உலகில் இந்தியாவுக்குள்ள மிகப்பெரிய கௌரவம் "மகாத்மா காந்தி' பெற்றுத்தந்தது. தியாவை "காந்தி தேசம்' என்று தானே உலக மக்கள் அழைக்கிறார்கள். அதனால் தான் நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் அவருக்கு சிலை இருக்கிறது. உலகில் வேறு எந்த தலைவருக்கும் இந்த பெருமை இல்லை.
20 நாடுகள் வரை காந்தியின் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டுள்ளன. அவை பொதுப் புழக்கத்திற்கு அனுமதிக்கப்படாத, சேகரிப்பாளர்களுக்காக மட்டுமே வெளியிடப்பட்டவை. மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள லைபீரியா என்ற நாடு காந்தி உருவம் பொறித்த தங்கம், வெள்ளி நாணயங்களை வெளியிட்டதுடன், பொதுமக்கள் செலவிடும் வகையிலும் நாணயங்களை வெளியிட்டுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக காந்தியைக் கொண்டாடும் வகையில் 140க்கும் மேற்பட்ட நாடுகள் அவரது உருவம் அச்சிட்ட தபால் தலைகளை வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளன. இது அவரது நூற்றாண்டுக்கு முன்பு. அமெரிக்க அதிபராக இருந்த கென்னடிக்கு அதிகமான நாடுகள் தபால் தலை வெளியிட்டு அவர் முதலிடத்தில் இருந்தார். அவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் அவர் மீதான அனுதாபத்தாலும், அமெரிக்கா மீதான மதிப்பாலும் சுமார் 150 நாடுகள் அவருக்கு தபால்தலைகள் வெளியிட்டன. ஆனால் காந்தியின் நூற்றாண்டுக்கு பின்பு இந்த நிலை மாறியது. அவர் கென்னடியையும் அவரது 150 ஆவது பிறந்த நாளின் போதும் (2019 இல்) 140 க்கும் மேற்பட்ட நாடுகள் தபால் தலை வெளியிட்டு கௌரவித்துள்ளன. இத்தகைய பெருமை உலகின் வேறு எந்த தலைவருக்கும் கிடைத்ததில்லை.
அவர் அமரராகி 70 ஆண்டுகள் கடந்த பின்பும், அவருக்கான மதிப்பை வெளிப்படுத்துவதில் உலக நாடுகள் போட்டி போடுகின்றன என்றால் நமது தேசத்திற்கு எவ்வளவு பெரிய பெருமை. காந்தி, கென்னடிக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து இளவரசர், சார்லஸின் மனைவி டயானா, ராணி எலிசபெத் ஆகியோருக்கு தபால் தலைகள் அதிகளவில் வெளியிடப்பட்டுள்ளன.
காந்தியின் 150 ஆவது பிறந்த நாளுக்கு வெளியிடப்பட்ட தபால் தலைகளை சேகரித்து மூன்று ஆல்பங்களை வைத்திருக்கிறார் பொள்ளாச்சியிலுள்ள.எஸ். ஊமத்துரை பழனிச்சாமி. இவரது தந்தை காலத்திலிருந்து விவசாயத்திற்கான விதைகள், உரங்கள் விற்பனையாளராக இருக்கிறார். 1960 முதல் தபால் தலை சேகரிப்பில், குறிப்பாக மகாத்மா காந்தி மீது கொண்ட மதிப்பினால் சேகரித்தவை மட்டும் இரண்டு பீரோ நிறைய உள்ளன. இவரது சேகரிப்பின் பொருள் மதிப்பை லட்சங்களிலோ, கோடிகளிலோ அடக்கிவிட முடியாது.
தபால்தலை சேகரிப்பாளர்கள் உலகம் என்று ஒன்று இருக்கிறது. அதனையும் தாண்டி அபூர்வ தபால் தலைகளை பெரும் தொகை செலவிட்டு சேகரித்திருக்கிறார். அந்த வகையில் காந்தி பிரதானம், அவருக்கு அடுத்து ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி என்று தேசத்தலைவர்கள் அனைவரது தபால் தலைகளும் அவரிடம் உள்ளன. அதில் அவரது தேசப்பற்று புலப்படுகிறது, தேசத்தின் வரலாறும் உள்ளடங்கியது.
