ஞாயிறு கொண்டாட்டம்

திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் நடக்காது!

தமிழ் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பது இங்குள்ள கோவில்கள்தாம். இவற்றில் பல புராதனமானவை. இறைவன் அருள் பெற்ற இசைக் கலைஞர்களால் பாடப்பெற்றவை.

தினமணி

தமிழ் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பது இங்குள்ள கோவில்கள்தாம். இவற்றில் பல புராதனமானவை. இறைவன் அருள் பெற்ற இசைக் கலைஞர்களால் பாடப்பெற்றவை. அத்தகைய கோவில்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, மாதம் ஒரு தலத்தைப் பற்றி ஒரு தேர்ந்த பேச்சாளர் பேச, டாக்டர் விஜயலக்ஷ்மி சுப்ரமண்யம் கச்சேரி நிகழ்த்துவதாக வடிவமைத்து வழங்கி வருகிறது நாரத கான சபா.

இந்த மாதம் 12-ஆம் தேதி, இந்த தொடரின் பதினைந்தாவது நிகழ்ச்சியில், திருத்தணியின் பெருமையை தமிழ்ப் பேராசிரியையும் மேடைப் பேச்சாளருமான டாக்டர் சரஸ்வதி ராமநாதன் சுவையாக விளக்கினார்.

திருத்தணிக்கு உத்தம கிரி, சிறுத்தணி, நந்திப்ரியம் என வேறு பெயர்கள் உண்டு. ராவணனைக் கொன்றதால் பிரும்மஹத்தி தோஷம் நீங்க ராமேஸ்வரம் சென்றும் பாவம் தீராததால், ராமன், திருத்தணியில் குமாரதீர்த்தத்தில் நீராடியதும், பிரும்மனுக்கு படைப்புத்தொழில் மீண்டும் கிடைக்க திருத்தணி முருகனை பிரார்த்தனை செய்து பெற்றதையும், சக்ராயுதத்தை திருமால் வேண்டி அடைந்ததும், கந்தப்ப தேசியர் என்ற தமது மாணவர் வயிற்று வலியால் துடிக்க, அதைத் தீர்க்க வேண்டி திருத்தணி ஆற்றுப்படை பாடி குணப்படுத்தினார் கச்சியப்ப சிவாச்சாரியர் என்றும் அருணகிரிநாதர் இந்த தலத்தை பற்றி 64 பாடல்கள் இயற்றியுள்ளார் என்றும் தன்னை திட்டுபவரையும் வாழ வைப்பவன் திருத்தணி முருகன் என்பதை "வைதாரை வாழ வைக்கும்' என்று சந்தப் பாவலன் அருணகிரியின் கூற்றை எடுத்துக்காட்டியும் திருத்தணி கோவில் படிகளில், முருகனே முதியவர் உருவில் வந்து வாயில் கற்கண்டைப் போட அதன் விளைவால் இனிக்கும் பாடல்களை உலகுக்கு தந்தவர் மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர் என்றும்

பல சுவையான சம்பவங்களையும் கருத்துக்களையும் கோவையாகக் கூறி, இடையிடையே பாடியும் காட்டி ரசிகர்களின் கரகோஷத்தை பெற்றார் சரஸ்வதி ராமநாதன்.

பாம்பன் சுவாமிகள் இத்தலம் பற்றி 70 பாடல்கள் இயற்றியுள்ளார். கச்சியப்ப சிவாச்சாரியரின் கந்த புராணத்தில் திருத்தணி முருகனுக்கு ஐந்து நாட்கள் குறிப்பிட்ட பூஜை செய்தால் வீடு பேறு கிட்டும் என்பது உண்மை. வள்ளி மலை சுவாமிகளின் ரசமான பாடல்கள், இராமலிங்க அடிகள் தனது "ஜீவ சாட்சி மாலை'யில் "கண்ணேறு படும் என்றோ கனவிலும் காட்டுகிலேன் என்கிறாய்' என தணிகை முருகனை நினைந்து பாடிய பாடல், இங்கு இறைவன் வள்ளியை மணந்து சாந்தமாக இருப்பதால் இந்த தலத்தில் மட்டும் சூரசம்ஹார விழா கொண்டாடப்படுவதில்லை... என்பதுபோன்ற சுவையான செய்திகளைத் தங்கு தடையின்றி பிரவாகித்தார் சரஸ்வதி.

தொடர்ந்து விஜயலக்ஷ்மியின் இனிமையான கச்சேரி.

தீட்சிதரின் "ஸ்ரீ குரு குஹ சரவணபவா' என்ற தேவக்ரியா ராக கீர்த்தனை. தொடர்ந்து பாபநாசம் சிவனின் "தணிகை வளர் சரவண பவா' பாடலில் தோடி ராகம், கொஞ்சி விளையாடியது. "துள்ளி விளையாடி வரும் தோகை மயில் மேலே' என்ற இடத்தை நிரவல் ஸ்வரத்திற்கு எடுத்துக் கொண்டது ரொம்பப் பொருத்தம்.

அடுத்து பாடிய "குரு குஹாய பக்த அனுக்ரஹாய' என்ற சாமாராக கீர்த்தனை, மென்மையாக சுகானுபவமாக இருந்தது. அடுத்து ஷேத்ரக்ஞரின் பதம் ஒன்று பாடினார். "மனமே பூஷணமு' என்ற இந்த பாடலில் "சிறு தணி வாசு தாடு' என்று திருத்தணியை குறிக்கிறார். தொடர்ந்து பாடிய இராமலிங்க அடிகளின் திருவருட்பா விருத்தமும் ஊத்துக்காடு இயற்றிய "வாங்கும் எனக்கு இரு கை அருள் வழங்கும் உனக்கு பன்னிருகை' என்ற காம்போதி ராகப் பாடலில் ரசிகர்களைக் கட்டிப் போட்டார் விஜயலக்ஷ்மி. தீட்சிதர் திருத்தணி முருகன் அருளால் இயற்றிய முதல் க்ருதியான "ஸ்ரீ நாதாதி குரு குஹோ' என்ற மாயாமாளவ கௌள ராகப் பாட்டை மிக அருமையாக ராக ஆலாபனை செய்து பாவத்துடன் பாடி ரசிக்க வைத்தார். அடுத்து பாடிய நளின காந்தி ராக திருப்புகழும் சிந்து பைரவியில் கந்தர் அலங்காரமும் திருத்தணிக்கே நம்மை கொண்டு சென்றுவிட்டன. ராக ஆலாபனையிலும், நிரவல் ஸ்வரத்திலும் உஷா ராஜகோபாலனின் வயலின் நல்ல ஒத்துழைப்புடன் கூடிய வாசிப்பாக அமைந்தது. சேர்தலை அனந்த கிருஷ்ணனும் (மிருதங்கமும் ) ஆலத்தூர் ராஜ கணேஷும் (கஞ்சிராவும்) விறுவிறுப்பான தனி ஆவர்த்தனம் தந்தனர். மொத்தத்தில் வெகு சுவையான நிகழ்ச்சி.

- சந்திரிகா ராஜாராம்

படங்கள்: க.ஸ்ரீ. பாரத்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

SCROLL FOR NEXT