மரங்களின் வரங்கள்!: வாசனை திரவியங்களின் அரசன்- அகில் மரம்
என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா?
நான் தான் அகில் மரம் பேசுகிறேன். நான் அக்விலேரியா அகல்லோச்சா இனத்தையும், "தைமீலியேசீ' குடும்பத்தையும் சேர்ந்தவன். நான் பர்மா மற்றும் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் குறிப்பாக, அஸ்ஸாமிலுள்ள காசி, காரோ, நாகா மலைக்காடுகளில் வளருகிறேன். நான் பழங்காலந்தொட்டே தமிழக மக்களுடன் தொடர்புடையவன். நான் சுமார் 60 அடி முதல் 75 அடி வரை வளருவேன். எனக்கு அகர், அகலி சந்தனம், அக்காலி சந்தனம், கிருமிஜா, கிரிம்ஜக்தா, ஈகிள்வுட், அனர்யகா, விஸ்வரூபகம், என பல பெயர்கள் உண்டு. உங்கள் நண்பர்கள் பலருக்கு அகில்னு பேர் இருக்கும். அகில் என்றால் வாசனை நிரம்பியவன், சுத்தமானவன் என்று பொருள். என் இலை, வேர், கிளை, கட்டை என எல்லா பகுதிகளும் மதிப்பு மிக்கது. என் பூக்கள் பசும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். என்னை மரங்களின் கடவுள் என்றும், வாசனை திரவியங்களின் அரசன் என்றும், பசுமைத் தங்கம் என்றும் 3000-ஆம் ஆண்டுகளாக உலக மக்களால் போற்றப்படுகிறேன்.
என் கட்டை இலேசான இனிப்பும், கசப்பு கலந்த சுவை உடையது. உங்கள் உடலின் எந்தப் பகுதியில் வீக்கம் இருந்தாலும் அதைக் குறைக்கும் ஆற்றல் எனக்கு உண்டு. என் மரத்தில் ஒருவித பிசின் இருக்கு, இதுவே அகில் எனப்படுகிறது. என்னை மருத்துவ முறைப்படி பக்குவம் செய்து சாப்பிட்டால் நரை, திரை போன்ற முதுமைக்கால சருமக் குறைபாடுகள் நீங்கி, சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருப்பேன். என்னிடமிருந்து எடுக்கப்படும் தைலம் "அகர் அக்தர்' எனப்படுகிறது, இது வாசனை திரவியமாக பயன்படுது,
நான் கொடுக்கும் இனிய மணம் இந்து, முஸ்லிம், கிறிஸ்த்துவ மற்றும் புத்த சமய வழிபாடுகளுக்கும், தியானங்களுக்கும் பெரிதும் பயன்படுது. மனிதம் எனும் மரத்திற்கு கிளைகள் தான் மதம். அதற்கு ஆணி வேர் அன்பு தான் குழந்தைகளே. நான் மருந்தாகவும், வாசனை திரவியமாகவும், சோப்பு, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி, சாம்பிராணி மற்றும் இதர அழகு சாதனப் பொருள்கள் தயாரிக்கவும், இயற்கை மருத்துவத்திலும் பெரிதும் பயன்படறேன். அகர்வாசனை திரவியமானது பண்டைக் காலத்தில் எகிப்து நாட்டிலிருந்து ஆரம்பித்து ரோமன் மற்றும் அரபு நாடுகளில் மிகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. எகிப்தியர்கள் நான் இறந்த பின்பும் அவர்களுக்கு உதவுவதாக நம்பினர்.
உலகத்தின் முதல் வேதியியல் நிபுணர் என்று சொல்லப்படும் சப்புதியே என்பவர் தான் என் மரத்திலிருந்து வாசனைப் பொருள்களைத் தயாரித்த பெருமைக்குரியவர். என் கட்டை மணமுடையது. என் மரப்பட்டை தூளை தணலிலிட்டால் வரும் புகையானது மிகவும் நறுமணம் கொண்டதாகும்.
என் பட்டையிலுள்ள நார் காகிதம் செய்யவும், கயிறு திரிக்கவும் பயன்படுகிறது. என் மரத்தில் உருவாகும் பிசின் வடிவதில்லை. சற்று முதிர்ந்த மரத்தில் சில இடங்கள் கருப்பாக இருக்கும். அதில் ஒருவித எண்ணெய்ப் பிசின் உள்ளது. பிசின் கிளைகள் கலக்கும் இடத்தில் சாதாரணமாக உண்டாகும் ஒரு விதக் காளான் அல்லது பூஞ்சை மரத்தில் பற்றிக் கொண்டு வளருவது தான் அகில் உண்டாவதற்குக் காரணம். நல்ல மரங்களில் காளான், பூஞ்சை அதிக அளவில் பற்றியிருக்கும். இது வாசனைப் பொருளாகவும் பயன்படுது. இதை துணிகளில் தூவி வைத்தால் பூச்சி பிடிக்காது. ஊதுபத்தி, அகர்பத்தி செய்யவும் என் பிசின் பயன்படுகிறது. என்னை அம்ப்ரோசியா எனும் வண்டு அதிகம் தாக்கும். ஆனால், என் பிசின் அவைகளை ஓட ஓட விரட்டும். எனக்கு பாதுகாப்பு அரணே என் பிசின் தான்.
என்னிடமிருந்து கல்லீரல் சம்மந்தமான நோய்கள், காது, மூக்கு, தொண்டை தொடர்பான நோய்கள், ஆஸ்துமா மற்றும் இருமல் போன்ற நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கிறாங்க. என் கட்டையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் விட்டு நன்கு சுண்டக்காய்ச்சி அதை குடித்து வந்தால் உங்களுக்கு பித்தம் சம்பந்தமான நோய்கள் இருக்கவே இருக்காது. என் கட்டையை நன்றாகக் கொளுத்தினால் ஏற்படும் புகையை மூக்கு மற்றும் வாய் வழியாக உள்ளுக்குள் இழுப்பதால் கல்லீரல் தொடர்பான வியாதிகள் போயே போய் விடும். உங்களுக்கு வாந்தி ஏற்படும் போது இவ்வாறு புகை பிடித்தால் வாந்தி நின்று விடும். என் கட்டையிலிருந்து தயாரிக்கப்படும் தைலம் மூக்கு, தொண்டை, காது போன்ற உறுப்புகளில் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும்.
நான் திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசல் அருள்மிகு கண்ணாயிரநாதன் திருக்கோயிலில் தலவிருட்சமா இருக்கேன். மிக்க நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
(வளருவேன்)