கோவா மாநிலம்!
கோவாவில் ஏராளமான கிறிஸ்துவ தலங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் "குழந்தை ஏசு பசிலிக்கா' என்னும் கத்தோலிக்க கிறிஸ்துவ வழிபாட்டு இடம்.
சென்ற இதழ் தொடர்ச்சி.......
குழந்தை ஏசு பசிலிக்கா! -
(பாம் ஜீசஸ் பசிலிக்கா!)
கோவாவில் ஏராளமான கிறிஸ்துவ தலங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் "குழந்தை ஏசு பசிலிக்கா' என்னும் கத்தோலிக்க கிறிஸ்துவ வழிபாட்டு இடம். பழைய கோவா நகரில் அமைந்துள்ள இந்த தேவாலயம் உலகப் பாரம்பரியங்களுள் ஒன்றாகப் புகழ் பெற்று விளங்கும் புனித இடம் ஆகும்.
Advertisement
இந்த தேவாலயத்தில் புனித ரட்சகர், பிரான்சிஸ் சேவியரின் உடல் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் இவரது உடல் வெளியே எடுக்கப்பட்டு மக்களின் வழிபாட்டுக்கு வைக்கப்படுகிறது.
மெழுகு சிலை காட்சியகம்!
சமீபத்தில் இந்திய வரலாறு கலாசாரம் மற்றும் பண்பாடு குறித்த மெழுகுச்சிலை காட்சியகம் பழைய கோவாவில் திறக்கப்பட்டுள்ளது.
கோவா சித்ரா அருங்காட்சியகம்!
இந்த அருங்காட்சியகத்தில் கோவா மக்களின் வாழ்க்கை முறை, மற்றும் விவசாய தொழில் நுட்பத்தை பிரதிபலிக்கும் 4000-த்திற்கும் மேற்பட்ட பொருள்களின் கண்கவர் தொகுப்புகள் உள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய பாரம்பரிய விவசாயக் கருவிகள், பாத்திரங்கள், இசைக் கருவிகள், மண்பாண்டங்கள், பல்லக்குகள், பழங்கால வண்டிகள், பிற கலைப்பொருள்கள், ஆபரணங்கள், உடைகள் ஆகியவை இங்குள்ளன. இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் இந்த அருங்காட்சியகத்தை "இந்தியாவின் மிகச் சிறந்த தற்கால அருங்காட்சியகம்' என மதிப்பிட்டுள்ளது.
பேட்ஸ் தீவு!
கோவாவில் உள்ள தீவுகளில் இந்தத் தீவு மிகச் சிறப்பான தீவாகும். ஏனெனில் சாதனை செய்ய விரும்புபவர்கள் கண்டிப்பாக இந்தத் தீவிற்கு செல்லலாம். இது "பெய்னா கடற்கரையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஒரு நாளை மிகவும் அமைதியாகக் கழிக்க வேண்டும் என நினைப்பவர்கள் இத்தீவிற்குச் செல்லலாம்.
அர்வேலம் குகைகள்!
இந்தக் குகைகளில் பாண்டவர்கள் தங்களின் 12 வருட வனவாசத்தின்போது தங்கி இருந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இக்குகைகள் "பாண்டவர் குகைகள்' என்றும் அழைப்பெறுகின்றன.
டைவர் தீவு!
பழைய கோவா பகுதியிலிருந்து சிறிய ரக படகு மூலம் டைவர் தீவை அடையலாம். இயற்கை எழில் கொண்ட தீவு இது. இங்கு போர்ச்சுகீசிய பாணிக் கட்டடங்கள் உள்ளன.
கும்பர்ஜுவா கால்வாய்!
கோவாவின் இரண்டு முக்கிய நதிகளான, மண்டோலி மற்றும் ஜீவரி ஆகியவற்றை இணைக்கும் கும்பர்ஜுவா கால்வாயில் ஏராளமான முதலைகளைப் பார்க்கலாம்.
பழைய கோவா!
