "குர்சியோங்' டார்ஜீலிங் அருகில் அமைந்துள்ள ஒரு மலைவாசஸ்தலம் ஆகும். நீர்வீழ்ச்சிகளும், பெளத்த ஆலயங்களும், கோயில்களும் நிறைந்த அமைதியான மலைவாசஸ்தலம். ஏப்ரல், மே மற்றும் ஆகஸ்டு முதல் அக்டோபர் வரையிலான காலம் குரிசியோங்கைச் சுற்றிப் பார்க்க ஏற்ற காலம்.
சாந்தி நிகேதன்!
மேற்கு வங்காளத்தில், கொல்கத்தாவிலிருந்து 180 கி.மீ. தொலைவில் பிர்பூம் மாவட்டத்தில் போல்பூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.
இவ்விடத்தில் ரவீந்திரநாத் தாகூர் 1862 - ஆம் ஆண்டில் புகழ்பெற்ற "விஸ்வபாரதி பல்கலைக் கழக' நகரை நிறுவினார். சாந்தி நிகேதனில் அமைந்துள்ள "விஸ்வ பாரதி' பல்கலைக்கழகம் 1952 - ஆம் ஆண்டு முதல் இந்திய மத்திய அரசின் கீழ் மத்திய பல்கலைக்கழகமாக செயல்படுகிறது. அமைதியும், பசுமையும் சூழ்ந்த அழகிய இடம்.
டூவர்ஸ்!
கிழக்கில் டீஸ்டா நதி முதல் மேற்கில் சங்கோஷி நதிவரை பூட்டானைச் சுற்றியுள்ள இந்தியாவின் நிலப்பகுதி டூயர் என்று அழைக்கப்படுகிறது. டூவர்ஸ் மஹனாடா வனவிலங்கு சரணாலயம், சம்சிங் மற்றும் சுந்தலேகோலா, சப்ராமரி வனவிலங்கு சரணாலயம் போன்றவை இங்கு அவசியம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.
கலிம்போங்!
கலிம்போங் ஒரு மலைவாசஸ்தலம். கிழக்கு இமயமலையின் அடிவாரத்தில் கொல்கத்தாவுக்கு வடக்கே சுமார் 630 கி.மீ. தூரத்தில் 1250 மீ. உயரத்தில் அமைந்துள்ளது.பெளத்த மடங்கள், தேவாலயங்கள், திபெத்தியக் கைவினைப் பொருட்கள், மலையேற்றம், இயற்கை அழகு போன்றவற்றிற்குப் புகழ் பெற்றது.
ஜாங்டோங் பால்ரிஃபோ, பிராங் கோம்பா மடாலயம், தொங்கா கோம்பா மடாலயம், டர்பின் தாரா மலை, கத்தாலை நர்சரி, மோர்கன் ஹவுஸ், தியோலோ ஹில் போன்ற இடங்கள் இங்கு பார்க்க வேண்டியவை.
முர்ஷிதாபாத்!
வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரம். ஹசர்துவாரி அரண்மனை, நிஸ்மத் இம்பம்பரா, ஃபுட்டி மசூதி, வாசிப் மன்சில், மோதி ஜூல் ஆகியவை இங்கு பார்த்து ரசிக்க வேண்டியவை.
மிரிக்!
ஒரு பெரிய ஏரியின் கரையில் அமைந்துள்ளது மிரிக். இது ஒரு மலை நகரம். தேயிலைத் தோட்டங்கள், பழத் தோட்டங்கள், மடாலயங்கள் என பார்த்து ரசிக்கப் பல இடங்கள் உள்ளன.
சாகர் த்வீப்! (கங்கா சாகர்)
சாகர்ட்விப் ஒரு சிறிய தீவு. இது சுந்தர்பான்ஸ் தீவுகளின் ஒரு பகுதியாகும். புனிதமான கங்கை நதி வங்காள விரிகுடாவில் சங்கமிக்கும் இடத்தில் இந்தத் தீவு அமைந்துள்ளது. ஆன்மிக ரீதியாக மிகப் புகழ் பெற்ற இடம்.
சப்ராமரி வனவிலங்கு சரணாலயம்.
இந்த வனவிலங்கு சரணாலயம் கோருமாரா தேசிய பூங்காவிலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. கஞ்சன் ஜங்கா, மற்றும் இமயமலைச் சிகரங்கள் பின்னணியில் வனவிலங்குகளை அவற்றின் இயற்கையான வாழ்விடத்தில் பார்த்து ரசிக்கலாம்.
விஷ்ணுபூர்!
மேற்கு வங்காளம் மாநிலத்தின் ஒரு சிறிய நகரம். டெரகோட்டா கோயில்களுக்கு புகழ் பெற்றது. இந்நகரம் கட்டடக்கலை, இசை, மற்றும் கைவினைப் பொருட்களுக்காக சுற்றுலா பயணிகளுக்கிடையே பிரபலமாக உள்ளது.
