மரங்களின் வரங்கள்!: புண்ணிய விருட்சம் இத்தி மரம்
நான் தான் இத்தி மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் ஃபைகஸ் டிங்டோரியா என்பதாகும். நான் மல்பெரி குடும்பத்தைச் சேர்ந்தவன்.
குழந்தைகளே நலமா?
நான் தான் இத்தி மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் ஃபைகஸ் டிங்டோரியா என்பதாகும். நான் மல்பெரி குடும்பத்தைச் சேர்ந்தவன். தொன்மையான மரங்களுள் நானும் ஒருவன். எனக்கு இச்சி, குருக்கத்தி என்ற வேறு பெயர்களுமுண்டு. குறிஞ்சி நிலப் பகுதியில் நான் அதிகமாக வளர்ந்திருந்தேன். நான் 50 அடி உயரம் வரை வளர்ந்து, நெருக்கமான பசுமையான இலைகளுடன், குடை போல் பரந்து விரிந்த கிளைகளுடன் இருப்பேன். அதாவது, ஆலமரம் போன்றே நானும் விழுதுளைக் கொண்டிருப்பேன். என் விழுதுகள் நாரால் பின்னப்பட்ட ஊஞ்சல் போலிருக்கும். நான் பறவைகளுக்கு அடைக்கலமும், உங்களுக்கும், விலங்கினங்களுக்கும் இளைப்பாற நிழலும், குளுமையும், உண்ண கனியும் தரும் மரமாவேன்.
ஆலமரத்தின் இலைகளைப் போன்று, நீண்ட இலைகளுடன், என் கிளைகளில் அத்திப் பழங்கள் போன்று சிறிய பழங்கள் கொத்துக்கொத்தாக கனிந்து காணப்படும். என்னுடைய இலைகள், வேர்கள், பட்டை, காய்கள் மற்றும் கனிகள் மருத்துவ பலன்கள் மிக்கவை. நான் உங்கள் உடல் நலனில் அக்கறை கொண்ட நல்ல நண்பன்.
Advertisement
என் காய்களை சேகரித்து, அவற்றை நன்கு கழுவி, லேசாகக் கீறி, எண்ணெய் கத்திரிக்காய் போல், நெய்யிலிட்டு வதக்கி சாதத்தில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்னையே இருக்காது, உடலும் நலம் பெறும். மேலும், பிஞ்சுக் காய்களை மென்று சாப்பிட்டால் வயிறு மற்றும் உள்ளுறுப்பு புண்கள் ஆறும். வயிற்றுப் போக்கையும் குணமாக்கும். இரத்தத்தில் வரும் பாதிப்புகளை விலக்கி, உடலில் பித்த, கப குறைபாடுகளையும் சீர் செய்யும்.
குழந்தைகளே, பெண்களின் உடல் உபாதைகளுக்கு நான் கண்கண்ட மருந்து. அதிக இரத்தப் போக்கு காரணமாக, பெண்களின் உடலில் இரத்த அளவு குறைந்து, இரத்த சோகை பாதிப்பு ஏற்பட்டு உடல் வெளுத்து காணப்பட்டால், என் மரப்பட்டைகளை சிறிது நீரிலிட்டு, கொதிக்க வைத்து நன்கு சுண்டி வந்ததும், அந்த நீரை பருகி வந்தால், அதிக இரத்தம் வெளியேறிய நிலை மாறி இரத்த சோகை நோய் ஏற்படவே ஏற்படாது.
உங்களுக்கு அளவு கடந்த சூடு மற்றும் கிருமிகளின் பாதிப்பு காரணமாக வயிற்றுப் போக்கு இருக்கா, வருந்தாதீங்க, எங்கிட்ட மருந்திருக்கு. என் பட்டைகளை நீரிலிட்டு நன்கு காய்ச்சி, அந்த நீரை பாதிப்பு உள்ள நாட்களில் மூன்று வேளை அருந்தி வந்தால் வயிற்றுப் போக்கு சட்டென நின்று விடுவதுடன், உடல் சூடும் போய்விடும், காய்ச்சல் நோய்கள் நெருங்காது.
என் பட்டைகளைத் தூளாக்கி, அதனை தேங்காய் எண்ணெய்யில் குழைத்து, உடலில் வீக்கம், சரும அரிப்பு மற்றும் காயங்களின் மேல் தடவி வந்தால் அவைகள் இருந்த இடம் தெரியாது. மேலும், நன்கு காய்ச்சிய என் மரப்பட்டை நீரை வாயில் கொப்புளித்து வந்தால் வாய் புண் ஓடி விடும், வாய் துர்நாற்றமும் இருக்காது, தொண்டைப்புண் மற்றும் சுவாச பாதிப்புகளும் விலகி விடும்.
உங்களில் யாருக்காவது உடலில் உள்ள சத்து குறைபாட்டால், தலைசுற்றலுடன் மயக்கம் வந்தால் உடனே என் மரப்பட்டை நீரை பருகச் சொல்லுங்கள், அவங்க உடனே மூச்சுத் தெளிந்து இயல்பு நிலைக்கு திரும்பி உங்களுக்கு நன்றியும் சொல்வாங்க. நாக்கில் சுவையின்மை ஏற்பட்டு உங்களுக்கு உணவு உண்பதில் வெறுப்பு ஏற்பட்டால், துவர்ப்பு சுவையுடைய என் பழத்தை சாப்பிடுங்க, பசி ஏற்படும். சிவகங்கை மாவட்டம், பாகனேரியில் அருள்மிகு விண்ண வண்ண பெருமாள் கோயில் முன் நான் இருக்கேன். என்னை அங்குள்ள மக்கள் புண்ணிய விருட்சமுன்னு அழைக்கிறாங்க.
என் மரத்தடியில் நீங்கள் அமர்ந்தால் உங்கள் மனதிற்கு புத்துணர்வு கிடைக்கும் என்பது உறுதி. கண்ணைக் காப்பது இமைகள், ஆனால், மண்ணைக் காப்பது மரங்கள். உழைக்கும் கரங்களே, உருவாக்குங்கள் மரங்களை.
(வளருவேன்)