முகப்பு
சிறுவர்மணி

பேசும் பெட்டி!

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

ஒரே காட்சி
இடம்: காவியா வீடு.
மாந்தர்: காவியா, அருண், தோழி சித்ரா.

சித்ரா: காவியா... காவியா...!
காவியா:  வா.. சித்ரா!
சித்ரா: என்ன காவியா... நீ போய் வீட்டைப் பெருக்கிக் கிட்டிருக்கே...?
காவியா: ஏன், நான் பெருக்கக்கூடாதா?
சித்ரா: உங்க வீட்டு வேலைக்கார அம்மா இன்னிக்கு வரலையா?
காவியா: அவங்க வேலை செய்யமுடியலேன்னு நின்னுட்டாங்க. அதனால நாங்களே சுத்தம் செய்ய ஆரம்பிச்சுட்டோம். அதோ பார், அண்ணன் அருண்கூட ஜன்னல் தூசியைத் தட்டிக்கிட்டிருக்கான்.
சித்ரா: அப்படீன்னா இனிமே நீங்களேதான் இந்த வேலையைச் செய்யப் போறீங்களா?
அருண்: ஆமாம் சித்ரா! இது நம்ம வீடு. அடிக்கடி சுத்தம் செய்தாத்தான் வீடு எப்பவும் சுத்தமா, அழகா இருக்கும். புது வேலைக்கார அம்மா கிடைக்காட்டாலும் எங்களுக்குக் கவலையில்லை. எங்க உடைகளைக்கூட நாங்களே துவைச்சு சுத்தப்படுத்திக்கிறோம்.
காவியா: தோட்டத்தில் உள்ள செடிகளுக்குத் தண்ணீர்விடுறது, தோட்டத்தை சுத்தப்படுத்துறது - இந்த வேலைகளைக்கூட அப்பப்போ 
செய்துகிட்டே இருப்போம். வேலைக்கார அம்மா இருந்தபோதுகூட, எங்களால முடிந்த வேலைகளை செய்யத் தயங்க மாட்டோம். இப்படி வீட்டு 
வேலைகள் செய்யறதால, நம்ம உடலுக்கு நல்ல 
பயிற்சியும் கிடைக்கிறதே...
சித்ரா: ஓ... அதுதான் உங்க வீடு எப்ப வந்தாலும் "பளிச்'சுன்னு இருக்கு! படங்கள் எல்லாம்கூட பள
பளன்னு இருக்கு...
காவியா: அருண் அந்த வாசல் மிதியடியை நீதான் தூக்கி நல்லா தட்டிப் போடணும்.
அருண்: சரி காவியா!
சித்ரா: உங்க தெருகூட பளிச்சுன்னு ரொம்ப சுத்தமா, வித்தியாசமா தெரியுது.
காவியா: அதுக்குக்கூட எங்க அப்பாவும், இந்தத் தெரு பெரியவங்களும்தான் காரணம். மரக்கிளைகள் நீளமா வளராம பார்த்துப்பாங்க. அதனால இலைக் குப்பை ரொம்ப கீழே விழாது. இரவு நேரத்தில் தெரு மின் விளக்கு வெளிச்சத்தையும் தடுக்காது.
அருண்: மத்த தெரு மாதிரி, எங்கத் தெருவுல இருக்கிறவங்க குப்பையை பிளாஸ்டிக் பையிலே போட்டு தெருவிலே வச்சுடமாங்க. வீட்டுக்குள்ளேயே வச்சிருந்து, குப்பை வண்டி வரும்போது அதுல போட்டுடுவாங்க.
காவியா: ஆமாம் சித்ரா... வண்டி வராதப்போ பிளாஸ்டிக் பையை தெருவிலே வச்சுட்டா, தெருநாய்கள் கவ்விக்கிட்டு ஓடிடும். உள்ளேந்து குப்பையும் இறைஞ்சி தெரு அசுத்தமாயிடும்.
அருண்: எங்க நகர் நலச்சங்க மீட்டிங்குக்கு எங்களையும் வரச் சொல்வாங்க.  சுத்தமான சூழ்நிலை பத்தி சொல்லி, நாங்க செய்ய வேண்டியதை சொல்வாங்க. சுற்றறிக்கையும் கொடுப்பாங்க.
சித்ரா: அட  இது என்ன...? ஏதோ பழமொழியைச் சுவத்திலே, பெட்டி மாதிரி பொருத்தி வச்சிருக்கீங்க...?
அருண்: ஆமாம்.. பழமொழியேதான். ஆனால் பொன்மொழி. படிச்சிப்பாரு.
