முகப்பு
சிறுவர்மணி

கருவூலம்: மகாராஷ்டிரா மாநிலம்!

இது நாசிக் நகரின் அழகிய இடங்களில் ஒன்று. இதன் நீர் பால் வெள்ளை நிறம் கொண்டதாக இருப்பதால் தூத்சாகர் அருவி என அழைக்கப்படுகிறது.

Updated On : 8 மே, 2021 at 4:27 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:41 AM

சென்ற இதழ் தொடர்ச்சி...

தூத்சாகர் நீர்வீழ்ச்சி!

இது நாசிக் நகரின் அழகிய இடங்களில் ஒன்று. இதன் நீர் பால் வெள்ளை நிறம் கொண்டதாக இருப்பதால் தூத்சாகர் அருவி என அழைக்கப்படுகிறது.

Advertisement

தலைகீழாகப் பாயும் அதிசய அருவி! (RE​V​E​R​SE WA​T​ER FA​L​LS)

அருவி நீர் பள்ளத்தை நோக்கிப் பாய்வதைத்தான் நாம் பார்த்திருப்போம் ஆனால் கீழிருந்து மலையின் உச்சியை நோக்கிப் பாயும் அருவியை நாம் பார்த்திருப்போமா? ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தின் புணே மாவட்டத்தில் அப்படி ஒரு அதிசய அருவி பாய்ந்து மக்கள் மனதை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது.

புணேயில் உள்ள சிங்ஹகாட் மலைப்பகுதியில் இந்தத் தலைகீழாகப் பாயும் அருவி இருக்கிறது. இதற்குக் காரணம் காற்றின் அதிகமானஅழுத்தம்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சிங்ஹகாட் மலைப்பகுதியில் சஹாயாத்ரீ மலைச்சிகரத்தில் இந்த அருவி உள்ளது. இம்மலைப்பகுதியில் இந்த அருவியையும் சேர்த்து 10 அருவிகள் உள்ளன.

தோஷ்கர் நீர்வீழ்ச்சி!

இந்நீர்வீழ்ச்சி சதாரா மாவட்டத்தில் உள்ளது. இயற்கை அழகை ரசிக்க ஒரு அருமையான இடம். இங்கு மேலும் பல நீர்வீழ்ச்சிகள் உள்ளன.

டாபோஸா அருவி!

பல்கார் மாவட்டத்தில் உள்ள டாபோடா என்ற கிராமத்தில் அமைந்துள்ளது இந்த அருவி. லெண்டி நதி 300 அடி உயரத்திலிருந்து அருவியாக கீழிறங்குகிறது. பருவ மழை காலத்தில் இந்த அருவி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

குனே அருவி!

லோனாவாலா கண்டாலா பள்ளத்தாக்கின் மையத்தில் அமைந்துள்ளது. இந்த 200 மீ உயரம் கொண்ட அருவி 3 கட்ட அருவியாகக் கீழிறங்குகிறது. பசுமையான பள்ளத்தாக்கின் மத்தியில் கண்ணுக்குக் குளுமையாகப் பாய்கிறது. இவற்றைத் தவிரவும் பாண்டவகட் அருவி ஷீக்தாவ்க்தக் அருவி, மஹாதேவ் அருவி, உட்பட பல அருவிகள் இங்குள்ளன.

பஞ்ச்கனி!

சஹ்யாத்ரி மலைத்தொடரின் கிராமங்களுக்கும் ஐந்து குன்றுகளுக்கும் மத்தியில் அமைந்துள்ள இந்த ஊர் மும்பையிலிருந்து 285 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்குள்ள பார்ஸி மைதானத்திலிருந்து பார்த்தால் கிருஷ்ண பள்ளத்தாக்கின் அற்புதமான காட்சியை பார்த்து ரசிக்கலாம். இங்குள்ள "எரிமலை பீடபூமி' அவசியம் பார்க்க வேண்டிய இடம். இது ஐந்து குன்றுகளிலும் உயரமாக உள்ளது. ஆசியாவிலேயே இரண்டாவது அதிக உயரமான பீடபூமி இதுதான். (திபெத் பீடபூமியே ஆசியாவில் முதலாவது மிக உயரமான பீடபூமி. ) இதமான சீதோஷ்ணநிலை கொண்ட அழகான ஊர்.

சீரடி!

சீரடி அகமது நகர் மாவட்டத்தில் உள்ளது. இந்த ஊர் 19 - ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்றிருந்த சீரடி சாயிபாபா வாழ்ந்த இடம் என்பதால் பிரபலமாய் உள்ளது. இங்கு அவர் வாழ்ந்த இடங்களும், சமாதி அடைந்த இடமும் வழிபாட்டுத் தலங்களாக மாறி ஆன்மிக சுற்றுலா இடங்களாக மாறி உள்ளன.

பண்டரிபுரம்!

இந்த ஊர் சோலாப்பூர் மாவட்டத்தில் பீமா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பந்தர்பூர் எனும் பண்டரிபுரம் நகரத்தில் புகழ் பெற்ற விட்டலர் - ருக்மணி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் முக்கிய வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகத் திகழ்வதால் இவ்வூர் முக்கிய ஆன்மிக சுற்றுலாத் தலமாக உள்ளது.

