கொண்டாட்டம்
முருங்கைப்பூ உதிர்ந்திருக்கும் எங்கள் வீட்டுத் தாழ்வாரம்சின்னஞ்சிறு பிள்ளைகளெல்லாம்
முருங்கைப்பூ உதிர்ந்திருக்கும்
எங்கள் வீட்டுத் தாழ்வாரம்
சின்னஞ்சிறு பிள்ளைகளெல்லாம்
ஆடிக்களிக்கும் மைதானம்!
எட்டுக் கோடு ஆடுவோம்
பந்தைத் தூக்கிப் போடுவோம்
கால நேரம் பார்க்காமல்
கண்ணாமூச்சி ஆடுவோம்!
பம்பரம் சுற்றும் ஒரு கூட்டம்
பட்டங்கள் விடும் ஒரு கூட்டம்
சடுகுடு ஆடும் ஒரு கூட்டம்
கிளித்தட்டில் திளைக்கும் ஒரு கூட்டம்
உப்பு மூட்டை, வண்டிச் சவாரி
பச்சைக் குதிரை, கிட்டிப் புள்ளு
கள்ளன் காவல், தட்டாமாலை
நொண்டியாட்டம் தவளையோட்டம்
அளவில்லாத விளையாட்டு
ஆட, ஆட ஆனந்தம்!
பொழுது முழுக்க கும்மாளம்
ஒவ்வொரு நாளும் கொண்டாட்டம்!