தனது சேகரிப்புகள் பற்றி ஊமத்துரை பழனிச்சாமி குறிப்பிடுவது, "எனது சேகரிப்பானது பொழுதுபோக்கு என்பதை விட, தேசத்திற்கு பெருமை சேர்க்கும் கடமையாக கருதுகிறேன்' என்கிறார்.
"அது மட்டுமின்றி உலகப் புகழ்பெற்ற "டைம்' இதழ் சுதந்திரத்திற்கு முன்பு ஒருமுறை, சுதந்திரத்திற்கு பின்பு இரண்டு முறை என்று மூன்று முறை தேசப்பிதாவுக்கு கௌரவம் தரும் வகையில் தனது பத்திரிகையில் அவரது படத்தை அட்டையில் வெளியிட்டுள்ளது. அந்த இதழ்களையும் சேகரித்துள்ளேன். காந்தி உருவம் பொறித்த நாணயங்கள் என்னிடம் உள்ளன" என்றவர், காந்திக்கு தபால் தலை வெளியீடு எப்போது தொடங்கியது என்ற விவரங்களையும் தருகிறார்.
"காந்தி அமரரான பின் 1948 இல் இந்திய அரசு 1 1/2 அணா ,3 1/2 அணா, 12 அணா மற்றும் 10 ரூபாய் மதிப்பில் காந்தி உருவம் பொறித்த தபால் தலைகள் வெளியிட்டது. இதில் 10 ரூபாய் மதிப்பு தபால் தலையை அதிக விலை கொடுத்து பெற வேண்டியதாயிற்று. அந்த தபால் தலைகள் அயல் நாட்டில் அச்சிடப்பட்டவை. இந்தியாவில் மட்டும் நூறு முறைக்கு மேல் காந்திக்கு தபால்தலைகள் வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
"காந்தி தபால் தலை வெளியீட்டின் போது அதை வரைந்தவர்கள் கையொப்பமிட்டவை சேகரிக்கப்படுவது ஒரு வகை. முதல் நாள் உரை (ஃபர்ஸ்ட் டே கவர்) எனப்படும் தபால்தலை ஒட்டிய தலைவர் பிறந்த ஊரின் முத்திரையிட்டவை, விதம் விதமான தபால் தலையிலுள்ள காந்தி வரலாற்றிலுள்ளவிவர அட்டை (ஃபேல்டர்), கேன்சலேஷன் ஸ்டாம்ப் (காந்தி பிறந்த இடத்தின் தபால் முத்திரையுள்ளது), மேக்சிம் கார்டு என்று தபால் தலைகள் அச்சிட்டவை மேக்சிமம் கார்ட். கலெக்டர்ஸ் ஸ்டாம்ப்ஸ், மினியேசர் என்று தபால் தலை சேகரிப்பு வெளியீடு, என்று எத்தனையோ வகை உள்ளன. தபால் தலையுடன் முதல் நாள் உரை என்பது இதுவரை நூறு நாடுகளுக்கு மேல் நூறு முறைக்கு மேலும் வெளியிட்டு வெளிவந்துள்ளன.
காந்தியைப் போற்றுவதில் இந்தியாவுக்கு சளைக்காதவை அண்மையில் சுதந்திரம் பெற்ற ஏழை நாடுகள், குறிப்பாக ஆப்ரிக்க நாடுகள். காந்தியின் அஹிம்சா வழியைப் பின்பற்றித் தானே அங்கு நெல்சன் மண்டேலா உருவானார். அவர் இந்தியா வருகை தந்த போது விமானத்தை விட்டு இறங்கி தரையில் கால் பதித்ததும், "காந்தி பிறந்த மண்' என்று தரையைத் தொட்டு வணங்கினார், அவரைப் போல் தான் மார்ட்டின் லூதர் கிங் என்ற கருப்பின மக்களுக்காக போராடிய தலைவர். இங்கே தெற்காசியாவில் தலாய் லாமா என்று காந்தியின் அஹிம்சா வழியைப் பின்பற்றி உயர்ந்த தலைவர்கள் இவர்கள். அந்த வகையில் காந்தியின் அஹிம்சை வழி உலகுக்கே வழிகாட்டிய ஒரு பண்பாகும்.
காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் அம்மையாருக்கும் தபால்தலைகள் தனியாகவும், கணவருடன் சேர்த்தும் வெளியிடப்பட்டுள்ளன. காந்தியின் தண்டியாத்திரை, உப்பு சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம் என்பதையெல்லாம் நினைவு கூறும் வகையில் தபால் தலைகள் வெளிவந்துள்ளன" என்றெல்லாம் கூறும் ஊமத்துரை பழனிச்சாமி, தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கத்தை சந்தித்து தனது நான்கு ஆல்பங்களை (காந்தி சேகரிப்பு) காண்பித்து பாராட்டு கடிதம் பெற்றிருக்கிறார். இவரது சேகரிப்புகளைப் பார்த்து மகாலிங்கம் வியந்து போனாராம்.
பொள்ளாச்சியில் ஊமத்துரை பழனிச்சாமி போன்று ரூபாய், நாணயம் சேகரிப்பாளர் ஒருவர் முரளி. அவர் காந்தி உருவம் பொறித்த நாணயங்களை 20 பைசா, 50 பைசா, 1 ரூபாய் நூற்றாண்டை யொட்டி 1969 இல், வெளிவந்த 10 ரூபாய் என்று நாணயங்கள் சேகரித்திருக்கிறார்.
நாணய சேகரிப்பாளர்களுக்காக வெளிவந்த 5,10,100 ரூபாய் நாணயங்களை அரசின் அதிக விற்பனை விலையில் வாங்கியிருக்கிறார். இவர் தவறாக அச்சிடப்பட்ட ரிபேலஸ்பென்ட் பாங்க் நோட்ஸ் சுமார் 25,500 நோட்டுகள் சேகரித்து "கின்னஸ்' சாதனையில் இடம் பிடித்திருக்கிறார்.
இதில் சில விஷயங்களைக் குறிப்பிட்ட எம். எல்.ராஜேஷ் "காந்தி உலக மையம்' என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார் 2010 ஆம் ஆண்டு தனது 29 ஆவது வயதில் தொடங்கி, காந்தி பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரித்துள்ளார், அவர் கைப்பட எழுதிய கடிதங்கள் உட்பட, ஆக இவரிடமும் காந்தி பற்றிய வரலாறு உண்டு.
"காந்திஜிக்கு தமிழ் மொழி மீதும், தமிழர்கள் மீதும் மிகுந்த பற்றுதல் உண்டு. அவர் தமிழகத்திற்கு 22 முறை வருகை புரிந்துள்ளார். அதில் மதுரைக்கு வந்ததே அதிகம்.
திருக்குறளில், "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்' என்ற குறளைக் குறிப்பிட்டு, அதன் பெருமையைச் சொல்லி எனக்கு இன்னொரு பிறவி என்று ஒன்று இருந்தால் தமிழனாகப் பிறக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார் மகாத்மா காந்தி.
உலக அளவில் தலைவர் ஒருவரின் சுயசரிதை அதிகமான முறையில், அதிக மொழிகளில் வெளிவந்திருக்கிறதென்றால். அது மகாத்மாவின் "சத்திய சோதனை'. இந்தியாவில் குஜராத்தி மொழிக்கு அடுத்து தமிழில் தான் இதற்கு மறுபதிப்புகள் அதிகம் வெளிவந்துள்ளன.
தென்னாப்பிரிக்காவில் காந்தியுடன் அதிகம் தொடர்பில் இருந்தவர்கள் தமிழர்கள் தான். அவர்களோடு தான் அவருக்கு கடித போக்குவரத்து அதிகம் என்று நினைவு கூறுகின்றார் ராஜேஷ்.
இவர்களில் ஊமத்துரை பழனிச்சாமியை 30 ஆண்டுகளுக்கு முன் சென்னை தொலைக்காட்சியில் "அஞ்சல் தலைகளில் அண்ணல் காந்தி' என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியைத் தயாரித்து அது அதிக முறை ஒளிபரப்பப்பட்டு, அந்த ஆண்டின் "சிறந்த நிகழ்ச்சியாக' அன்றைய தொலைக்காட்சி இயக்குநர் ஏ. நடராஜனால் அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.