மஹாபலேஷ்வர்

பார்ப்பவர்களை சொக்க வைக்கும் மலைவாசஸ்தலம் இது! மலைச்சரிவுகளின் இயற்கை எழிலைப் பார்க்க வசதியாக 30 மலைக்காட்சி முனைகள் மஹாபலேஷ்வரில் உள்ளன. இவற்றில் இருந்து பார்க்கும்போது சுற்றிலும் உள்ள காடுகள், அருவிகள், ஆறுகள் மற்றும் காட்டு உயிரினங்கள் போன்றவற்றை மிக அருகில் கண்ணுக்கு விருந்தாக பார்த்து மகிழலாம்.

கண்டாலா!

இந்த மலைவாசஸ்தலம் சஹாயத்ரி மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் மீது கம்பீரமாக அமைந்துள்ளது. இந்த கண்டாலா மலைவாசஸ்தலம் அழகிய பசுமை கொஞ்சும் பள்ளத்தாக்குகள், உயர்ந்தோங்கி நிற்கும் மலைகள், ரம்மியமான ஏரிகள், ஆர்ப்பரிக்கும் அருவிகள் என சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கிறது.

லோனாவா

சஹாயத்ரி மலையின் கிரீடம் என்று அழைக்கப்படும் இந்த இடம், மலையேற்றம், நடைப்பயணம் போன்றவற்றிற்கு பிரசித்தி பெற்றது. மேலும் இவ்விடத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கோட்டைகள் புராதனமான குகைகள் மற்றும் அமைதியான ஏரிகளும் உள்ளன. இங்கு ஆண்டு முழுவதும் பருவநிலை இனிமையானதாக உள்ளது. ஒருபுறம் பார்த்தால் தக்காண பீடபூமியும், மறுபுறம் பார்த்தால் அழகிய கொங்கன் கடற்கரையும் சூழ்ந்திருக்க ஒரு அழகிய ஓவியம்போல் இந்த மலை வாசஸ்தலம் பார்ப்பவர்களை மனம் மயங்கச் செய்கிறது.

கர்ஜத்!

ரம்மியமான இந்த சுற்றுலாத்தலம் பல சாகசப் பொழுதுபோக்குக்கான இடம். மலையேற்றத்துக்கு பிரசித்தி பெற்றது. புராதனமாக போற்றும் புத்த மத கலையம்சங்களைக் கொண்ட கொண்டனா குகைகள் ஆகியவை இங்குள்ளன.
மாத்தேரான் மலை!

எல்லா மலைவசஸ்தலங்களையும் போன்றே இதுவும் அற்புதமான அழகைக் கொண்டது. இங்கும் பல அழகிய காட்சி முனைகள் உள்ளன. முக்கியமாக "மனோரமா பாயின்ட்' என்னும் காட்சிமுனையில் நாற்புறமும் பார்த்து ரசிக்கலாம்.

அம்போலி மலைநகரம்!

இங்கு ஷிர்காவ்ங்கர் அருவி, மஹாதேவ் அருவி, நாகட்டா அருவி உட்பட பல அருவிகள் உள்ளன. இங்குள்ள காட்சி முனைகளிலிருந்து அரபிக்கடல் மற்றும் கொங்கணக் கடற்கரையின் அழகை உச்சியிலிருந்து பார்த்து ரசிக்கலாம்.

கோரமண்டல் மலை வாசஸ்தலம்!

நாலாபுறமும் மலைகளால் சூழப்பட்டு பசுமையாகக் காட்சியளிக்கும் அழகிய மலைவாசஸ்தலம் இது. மகாராஷ்டிராவின் இரண்டாவது குளுமையான மலை வாசஸ்தலம்.

இவை தவிர இகத்புரி, மால்ஜேஷ்காட், பண்டர்தாரா முதலிய பல மலைவாசஸ்தலங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளன.

சந்த்மினார்!

சந்த் மினார் ஒளரங்காபாத்தில் உள்ளது. இது 1435 - ஆம் ஆண்டில் துருக்கிய பாணியில் அலாவுதீன் பஹ்மானியால் கட்டப்பட்டது. இந்த மினார் இஸ்லாமிய கட்டடக் கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. 30 மீ உயரமுள்ள இந்த கோபுரம் நான்கு மாடிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு 24 அறைகள் மற்றும் ஒரு சிறிய மசூதியும் உள்ளன. இது பாரசீக நீல ஓடுகளால் மூடப்பட்டுள்ளது.

இந்தியாவின் நுழைவாயில்! (G​A​TE WAY OF IN​D​IA)

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஒரு நினைவுச் சின்னமே இது! மும்பையில் அரபிக்கடலோரம் அப்போலோ பந்தர் என்னும் சிறு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ளது,.

