முகப்பு
சிறுவர்மணி

கருவூலம்: அஸ்ஸாம் மாநிலம்!

குவஹாத்தியிலிருந்து வடமேற்கே 24 கி.மீ. மிகவும் பழமையான தொலைவில் அமைந்துள்ள ஆன்மிக யாத்திரைத் தலம் ஹஜோ! பிரம்மபுத்திரா நதிக்கரையில் அமைந்துள்ளது.

Updated On : 13 பிப்ரவரி, 2021 at 6:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:01 AM


சென்ற இதழ் தொடர்ச்சி....

ஹஜோ!

குவஹாத்தியிலிருந்து வடமேற்கே 24 கி.மீ. மிகவும் பழமையான தொலைவில் அமைந்துள்ள ஆன்மிக யாத்திரைத் தலம் ஹஜோ! பிரம்மபுத்திரா நதிக்கரையில் அமைந்துள்ளது. ஹஜோவின் முழுப்பகுதியும் பிரமிக்க வைக்கும் வகையில் கோயில்களும், புனிதத்தலங்களும் உள்ளன. அவற்றில் பஞ்ச தீர்த்தம் என்ற இடத்திலுள்ள ஹயக்ரீவ மாதவ கோயில், கேதாரீஸ்வரர் கோயில் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

Advertisement

"மொலாய்' காடு!

இந்தக் காடு ஜோர்ஹாட் மாவட்டத்தில் "கோகிலா முக்' அருகே உள்ள பிரம்மபுத்திரா ஆற்றில் உள்ள மஜீலி தீவில் உள்ள ஒரு காடு ஆகும்.

இந்தியச் சுற்றுச்சூழல் ஆர்வலரும், வனத்துறை ஊழியருமான ஜாதவ் பயேங்கின் செல்லப் பெயரான "மொலாய்' என்ற பெயர் இந்தக் காட்டுக்கு சூட்டப்பட்டுள்ளது.

1980 - ஆம் ஆண்டு ஜோர்ஹாட் மாவட்ட, "கோகிலா முக்' இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் அரசாங்கத்தின், "சமூகக் காடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினரும், மற்றும் பலரும் இணைந்து மரக்கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது. 1983 - ஆம் ஆண்டு இப்பணி கைவிடப்பட்டது! முயற்சியில் சற்றும் மனம் தளராத "மொலாய்' சுமார் 30 ஆண்டுகளாக தன்னந்தனியாய் மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்துள்ளார்! இவர் பராமரித்த இக்காடு இப்போது சுமார் 1300 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கியதாக பரந்து நிற்கிறது.

இன்று மொலாய் காடு, வங்காளப் புலிகள், இந்திய காண்டா மிருகம், 100 - க்கும் மேற்பட்ட விலங்கினங்கள், பறவைகள், தாவர இனங்கள் உள்ளிட்ட பல்லுயிர் பெருக்கப் பகுதியாக எழிலோடு விளங்குகிறது.

"மொலாய்' என அன்புடன் அழைக்கப்படும், "ஜாதவ் பயேங்' கின் விடாமுயற்சி, தைரியம், நல்லெண்ணம் ஆகியவற்றைப் பாராட்டி அரசு உட்பட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் அவருக்குப் பல விருதுகளை வழங்கி கெளரவித்துள்ளனர்.

ஒற்றைக் கொம்பு காண்டா மிருகம்!

காண்டா மிருகம் நிலத்தில் வாழும் மிகப் பெரிய விலங்குகளில் ஒன்று. தடித்த தோலும், (சுமார் 1.5 - 5.0 செ.மீ.) பருத்த உடலும் கொண்டது.

நன்கு வளர்ந்த காண்டா மிருகம், 2200 கிலோ முதல் 3000 கிலோ வரையிலும் எடை கொண்டது. காண்டா மிருகம்,

ஆப்பிரிக்காவிலும், இந்தியாவிலும், ஜாவா, சுமத்ரா தீவுகளிலும் மட்டுமே காணப்படுகிறது. ஆப்பிரிக்கக் காண்டாமிருகத்திற்கு இரண்டு கொம்புகள் உண்டு. இந்தியக் காண்டாமிருகத்திற்கு ஒரு கொம்பு மட்டுமே உண்டு. தற்போது இவை 2700 மட்டுமே உள்ளன. இவற்றில் சுமார் 1800 காண்டாமிருகங்கள் அஸ்ஸாம் வனப்பகுதியிலேயே உள்ளன. இவற்றின் ஆயுட்காலம் சுமார் 60 வருடங்களாகும். இவற்றின் கொம்புகள், நகங்கள், முடிகள் போன்றவற்றிலுள்ள "கெரட்டின்' என்ற பொருளால் ஆனது.

யானைக்கு அடுத்தபடியாக காண்டாமிருகமும், நீர்யானையும்தான் உலகிலேயே எடை மிகுந்த தரை விலங்குகள் ஆகும்.

முகாப்பட்டு!

முகாப்பட்டு என்பது அஸ்ஸாம் மாநிலத்தில் நெய்யப்படும் பட்டு வகைகளுள் ஒன்று ஆகும். இந்திய புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இந்தப் பட்டானது நெடுநாள் உழைக்கும். பளபளப்பானது. முற்காலத்தில் அரச குடும்பத்தினர் பயன்படுத்தி வந்தனர். ஒவ்வொரு முறை துவைத்த பின்னும் ஒளிரும் தன்மை அதிகரிக்கும்! அஸ்ஸாமின் பெருமைக்குரிய அடையாளம் இந்த முகாப்பட்டு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.