பழைய கோவா என்பது வடக்கு கோவா மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாகும். இந்த நகரத்தை 15 - ஆம் நூற்றாண்டில் பீஜப்பூர் சுல்தான்கள் உருவாக்கினர். போர்ச்சுகீசியரின் தலைநகரமாகவும் விளங்கியது. 18 - ஆம் நூற்றாண்டில் பிளேக் நோய்த்தொற்றால் போர்ச்சுகீசியரால் புறக்கணிக்கப்பட்டது. பிளேக் நோய்ப் பரவலுக்கு முன் இங்கு 2 லட்சம் பேர் வாழ்ந்திருந்ததாகக் கருதப்படுகிறது. இந்த பழைய நகரத்தின் எச்சங்கள் யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய கோவா, தற்போதைய தலைநகரம் பனாஜியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
போர்ச்சுகீசியர்களின் ஆளுகையின்போது இங்கு பல தேவாலயங்கள் எழுப்பட்டுள்ளன. பழைய கோவாவில் பல்வேறு திருச்சபைகளுடன் இணைக்கப்பட்ட மாதா கோயில்கள் உள்ளன. கோவாவின் பேராயர் அமரும் "சாண்டா கேத்ரீனா úஸ' தேவாலயம், லேடி ஆஃப் ரோசரி தேவாலயம், புனித அகஸ்டின் தேவாலயம், சர்ச் ஆப் செயின்ட் கேஜடன், மேக் டி டேயஸ் சர்ச், செயின்ட் டயகோஸ் சர்ச், சான்டாக்ரூஸ் சர்ச், சாப்பல் ஆஃப் கேதரின், நோஸ்ஸா செனோரா டி பென்ஹா டி ஃப்ரான்கா சர்ச், செயின்ட் க்ளாரா சர்ச், சாப்பல் ஆஃப் செபாஸ்டியன், செயின்ட் எலிசபெத் சர்ச், செயின்ட் ஆண்ட்ரூஸ் சர்ச், த்ரீ கிங்ஸ் சர்ச், செயின்ட் ஜான் தி பேப்டிஸ்ட் சர்ச் ஆகிய குறிப்பிடத்தக்கவை. பாரம்பரிய மிக்கவை. அனைத்தும் 16 மற்றும் 17 - ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவை. இவை அழகிய கலை வேலைப்பாடுகள் கொண்டவை.
தொல்பொருள் அருங்காட்சியகம்!
தெற்கு கோவா மாவட்டத்தில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இது 8 காட்சிக்கூடங்களைக் கொண்டுள்ளது. இங்கு போர்ச்சுகீசிய காலத்து அரும்பொருள்கள், முக்கிய பதவியிலிருந்தோரின் வண்ண ஓவியங்கள், மரச்சிற்பங்கள், தூண்கள், தபால்தலைகள், பாரசீக மற்றும் அரேபியக் கல்வெட்டுகள், ஆயுதங்கள், பண்டைய வரைபடங்கள், உலோகச் சிலைகள், உட்பட பல பொருள்கள், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கடற்படை விமான அருங்காட்சியகம்
வாஸ்கோடகாமாவிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள போக்மலோவில் அமைந்துள்ள ஒரு ராணுவ அருங்காட்சியகம் இது. இந்த அருங்காட்சியகம் இரண்டு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்று வெளிப்புற காட்சிக்கூடம். மற்றொன்று இரண்டு தளங்களைக்கொண்ட உட்புறக் காட்சிக்கூடம். ஆசியாவிலுள்ள ஒரே கடற்படை விமான அருங்காட்சியகம் என்ற பெருமையை இந்த அருங்காட்சியகம் பெற்றுள்ளது.
ஸ்பைக்ஸ் ஆறு
வடக்கு கோவாவில் உள்ள ஸ்பைக்ஸ் ஆறு எழில்மிகு சதுப்பு நிலப் பகுதியாகும். இந்த ஆற்றின் ஓரம் அடர்த்திமிகு காட்டுப்பகுதி உள்ளது. இந்த ஆற்றில், "கயாக்' எனும் துடுப்புப் படகு செலுத்துவது ரம்மியமான அனுபவத்தை அளிக்கும். நீர்வாழ் இனங்களும், அழகிய நீர்த்தாவர வகைகளும் காணப்படும் ஆறு இது!
கோவா திருவிழா
ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் மிகவும் வண்ணமயமான கோவா திருவிழா தலைநகர் பனாஜியில் நடத்தப்படுகிறது. 4 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா 18 - ஆம் நூற்றாண்டு முதல் நடத்தப்படுகிறது. ஆசியாவில் நடைபெறும் பழமையான கலாசார திருவிழாக்களில் இதுவும் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் இது நடைபெறும். விழா நாள்களில் பனாஜியின் சாலைகள் அனைத்தும் சுற்றுலா பயணிகளால் நிரம்பியிருக்கும்.
கோவா ஏராளமான இயற்கைக் காட்சிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. ஏராளமான அழகிய கடற்கரைகள், தீவுகள், இரவு விடுதிகள், தேவாலயங்கள் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. கோவா மாநிலம் உடலுக்கும், மனதுக்கும் உற்சாகம் தரும்!
நிறைவு.