இயற்கையை விரும்பும் சுற்றுலா பயணிகள் ஆண்டு முழுவதும் வந்து செல்லும் இடமாக இருப்பது மலைகளின் இளவரசியான கொடைக்கானல். ஆண்டுதோறும் சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கொடைக்கானலின் இயற்கை அழகை கண்டு களித்துச் செல்கின்றனர்.
கொடைக்கானல் செல்லும் வழியில் மஞ்சளாறு அணைக்கட்டு, வெள்ளிநீர் வீழ்ச்சி ஆகியவற்றையும், மலைப்பாதையின் ஓரங்களிலும், எதிர்புறம் உள்ள மலைச் சரிவுகளிலும் வளர்ந்துள்ள உயரமான மரங்களையும், காடுகளையும் பார்த்துச் செல்வது அனைவரின் மனதையும் மயக்கும் அற்புத காட்சிகள்.
நகரின் மையப்பகுதியில் 20 ஏக்கரில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்கா, 24 ஹெக்டரில் பரந்து விரிந்து காணப்படும் கொடைக்கானல் ஏரி, அருங்காட்சியகம், பில்லர் ராக், மோயர் பாயிண்ட், பசுமைப் பள்ளத்தாக்கு போன்ற எழில் நிறைந்த காட்சிகள், தொடர்ச்சியாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பார்த்த இடங்களாகவும், பழகிய இடங்களாகவும் மாறிவிட்டன.
ஒவ்வொன்றிலும் புதுமையை எதிர்பார்த்துச் செல்லும் மனிதர்கள், இயற்கையை ரசிப்பதிலும் புதிய தேடல்களுடன் பயணித்து வருகின்றனர். அந்த வகையில் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு புத்துணர்ச்சியுடன் கூடிய புதுமை வழங்கும் இடமாக அமைந்துள்ளது பேரிஜம் ஏரி.
மோயர்பாயிண்ட் பகுதியில் உள்ள வனத்துறையின் சோதனைச் சாவடியிலிருந்து பேரிஜம் செல்வதற்கான சாலை தொடங்குகிறது. வழியில் தொப்பி தூக்கும் பாறை, பேரிஜம் லேக் வ்யூ, மதிக்கெட்டான் சோலை ஆகிய பகுதிகளைக் கடந்து, 18 கி.மீட்டர் தூரம் பயணித்தால் மனதை மயக்கும் பேரிஜம் ஏரி நம்மை வரவேற்கிறது. கூட்ட நெரிசல் இல்லாமலும், அமைதியான சூழலிலும் இயற்கையை ரசிப்பதற்கான இடமான பேரிஜம் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.
படகுத்துறை, நெருக்கடி மிகுந்த கட்டடங்கள், எப்போதும் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம் என எவ்வித பரபரப்பும் இல்லாமல் அமைதியை ரசிக்க கூடிய எழில் நிறைந்த இடமாக உள்ளது பேரிஜம் ஏரி. மோயர்பாயிண்ட் பகுதியிலிருந்து 18 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பேரிஜம் ஏரிக்கு, வனத்துறையின் அனுமதி இருந்தால் மட்டுமே செல்ல முடியும்.
24 கி.மீட்டர் சுற்றளவு கொண்ட பேரிஜம் ஏரி தண்ணீர், தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதி மக்களின் குடிநீராகப் பயன்படுகிறது. மலைகளையும், அடர்ந்த மரங்களையும் எல்லையாக கொண்டு அமைதியாகவும், இயற்கையாகவும் காட்சி அளிக்கிறது பேரிஜம் ஏரி. ஆசியாவிலேயே மிகப்பெரிய நன்னீர் ஏரியில் 2ஆவது இடம் என்பது பேரிஜம் ஏரிக்கு கூடுதல் சிறப்பு! வழியில் உள்ள மதிக்கெட்டான் சோலையில், வனத்துறையின் அனுமதியுடன் மலையேறும் பயிற்சி (ட்ரெக்கிங்) அளிக்கப்படுகிறது. இந்த பகுதியில் அதிகமான மூலிகைச் செடிகள் உள்ளதால், உடலுக்கு புத்துணர்ச்சியும், ஆரோக்கியமும் கிடைப்பதாக வனத்துறையினர் கூறுகின்றனர்.
மேலும் இந்த பகுதியில் சிறுத்தை, செந்நாய், காட்டு மாடு, மலைப் பன்றி, மான், காட்டுக் கோழி உள்ளிட்ட வன உயிரினங்களும் உள்ளன. எனினும் சுற்றுலா செல்வோருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே, இதுபோன்ற உயிரினங்களைக் காண முடியும்.
மோயர் பாயிண்டிலிருந்து, பாம்பார்புரம் கூட்டு வன மேலாண்மை குழு சார்பில் சுற்றுலா பேருந்து இயக்கப்படுகிறது. தனியார் வாகனங்களுக்கு, கொடைக்கானல் வன அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தவிர அனைத்து நாள்களிலும் காலை 8.30 முதல் 9 மணி வரை 30 நிமிடங்கள் மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.
இயற்கையான சூழலில் ரம்மியமாக காட்சியளிக்கும் பேரிஜம் வனப்பகுதியை பாதுகாக்கும் விதமாக, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளிடம் வனத்துறையினர் முன் வைக்கும் ஒரே வேண்டுகோள்.
அமைதியான சூழ்நிலையில், பசுமையான காடுகளையும், தூய்மையான நீர் பரப்பையும் ரசிக்க தெரிந்தவர்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடம் பேரிஜம் ஏரி.
- என்.மதுஸ்ரீ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.