ராஸ்மஞ்சா கோயில், ஜார்பங்லா கோயில், ஷியாம்ராய் கோயில், லால்ஜி கோயில், மதன்மோகன் கோயில் போன்றவை விஷ்ணுபூரின் புகழ்பெற்ற சுற்றுலா இடங்களாகும்.
செயின்ட் பால்ஸ் கதீட்ரல்! - கொல்கத்தா
கொல்கத்தா மைதானத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ளது. 1847 - இல் கட்டி முடிக்கப்பட்டது. அற்புதமான கலைப்படைப்புகள் கொண்டது.
அன்னை தெரஸாவின்
"அன்னை வீடு' - கொல்கத்தா
அன்னை தெரஸா அவரது தொண்டுக்காக மிகவும் மதிக்கப்படுகிறார். அவரது கல்லறை, அவர் வாழ்ந்த படுக்கையறை, மற்றும் அவரது வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஒரு சிறிய அருங்காட்சியகம் ஆகியவற்றை அன்னை இல்லத்தில் காணலாம். இங்கு அவரது கையால் எழுதப்பட்ட கடிதங்கள், ஆன்மிக அறிவுரைகள் அடங்கிய பல பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
மக்ரங்கா த்வீப்!
இத்தீவை கிங்ஃபிஷர் தீவு என்றும் அழைப்பர். இச்சாமதி என்ற நதியின் நடுவில் அமைந்துள்ளது. இதன் ஒருபுறம் இந்தியாவும், மற்றொரு புறம்
பங்களாதேஷும் உள்ளன. இயற்கையை நேசிப்பவர்களுக்கு ஏற்ற இடம்.
பக்காலி கடற்கரை!
மேற்கு வங்கத்தின் கடற்கரையில் அமைந்துள்ள சிறிய கடற்கரை நகரம் இது. ஹென்றி தீவு, ஜம்பு தீவு, ஃபரேசர்கஞ்ச் விண்ட் பார்க், பிஷாலட்சுமி, முதலைப் பண்ணை, என பல இடங்கள் உள்ளன.
டயமண்ட் ஹார்பர் ரைச்சக்!
ஹூக்ளி நதி வங்காள விரிகுடாவை சந்திக்கும் இடத்தில் டயமண்ட் ஹார்பர் கட்டப்பட்டுள்ளது. பிரபலமான துறைமுகம்.
நவத்விபா
நவத்விபா என்பது கங்கைக் கரையில் அமைந்துள்ள ஒன்பது தீவுகளின் தொகுப்பாகும். இந்த சிறிய கிராமப்புற அமைப்பில் கிட்டத்தட்ட 200 கோயில்கள் உள்ளன. ஸ்ரீ சைதன்யா, சரஸ்வத் மடம், இஸ்கான் கோயில், ராதாராணி கோயில், ஸ்ரீதேவானந்தா கபாடியா மடம், ஸ்ரீமகாபிரபு மந்திர், சிவ மந்திர் ஆகிய கோயில்கள் அவற்றில் சில.
காளிகாட் காளி கோயில்!
கொல்கத்தாவின் காளிகாட் என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. கல்கத்தா என்ற பெயர் காளிகாட் என்ற பெயரிலிருந்தே வந்ததாகக் கருதப்படுகிறது. இத்தலத்தைப் பற்றிய குறிப்பு 15 மற்றும் 17 - ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கிய நூல்களில் காணப்படுகிறது.
தட்சிணேஸ்வர் காளி கோயில்!
கொல்கத்தா நகரில் ஹூக்ளி நதியின் கிழக்குக் கரையை ஒட்டி தட்சிணேஸ்வர் என்ற ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. இங்கே காளி "பவதாரிணி' யாக வழிபடப்படுகிறார். இக்கோயில் 1855 - ஆம் ஆண்டு ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த ராணி ரஷ்மோனி என்பவரால் கட்டப்பட்டது. கருவறையில் அன்னை பவதாரிணி காட்சி தருகிறாள். பழமையான வங்காள கட்டட முறைப்படி இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் வளாகத்தில் 12 சிவன் கோயில்கள் இருக்கின்றன. பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் 30 வருடங்கள் இந்த காளி கோயிலில் தனது சீடர்களுடன் வாழ்ந்திருந்தார்.
மேற்கு வங்காளம் வித்தியாசமான புவியியல் அமைப்பைக் கொண்ட மாநிலம். வடக்கே பனி மூடிய இமயமலை, தெற்கே அலையடிக்கும் வங்காள விரிகுடாக்கடல், இடையில் கங்கை பாயும் சமவெளிப்பகுதி, என பல சுவையான புவியியல் அமைப்பு கொண்டது. இங்கு சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. இயற்கையை நேசிப்பவர்களுக்கும், ஆன்மிகப் பயணம் செல்பவர்களுக்கும் ஏற்ற உன்னதமான மாநிலம்!
முற்றும்