மரங்களின் வரங்கள்!: பன்னீர் மரம்!
நான் தான் பன்னீர் பேசறேன். எனது தாவரவியல் பெயர் மில்லிங்டானியாஹார்டென்னிசிஸ், அறிவியல் பெயர் கயேட்டார்டா ஸ்பீசிஆச என்பதாகும். காஃபி குடும்பத்தைச் சேர்ந்தவன்.
குழந்தைகளே நலமா....
நான் தான் பன்னீர் பேசறேன். எனது தாவரவியல் பெயர் மில்லிங்டானியாஹார்டென்னிசிஸ், அறிவியல் பெயர் கயேட்டார்டா ஸ்பீசிஆச என்பதாகும். காஃபி குடும்பத்தைச் சேர்ந்தவன். தமிழகத்தில் காண்பதற்கு மிக அரிதாகி விட்ட மரங்களுள் நானும் ஒருவன். எனக்கு மரமல்லி மரம், கார்க் ட்ரீ, மல்லி மரம் என வேறு பெயர்களும் உண்டு. நான் செங்குத்தாக வளருவேன். என் இலை, பூ, வேர் அனைத்தும் உங்களுக்கு பயன் தருபவை. என் இலை காண்பதற்கு முருகனின் வேல் போன்ற வடிவத்திலிருக்கும். நான் முருகப் பெருமானுக்கு உகந்த மரமாவேன். சில திருக்கோயில்களில் என் புஷ்பம் சிவன் மற்றும் விஷ்ணுவுக்கு உகந்த மலராகவும் கருதப்படுகிறது.
என் நறுமணம் கொண்டே என்னை நீங்கள் அடையாளம் காணலாம். வெள்ளை நிறத்தில் அளவில் சற்று நீண்டு என் மலர் தரும் நறுமணம் உங்கள் மனதுக்கு புத்துணர்வையும், அமைதியையும் தரும். மலர்கள் பூக்கும் காலங்களில், என் மரத்தினடியில் பூ மெத்தைப் போல பரவி, அந்த இடங்களில் சுகந்த நறுமணத்தை நான் பரப்புவேன். பன்னீர் புஷ்பங்களை இயற்கையில் அருட்கொடை என்றே சொல்லலாம். சங்கக் காலத்தில் என் மலரின் பெயர் மெளவல். என் மலரின் அரும்புகளை மகளிரின் பல் வரிசைக்கு உவமையாக காட்டியிருக்காங்க.
Advertisement
பன்னீர் மலர்கள் உள்ள இடத்தில், எதிர்மறை எண்ணங்கள் விலகி தன்னம்பிக்கை எண்ணங்கள் உருவாகும், பன்னீர் புஷ்பங்கள் உடலுக்கும், மனதுக்கும் சக்தியைக் கொடுக்குமுன்னு அந்தக் காலத்தில் சொல்லி வெச்சிருக்காங்க குழந்தைகளே. பொதுவாக, பன்னீர் மரங்கள் வீட்டில் இருந்தாலோ பெண்களுக்கு ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் நீங்கி விடும் என்கின்றனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் என் அருமையை உணர்ந்திருக்காங்க. அவங்க, விஷமாகும் உணவுகளால் ஏற்படும் நோய்களைப் போக்கவும், காய்ச்சலை கட்டுப்படுத்தவும், நுரைநீரல் டானிக்காவும் என் மரத்தின் வேரை அரைத்து கஷாயமாக்கி பயன்படுத்தறாங்க. என் மலரிலிருந்து ஆஸ்த்துமா நோயைப் போக்க மருந்து தயாரிக்கறாங்க. தனி அடையாளம் கொண்ட என்னை நறுமணத்துக்காகவும், அழகுக்காகவும், வீட்டுத் தோட்டங்கள் தெருக்களில் வளர்க்கலாம். என் பூக்களில் இருந்து பெறப்படும் சாறிலிருந்து தைலம் தயாரிக்கலாம் அல்லது அதனுடன் இனிப்பு சுவை கலந்து குடித்தால் நல்ல ஆரோக்கியம் பெறலாம். இந்தத் தைலம் மூட்டு எலும்புகள், முதுகு வலிகள் போன்ற உடம்பில் ஏற்படும் அனைத்து வலிகளுக்கும் சிறந்த நிவாரணி.
என் பூவிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யை முகத்திலோ உடம்பிலே தேய்தால் சுருக்கங்கள், கருமை நிறம், தழும்புகள் நீங்கும். என் பூவை நீருடன் சேர்த்து வேக வைத்து, அந்த நீரை வடிகட்டி அதனை தினம் அருந்தி வந்தால் காய்ச்சல் வராது, உங்களுக்கு நோய் எதிர்ப்பு திறனைக் கொடுக்கும் மற்றும் சளி தொல்லையால் ஏற்படும் கோளாறுகள் வராது, எலும்புகளுக்கு உறுதியைக் கொடுக்கும். என் காய்ந்த பன்னீர் மலர்களை, சாம்பிராணி புகையிலிட்டு அந்த வாசனையை நீங்க சுவாசித்தீர்களேயானால் உங்களுக்கு சுவாசப் பிரச்னையே இருக்காது. என் மரத்தின் கிளைகள் மரப் பகுதி, தக்கை போன்ற தன்மையுடையதால் மருந்துகள் சேமிக்கப்படும் குப்பிகளில், காற்றை புகவிடாமல் தடுக்க தக்கையாக பயன்படுத்தறாங்க. என் பட்டையை நீரிலிட்டு மூன்றில் ஒரு பங்காக தண்ணீர் சுண்டி பருகி வந்தால், வயிற்றுப் போக்கு நீங்கும்.
திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வழங்கப்படும் திருநீற்றுப் பிரசாதம் என் இலையில் தான் வைத்து வழங்கப்படுகிறது என்பது எனக்கு சூட்டிய மணி மகுடம். மேலும் தொன்மையான தருமை ஆதீனம் போன்ற சைவத் திருமடங்களிலும், சன்னிதானங்கள் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் அளிக்கும் போது திருநீற்றுப் பிரசாதங்களை என் இலைகளிலேயே வைத்து வழங்குவர். நான் தஞ்சாவூர் மாவட்டம், திருச்சோற்றுத்துறை, அருள்மிகு சோற்றுத்துறை நாதர், நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி, ஆரயண்யேஸ்வரர் ஆகிய திருக்கோயில்களில் தலவிருட்சமாக இருக்கிறேன். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
(வளருவேன்)