முகப்பு
சிறுவர்மணி

கருவூலம்!: மணிப்பூர் மாநிலம்!

வடகிழக்கு இந்தியாவின் ஏழு மாநிலங்களில் மணிப்பூர் மாநிலமும் ஒன்று. இந்நிலப்பகுதி பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் மன்னராட்சிக்கு உட்பட்ட "மணிப்பூர் ராஜ்யம்' ஆக விளங்கியது.

Updated On : 3 ஜூலை, 2021 at 6:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:03 AM


வடகிழக்கு இந்தியாவின் ஏழு மாநிலங்களில் மணிப்பூர் மாநிலமும் ஒன்று. இந்நிலப்பகுதி பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் மன்னராட்சிக்கு உட்பட்ட "மணிப்பூர் ராஜ்யம்' ஆக விளங்கியது. 1949-இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1956 வரை இந்தியாவின் ஒன்றியப் பகுதியாக (மசஐஞச பஉததஐபஞதவ) இருந்தது. 1972 - இல் தனி மாநிலமாக ஆனது.

இதன் தலைநகரம் இம்பால் நகரமாகும். மணிப்பூரின் எல்லையை ஒட்டி இந்திய மாநிலங்களான நாகலாந்து, மிசோரம், அஸ்ஸாம், மாநிலங்களும், கிழக்கில் நம் அண்டை நாடான மியான்மரும் சூழ்ந்து உள்ளன.

இந்த மாநிலத்தில் பெரும்பாலான குடிமக்கள் "மைத்தி' இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள், "மணிப்பூரி' என்று அழைக்கப்படும் மைத்தி மொழியைப் பேசுகின்றனர். இம்மொழி 1992 - ஆம் ஆண்டில் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது.

Advertisement

22,327 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இம்மாநிலம் சிறப்பான நிர்வாகத்திற்காக 16 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் ஒரு பதட்டமான எல்லையோர மாநிலமாகக் கருதப்படுகிறது. இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள் இம்மாநிலத்திற்குள் செல்ல, தில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள வட்டார அயல்நாட்டினர் பதிவு அலுவலகத்தில் "கட்டுப்படுத்தப்பட்ட பகுதி' க்கான நுழைவு அனுமதிச் சீட்டு பெற வேண்டும். இந்த சிறப்பு அனுமதியைப் பெற்றவர்கள் பத்து நாள்களுக்கு மணிப்பூரில் தங்கலாம். அத்துடன் வெளிநாட்டுப் பயணிகள் விமானத்தின் மூலமாய் மட்டுமே இம்பாலினுல் அனுமதிக்கப்படுவர். அவர்கள் இம்பால் நகரத்தைத் தவிர வேறு எந்த இடத்திற்கும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

மணிப்பூர் வரலாறு பண்டைய இந்திய இராஜ்ஜியங்களில் மணிப்பூர் ராஜ்ஜிமும் ஒன்று. கி.பி. 1754 - இல் மணிப்பூர் ராஜ்ஜியத்தை பர்மா ராஜ்ஜியத்தினர் கைப்பற்றினர். அதனால் மணிப்பூரை மீட்க மணிப்பூர் மன்னர் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியிடம் ராணுவ உதவியைக் கோரினார்.

1824 - 1826 ஆண்டுகளில் நடைபெற்ற முதலாம் ஆங்கிலேய பர்மியப் போரின் முடிவில் பர்மா ராஜ்ஜியத்திடமிருந்து மணிப்பூர் ராஜ்ஜியம் மீட்கப்பட்டது. இப்போரின்போது செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி 1824 முதல் மணிப்பூர் ராஜ்ஜியம் பிரிட்டிஷ் இந்தியாவிற்கு அடங்கிய சுதேச சமஸ்தானமாக இருந்தது. மேலும், 1824 - இல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் வகுத்த துணைப்படை திட்டத்தை ஏற்றுக் கொண்ட மணிப்பூர் ராஜ்ஜிய மன்னர்கள், ஆண்டுதோறும் கம்பெனிக்காரர்களுக்கு கப்பம் செலுத்தி பிரிட்டிஷ் இந்தியாவின் பாதுகாப்பில் இருந்தனர்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் 1949 - இல் மணிப்பூர் ராஜ்ஜியம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

மணிப்பூர் மாநிலத்தின் சில தனிச் சிறப்புகள்!

நிங்தோஜா பேரரசு!