சித்ரா:  "சுத்தம் சோறு போடும்' - எழுத்தெல்லாம் அழகா இருக்கே, நீ எழுதினியா அருண்?
காவியா: அருண் எழுதியிருந்தா இப்படிப் பொன்மொழியா இருக்காது.. புண்மொழியாத்தான் இருக்கும்.
(எல்லோரும் சிரிக்கிறார்கள்)
அருண்: ஏய்...
சித்ரா: பின்னே நீ எழுதி ஒட்டினியா?
காவியா: யாரும் எழுதல... இது ஒரு சின்ன அலங்கார மின்பெட்டி. முன்பக்கம் பெருசா ஸ்டிக்கர் ஒட்டியிருக்காங்க... இப்போ ஸ்விட்சை போடறேன் பாரு! உள்ளே குட்டிகுட்டி மின்விளக்கு எரியும். ஸ்டிக்கரும் கலர் கலரா மாறிக்கிட்டே இருக்கும்.
சித்ரா: ஆமாம்... ரொம்ப அழகா இருக்கு காவ்யா. "சுத்தம் சோறு போடும்'- இப்போது படிக்க ரொம்ப பளிச்சின்னு தெரியுது. ஆனா காவியா ஒரு கேள்வி... பதில் சொல்லு...
காவியா: ம்... கேளு...
சித்ரா: சுத்தமா எல்லாத்தையும் வச்சிகிட்டா அழகா இருக்கும், சரிதான். ஆனா சுத்தம் எப்படி காவ்யா சோறு போடும்?
காவியா: ம்... போடுமே! இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லத்தானே இந்த ஸ்டிக்கர் பெட்டி.
சித்ரா: ஓ... இந்தப் பெட்டி பேசுமா...?
காவியா: ம்.. நல்லா பேசும். பெட்டி மூலையிலே ஒரு சின்ன பச்சை பொத்தான் இருக்கு பாரு. அதை அழுத்து... உனக்குப் பதில் கிடைக்கும்.
(சித்ரா அப்படியே செய்ய ஸ்டிக்கர் பெட்டி பேசுகிறது)
பெட்டி: ஆமாம்! சுத்தம் சோறு போடும். உண்மைதான்! நாம உடுத்தற ஆடை, வசிக்கிற வீடு, தெரு, தோட்டம், சாப்பிடும் உணவு, பயன்படுத்தற பொருள்கள், குடிக்கிற தண்ணி, போட்டுக்குற செருப்பு, அற்புதமான இந்த உடம்பு - இப்படி எல்லாத்தையும் சுத்தமா வச்சுக்கப் பழகிட்டா கண்ணுக்குத் தெரியாத விஷக்கிருமிகள், நோய் நுண் கிருமிகள் சேராது, பெருகாது. அதனால் நம்ம ஆரோக்கியத்துக்கும் எந்தக் கேடும் வராது. கண்ணுல படற காட்சியெல்லாம் அழகாகவும் இருக்கும்.
இந்த அழகும், ஆரோக்கியமும்தான் நமக்குப் புத்துணர்ச்சியைத் தரும். மனசுல ஊக்கமும் மகிழ்ச்சியும் இருந்துகிட்டே இருக்கும். நீங்க எந்த வேலை செய்தாலும் அதைத் திறமையா செய்வீங்க. உதாரணமா, நீங்க மாணவரா இருந்தா கல்வியிலே சிறந்து விளங்குவீங்க.. பெரியவங்களா இருந்தா வேலை செய்யற அலுவலகத்திலே நல்ல பெயரும், பாராட்டும் கிடைக்கும். அப்புறம் என்ன? வீட்டுல தினமும் அறுசுவை விருந்துதான்... உற்சாகமான வாழ்க்கைதான். ஆக, அடிப்படையிலே சுத்தமா இருக்கப் பழகிட்டா, அதுவே படிப்படியா நாம அறியாமலேயே நல்ல வாழ்க்கையை அமைச்சுத் தரும். வணக்கம்!  (எல்லோரும் கை தட்டுகிறார்கள்)
சித்ரா: ஏய்... நல்லாயிருக்குடி இந்தப் பெட்டி சொன்னதெல்லாம்... ஏது இந்தப் பெட்டி?
காவியா:  எங்க அப்பாவோட நண்பர் ஒருத்தர்  புத்தாண்டு பரிசா கொடுத்துட்டு போனது இது.
சித்ரா:  நல்ல... உருப்படியான புத்தாண்டு பரிசுதான் கொடுத்திருக்கார்!
 

- திரை-

முழு கட்டுரையைப் படிக்க →