முகப்பு
சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!

நான் தான் களா மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் கரைசா கராண்டஸ். நான் அப்போசைனேசி குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு கிளா, கிளாய் என்ற வேறு பெயர்களும் உண்டு.

Updated On : 11 ஜனவரி, 2020 at 5:26 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 8:57 PM

களா மரம்!

குழந்தைகளே நலமா ?

நான் தான் களா மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் கரைசா கராண்டஸ். நான் அப்போசைனேசி குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு கிளா, கிளாய் என்ற வேறு பெயர்களும் உண்டு. நான் செம்மண்ணிலும், மலைகளிலும் புதர் போல் வளருவேன். என் இலைகள் பசுமையாக இருக்கும். என் பூக்கள் வெண்மையாகவும், காய்கள் சிவப்பு நிறமாகவும், பழங்கள் கருப்பு நிறத்திலும் இருக்கும். என் பூவும், காயும் புளிப்புச் சுவையுடையவை. என்னை "இயற்கை மருத்து கடை' என்றும் சொல்லலாம். ஏன்னா, என் பூ, காய், பழம், வேர் ஆகியவை மருத்துவ குணமுடையவை. என் பூக்கள் மல்லிகையைப் போன்று நல்ல மணமுடையதாக இருக்கும். அவை சிறு சிறு கொத்தாக, கிளைகளின் நுனி மற்றும் பக்கங்களில் உருவாகும்.

என் இலை பட்டுப் பூச்சிகளுக்கு உணவாகிறது. என் இலைகளை தேவையான அளவும் நீரிலிட்டு கொதிக்க வைத்து, காலை, மாலை தினமும் குடித்து வந்தால், விட்டு விட்டு வரும் காய்ச்சல், வாத நோய்கள், மூட்டு வாதம், பக்க வாதம், காது தொடர்பான நோய்கள் நீங்கும். இதைக் கொண்டு வாய் கொப்பளித்தால் பல் மற்றும் ஈறு நோய்கள் குணமாகும்.

Advertisement

குழந்தைகளே, உங்களில் சிலருக்கு இரவு நேரத்தில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கும், வருந்தாதீங்க. இது பெரும்பாலும் மனத் தளர்ச்சி, தாழ்வு மனப்பான்மை, பெற்றோர்களின் கண்டிப்பு மற்றும் பயத்தினால் தான் ஏற்படுகிறது. என் இலைகளை உலர்த்திப் பொடி செய்து அரை கிராம் வீதம் தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்னைத் தீரும். என் இலைப் பொடியினை பசு வெண்ணெயில் கலந்து தினமும் சாப்பிட்டால் மூல நோய் ஓடிடும்.

என் காயை இஞ்சியுடன் சேர்த்து ஊறுகாயாக்கி உண்டால் பசியின்மை, சுவையின்மை, இரத்தப் பித்தம், தணியாத தாகம், பித்தக் குமட்டல் நீங்கும். என் பழத்திலிருந்து ஒரு விதமான பிசுபிசுப்பான திரவம் வரும், இது ஜெல்லி மற்றும் ஜூஸ் வகைகள் தயாரிக்கப் பயன்படுத்தறாங்க. பழம் இனிப்பு சுவை உடையது. என் பழத்தில் நீர், புரதம், கொழுப்பு, மாவுப் பொருள், உலோக உப்புகள், வைட்டமின் சி, போன்றவை உள்ளன. தோல் பதனிடவும், சாயம் ஏற்றவும் என் பழம் உதவுது. என் தண்டுப் பகுதியிலிருந்து சீப்பு, கரண்டி போன்றவை தயாரிக்கலாம். என் வேரினை அரைத்துப் பசையாக்கி தண்ணீரில் கலந்து தெளித்தால் பூச்சிகள் அண்டாது.

என் பூ கண் நோய்களைக் குணப்படுத்தும். என் பூவைக் கசக்கி சாறு எடுத்து விடியற் காலையில் மூன்று துளிகள் வீதம் கண்ணில் விட்டு வந்தால், கண் படல நோய்கள், பூ விழுந்திருத்தல் அனைத்தும் குணமாகும். என் காயை புளித்த மோரில் உப்பு சேர்த்து ஊறவைத்து தயிருடன் சேர்த்துப் பச்சடி செய்தும், மோருடன் கலந்து ஊறுகாய் செய்தும் சாப்பிட்டால் நன்கு பசி ஏற்படும், உண்ட உணவும் எளிதில் செரிக்கும். என் பழத்தில் வைட்டமின் "சி' சத்து அதிகமுள்ளது. இது இரப்பையை வலுவாக்கும். ஸ்கர்வி நோயை குணமாகும். இரத்தத்திலுள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும். உடம்பு வலியைப் போக்கி, உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். என் வேர் துவர்ப்புச் சுவை உடையது.

என் வேரில் சாலிசிலிக் அமிலம், கார்டியாக் க்ளைகோசைட் உள்ளது. இது இரத்த அழுத்தைக் குறைக்கும். உலர்த்தி காலை மாலை அரை முதல் ஒரு கிராம் வரை உண்டு வந்தால் வயிற்று வலி தீரும். இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், வெந்நீரில் கலந்து குடித்தால் வயிற்றுப் புழுக்கள் நீங்கும். பேறு காலத்தில் என் வேரை நீர் விட்டு காய்ச்சி இரண்டு வேளை பெண்கள் குடித்து வந்தால் பிள்ளை பெற்றவுடன் ஏற்படும் பிரச்னைகள் அனைத்தும் நீங்கும்.

நான் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், அருள்மிகு உலகம்மை உடனுறை பாபநாச சுவாமி, சங்கரன்கோயில், கரிவலம்வந்தநல்லூர் அருள்மிகு பால்வண்ணநாதர், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, பூவனாதர் ஆகிய திருக்கோயில்களில் தலவிருட்சமாக இருக்கேன். மரங்கள் இல்லையென்றால் மகிழ்ச்சி இல்லை. மரங்கள் மகிழ்ச்சி நிலைக்குமிடம். மிக்க நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.