இப்பேரரசு (கி. பி. 33 - 1972 வரை ஆட்சி செய்தது. "நோங்டா லைரன் பாகாங்கபா' என்ற மன்னரால் நிங்தோஜா பேரரசு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அரசகுலம்தான் உலகின் மீக நீண்ட காலம் ஆட்சி செய்த அரசகுலமாகும்!
இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானியப் படைகளுக்கும், கூட்டுப் படைகளுக்கும் போர் நடைபெற்றது. ஜப்பானியப் படைகளால் இம்பால் நகரைக் கைப்பற்ற முடியவில்லை. அப்போரில் காலமான இந்திய போர்வீரர்களுக்கும், கூட்டுப்படை வீரர்களுக்கும் நினைவிடங்கள் மணிப்பூரில் உள்ளன.

மணிப்பூரி நடனம்!

மணிப்பூரி நடனம் மிகப் பாரம்பரிய நடனமாகும். இந்த நடனத்தை ஆடுபவர்கள் காலில் சலங்கை கட்ட மாட்டார்கள், பாட்டும் தனித்துவமாக, தெளிவான உச்சரிப்புடன், உச்ச ஸ்தாயியில் இருக்கும். பங்க், டோலக், டோல், கஞ்சீரி என்னும் நான்கு வகையான கருவிகள் நடனத்தின்போது இசைக்கப்படுகின்றன.

மொழி!

மணிப்பூரி மொழியே இம்மாநிலத்தின் ஆட்சி மொழியாகும். மணிப்பூர், அஸ்ஸாம், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 15 லட்சம் பேர்கள் மணிப்பூரி மொழியைப் பேசுகிறார்கள். இதைத்தவிர 29 வகையான பழங்குடி இனத்தவரின் மொழியும் இங்கு பேசப்படுகிறது.

சங்காய் திருவிழா!

இத்திருவிழாஆண்டுதோறும் நவம்பர் மாதத்தின் கடைசி பத்து நாள்களில் கொண்டாடப்படுகிறது. மணிப்பூர் மாநில சுற்றுலாத் துறை இதனை ஏற்று நடத்துகிறது. இத்திருவிழாவின் போது உள்ளூரில் தயாரான கைவினைப் பொருட்களும், கலைப்பொருட்களும், ஓவியங்களும், பாரம்பரியமான உணவு வகைகளும் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.

வங்கேய் பீ

மணிப்பூர் மாநிலத்தில் "வங்கேய்' என்னும் ஊரில் நெய்யப்படும் துணிவகைதான் "வங்கேய் பீ' என்று அழைக்கப்படுகிறது. வெண்பருத்தியில் இருந்து நெய்யப்படும் இந்த மெலிதான துணியை மணிப்பூர் மாநில பெண்கள், விழாக்காலங்களில் அணிகின்றனர். இந்தத் துணியின் தனித் தன்மைக்காக மணிப்பூர் மாநில அரசு புவிசார் குறியீடு பெற்றுள்ளது.

சங்காய் மான்!

மணிப்பூர் மாநிலத்தில் மட்டுமே இம்மானினம் காணப்படுகிறது. மணிப்பூர் மாநில விலங்காகவும் சங்காய் மான் கருதப்படுகிறது. சதுப்பு நிலப்பகுதியில் கூட்டம், கூட்டமாக இவை வாழ்கின்றன. தற்போது இம்மானினம் அழியும் தறுவாயில் உள்ளது.

தாமின் மான்!

இம்மானினம் 1839 - ஆம் ஆண்டு மணிப்பூரில் கண்டுபிடிக்கப்பட்டது. உருவத்தில் சிறியதாகவும், அழகாகவும் இம்மானினம் இருக்கும்.

மோரே நகரம்!

மியான்மர் நாட்டின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்திய நகரமாகும். இங்கு இரண்டாம் உலகப் போர் காலத்தில் மியான்மரிலிருந்து (பர்மா) நாடு திரும்பிய தமிழர்கள் இங்கு வாழ்கிறார்கள். எனவே இந்நகரத்தில் தமிழரின் பண்பாடும், பாரம்பரியமும் காணமுடிகிறது.

கம்பா தோய்பி!

இது ஒரு மேதி மொழிக் காவியக் கவிதைத் தொகுப்பாடும். புகழ் பெற்ற கவிஞர் இஜாம் அங்கங்கால் என்பவர் இயற்றியுள்ளார். இது மணிப்பூரின் தேசிய காவியமாகக் கருதப்படுகிறது. 34,000 செய்யுள்களைக் கொண்டது.

லாய் அரோபா!

இலாய் அரோபா என்பது "கடவுள்களை மகிழ்ச்சியுறச் செய்யும் பாரம்பரியத் திருவிழாவாகும். இசை, நடனம், கலாசார அம்சங்கள் ஆகியவை இத்திருவிழாவின் முக்கிய அங்கங்களாகும்.