1911 - இல் பிரிட்டிஷ் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் அரசி மேரி ஆகியோர் அப்போலோ பந்தர் துறைமுகத்தில் வந்திறங்கியதன் நினைவாக இந்தக் கட்டடம் எழுப்பப்பட்டது. இது 85 அடி உயரம் கொண்டது. மும்பையில் படகுகள் மூலம் வந்திறங்கும் பயணிகள் எதிர்கொள்ளும் முதல் கட்டடமாக இது இருந்ததினால் "இந்தியாவின் நுழைவாயில்' என அழைக்கப்படுகிறது.

சண்டோலி தேசியப் பூங்கா!

இவ்வனப்பகுதி 2004 - ஆம் ஆண்டு தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. 318 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இப்பூங்காவில் புலிகள் பாதுகாப்பு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இப்பூங்கா சண்டோலி அணைக்கட்டின் அருகில் உள்ளது. தற்போது இங்கு 9 புலிகளும், 66 சிறுத்தைகளும் உள்ளன. மேலும் இவ்வனப்பகுதியில் வங்காளப்புலி, அணில்கள், கரடிகள், காட்டெருமை போன்றவை காணப்படுகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட பறவையினங்களும், ஊர்வன இனங்களும் இங்குள்ளன.

குகமால் தேசியப் பூங்கா!

அமராவதி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த தேசியப் பூங்கா 1674 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட மிகப் பெரிய தேசியப் பூங்கா இது. புலிகள், சிறுத்தைகள், நரிகள், மான்கள், உள்ளிட்ட விலங்குகளும், பறவையினங்களும், மூலிகைத் தாவரங்களும் இங்குள்ளன.

சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா!

இந்தப் பூங்கா தானே மாவட்டத்தில் அமைந்துள்ளது. 88.96 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இந்தப் பூங்காவில் விலங்கினங்களும், பறவையினங்களும் காணப்படுகின்றன.

இவை தவிர நவகாவ் தேசியப் பூங்கா, தடோபா அந்தாரி தேசியப் பூங்கா என ஐந்து தேசியப் பூங்காக்கள் உள்ளன.

பீபீகா மக்பாரா!

ஒளரங்காபாத் நகரத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்த சமாதி. இது ஒளரங்கசீப்பின் மனைவியான ரபியா உத்துரானியின் புதையிடம் ஆகும். இது ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலைப் போன்று இருப்பதால் "மினி தாஜ்' என அழைக்கப்படுகிறது. குளங்கள், நீரூற்றுகள், நீர்க்கால்வாய்கள் மற்றும் ஒரு தொல்பொருள் அருங்காட்சியகமும் இங்கு உள்ளது.

ஒளரங்காபாத் குகைகள்!

நகரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் கி.மு. 3 - ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தைய காலத்தினைச் சேர்ந்த 12 புத்த மத குகைகள் இங்குள்ளன.

தெளலதாதபாத் கோட்டை!

முன்னர் தேவகிரி எனப்பட்ட இவ்விடம் ஒளரங்காபாத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள மலையின் மீது இக்கோட்டை உள்ளது. 5 கி.மீ. நீளத்திற்கு உறுதியான மதிற்சுவர் கொண்ட கோட்டை இது.

ஆகா கான் அரண்மனை!

மகாராஷ்டிரா மாநிலத்தின் மிக முக்கியமான நினைவுச் சின்னங்களில் ஒன்று இந்த அரண்மனை. 19 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மகாத்மா காந்தி, கஸ்தூரிபாய் காந்தி, டாக்டர் சரோஜினி நாயுடு, ஸ்ரீமகாதியோபாய் தேசாய் ஆகியோர் 1942 - இல் நடந்த "வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தின்போது இங்குதான் சிறை வைக்கப்பட்டிருந்தனர். இங்கு காந்தியின் படுக்கை, எழுத்து மேஜை, கஸ்தூரிபா காந்தியின் உடைகள், செருப்புகள் என பல பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஆகா கான் இளவரசர் இந்த அரண்மனையை காந்தி ஸ்மாரக் கமிட்டிக்கு 1972 - இல் நன்கொடையாக வழங்கினார்.

மகாத்மா காந்தி அருங்காட்சியகம்!

மும்பையில் லாபூர்ணம் சாலையில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. காந்திய இலக்கியங்கள், புகைப்படங்கள், கடிதங்கள், காந்தி பற்றிய
தகவல்கள் ஆகியவை இங்குள்ளன.

தேசிய கடல்சார் அருங்காட்சியகம்!

மும்பையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் இந்திய கடற்படையால் அமைக்கப்பட்டது. இங்கு மற்ற நாடுகளிலிருந்து பெறப்பட்ட இந்தியாவின் வரலாற்றுப் பொக்கிஷங்கள், கப்பல்களின் மாதிரிகள் ஆகியவை உள்ளன.

பழங்குடி அருங்காட்சியகம்!

இது புணேயில் அமைந்துள்ளது. பழங்குடியினரின் கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதாக இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

இவை தவிர நாணய அருங்காட்சியகம், ஜஹாங்கீர் கலைக்கூடம், சத்ரபதி அருங்காட்சியகம், ஸ்ரீபவானி அருங்காட்சியகம், வீர்மகா அருங்காட்சியகம் உட்பட பல அருங்காட்சியகஙகள் இங்குள்ளன.

தொடரும்....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.