உமாங் லாய்!

இவ்விடம் வன தெய்வங்களுக்காகப் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். மணிப்பூரில் 365 உமாங் லாய்கள் உள்ளன. அவற்றில் 166 உமாங் லாய்கள் மாநிலத்தின் பள்ளத்தாக்குப் பகுதிக்குள் உள்ளன. இங்கு மரங்களை வெட்டுதல் மத ரீதியாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

இமா கீதல்! (பெண்கள் சந்தை)

மணிப்பூரில் ஷாப்பிங் செய்ய ஒரு அழகான இடம் இது! 500 ஆண்டுகள் பழமையான சந்தை இது. இங்கு சுமார் 5000 பெண்கள் வியாபாரம் செய்கிறார்கள். ஜவுளி, ஆபரங்கள், தானியங்கள், வீட்டு அலங்காரப் பொருள்கள் ஆகியவை இங்கு விற்கப்படுகின்றன. பெண்கள் மட்டுமே வியாபாரம் செய்வதால், இந்தியாவில் மட்டுமின்றி ஆசியாவிலேயே தனித்துவமான சந்தை இது!

சுற்றுலாத் தலங்கள்!
சனமாகி கோயில்!

மேற்கு இம்பால் மாவட்டத்தில் காங்லா அரண்மனைக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. மிகப் பழமையான, பெரிய கோயில்.

சனமாகி கியோங் கோயில்!

இந்தக் கோயில் கிழக்கு இம்பால் மாவட்டத்தில்நோங்மைச்சிங் மலையின் உச்சியில் அமைந்துள்ளது. இது கங்கேலி தெய்வமான இறைவன் "இலெய்னிங்தூ சனமாகி' யின் கோயிலாகும்.

காங்லா அரண்மனை!

காங்லா கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அரண்மனை முன்னர் இம்பால் ஆற்றின் கிழக்கு மற்றும் மேற்குக் கரைகளில் அமைந்திருக்கிறது.

தற்போது இம்பால் நதியின் மேற்குக் கரையில் மட்டும் மீதமிருக்கிறது. பகாங்பா மன்னரின் அரண்மைனையாக இருந்தது. சுமார் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த அரண்மனை!

இம்பால் போர் நினைவிடம்!

இந்த நினைவிடத்தில் இரண்டாம் உலகப் போரில் இறந்த 1600 கூட்டுப்படை வீரர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

லோக் டாக் ஏரி!

வடகிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி இது! 35 கி.மீ. நீளமும், 13 கி.மீ. அகலமும், 287 ச.கி.மீ. பரப்பளவும் கொண்டது. சிறுசிறு மிதக்கும் தீவுகள் அடங்கியது! இந்த ஏரி மணிப்பூர் பொருளாதாரத்தில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. இந்த ஏரியின் தண்ணீர், குடிநீர், விவசாயம், மீனிபிடித் தொழில் மற்றும் மின் உற்பத்திக்குப் பயன்படுகிறது.

பும்டி!

லோக்டாக் ஏரியில் மிதக்கும் தீவுகளை "பும்டி' என அழைப்பர். இத்தீவுகள் வண்டல் மண்ணுடன் கூடிய தாவரக் கழிவுகளால் ஆன சதுப்பு நிலப் பகுதியாகும்.

கெய்புல் லாம்சோ தேசியப் பூங்கா!

பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள லோக்டாக் ஏரிக்கு மத்தியில் அமைந்துள்ளது. இது உலகின் ஒரே மிதக்கும் பூங்காவாகும்! இப்பூங்கா 40 ச.கி.மீ பரப்பளவு கொண்ட பும்டியாகும். பெரும்பாலும், ஈரமான அரை பசுமையான காடுகளைக் கொண்டது. பல்லி, பாம்பு முதலிய பல்வேறு ஊர்வன, மற்றும் மான், காட்டுப்பூனை உள்ளிட்ட விலங்கினங்கள் இங்குள்ளது!

பரூனி மலை!

இம்மலை இம்பால் மேற்கு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த மலை வடகிழக்கு இந்தியாவில் இருக்கும் சனமாகி நம்பிக்கையை பின்பற்றுபவர்களுக்குப் புனிதத் தலமாகும். மலையடிவாரத்தில் நூற்றுக்கணக்கான கோயில்கள் உள்ளன. அவற்றுள் மிகவும் பிரபலமானது சனமாகி சியோங் கோயில் ஆகும்.

தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.