கோயில் குளங்களில் நீராடுவது உடல் நலம் அளிக்கும் மருத்துவக் குணம் உடையதாகவும், நினைத்த காரியங்கள் கைகூடும் சிறப்பு உடையதாகவும் விளங்குகிறது.
பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவானைக்காவில் நீர் வடிவாக இறைவன் காட்சி தருகிறார் இறைவனை "செழுநீர் திரள்' எனத் திருமுறைகள் போற்றுகின்றன.
பல கோயில்களும் இறைவன் பெயரும் தீர்த்தத்தின் அடிப்படையில் தீர்த்தேசுவரம், தீர்த்தமலை, தீர்த்தேசுவரர், தீர்த்தபாலீஸ்வரர், சர்வ தீர்த்தேசுவரர் என்ற பெயரால் சொல்லப்படுகின்றன.
பொதுவாக, கோயிலுக்கு முன்பாக அல்லது வட கிழக்கு திசையில் தீர்த்தக்குளம் அமைந்திருக்கும். வைணவக் கோயில்களில் திருக்குளத்தை "புஷ்கரணி" என அழைப்பர். குளங்களில் செந்தாமரை மலர், அல்லி மலர் போன்ற மலர்கள் மலர்ந்து இருப்பது கண்களுக்கும், உள்ளத்துக்கும் மகிழ்ச்சி அளிக்க வல்லது.
சீர்காழி அருகேயுள்ள திருவெண்காடு கோயிலில் மூன்று குளங்களில் நீராடி இறைவனை வழிபட்டால் நினைத்தக் காரியங்கள் கைக் கூடும் எனக் கூறப்படுகிறது.
மயிலாடுதுறை அருகேயுள்ள திருமணஞ்சேரி திருத்தலத் தீர்த்தம் "சப்த சாகர தீர்த்தம்' எனப்படுகிறது. ஏழு கடல்களும் மாலைகள் ஆக மாறி இறைவனை வழிபட்டதால் இந்தப் பெயர் ஏற்பட்டதாக புராண வரலாறு கூறுகிறது.
வைத்தீசுவரன் கோயிலில் உள்ள திருக்குளம் "சித்தாமிர்த குளம்' எனச் சிறப்பித்து அழைக்கப்படுகிறது. இறைவி தையல்நாயகியுடன் இறைவன் மருத்துவராக இருந்து மக்களின் உடல் பிணி போக்கும் தலமாக விளங்குகிறது. இறைவனுக்கு அமிர்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்ட பொழுது அமிர்தம் இக்குளத்தில் கலந்ததால் இந்தப் பெயர் பெற்றதாகக் கூறுகின்றனர்.
நன்னிலம் அருகேயுள்ள ஸ்ரீவாஞ்சியம் சிறந்த வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது. இத்தலத் தீர்த்தம் "குப்த கங்கை' எனப்படுகிறது. கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தக் குளத்தில் நீராடினால் பல நன்மைகள் உண்டாகும் எனத் தலபுராணப் பாடல் ஒன்று இதன் சிறப்பை எடுத்துக் கூறுகிறது.
திருநள்ளாறு கோயிலில் உள்ள நளத் தீர்த்தத்தில் திருக்குளத்தில் நீராடி, இறைவனை சனி பகவானை வழிபட்டால் தீமைகள் அகலும் என போற்றப்படுகிறது.
திருவாரூர் அருகில் உள்ள திருப்பள்ளி முக்கூடல் கோயில் முன்பாக உள்ள "முக்கூடல் தீர்த்தம்' திருக்குளத்தில் நீராடினால் 16 மடங்கு தீர்த்தப் பலன் உண்டு எனவும் "ஷோடச சேது' எனவும் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
இதேபோல, காஞ்சி கச்சபேஸ்வரர், திருவேடகம் போன்ற பல கோயில் குளங்களில் நீராடுவது நலம் அளிப்பதாக கூறப்படுகிறது.
புனித நீராக தீர்த்தக் கிணறுகள் குளங்கள் மட்டுமல்லாமல், பல கோயில்களில் உள்ள தீர்த்தக் கிணறுகளில் நீராடுவதும் புனிதமாகக் கருதப்படுகிறது. ராமேசுவரம் கோயிலில் உள்ள தீர்த்தக் கிணறுகள், திருக்கடவூர் மயானம் கோயிலில் உள்ள அசுபதி தீர்த்தம், விரிஞ்சிபுரம் கோயில் தீர்த்தம், திருவிடைமருதூர், கங்கைகொண்டசோழபுரம் போன்ற கோயில்களில் தீர்த்தக்கிணறுகள், சிங்கம், யாளி போன்ற கட்டட அமைப்புடன் விளங்குகின்றன.
திருப்பாதிரிப்புலியூரில் கோயிலில் உள்ள சிவத் தீர்த்தம் மாணிக்கவாசகருக்காக இறைவனால் உண்டாக்கப்பட்டது எனத் தல வரலாறு கூறுகிறது.
திருநீலகண்ட நாயனார் இறைவன் அருள் பெற்ற வரலாற்றில் குளம் முக்கிய இடம் பெற்று விளங்குகிறது. அவரும் அவரது மனைவியும் இறைவன் அருள் பெற்று இளமைத் தோற்றம் அடைந்த கோயில் "இளமையாக்கினார் கோயில்' என அழைக்கப்படுகிறது.
வைத்தீஸ்வரன் கோயில் அருகே திருப்புன்கூர் திருத்தலத்தில் உள்ள குளத்தை வெட்டி சீர் செய்ய "திருநாளைப் போவாரான நந்தனார்' விரும்பினார். அவருக்குத் துணையாக இருக்க இறைவன் விநாயகரை அனுப்பினார். இந்தத் தலத்திலுள்ள விநாயகர் பெருமான் "குளம் வெட்டிய பிள்ளையார்' என அழைக்கப்பட்டு வணங்குவதைக் காணலாம்.
திருநாவுக்கரசர் பெருமான் திருக்கயிலையைக் காண விரும்பி திருவையாறு திருத்தலத்தில் உள்ள குளத்தில் மூழ்கி எழுந்து கயிலை மலையில் உமையுடன் சிவபெருமான் அமர்ந்திருக்கும் கோலத்தைக் கண்டு வணங்கிய அற்புத நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆண்டுதோறும் "கயிலைக்காட்சி' என்னும் வைபவம் "அப்பர் குளம்' என அழைக்கப்படும் குளக்கரையில் திருவையாற்றில் நடைபெற்று வருகிறது.
திருத்தலையூர் என்னும் தளத்தில் குளத்தில் கழுத்தளவு நீரில் நின்று ஸ்ரீ ருத்ரத்தினை ஓதிய உருத்திர பசுபதி நாயனார் இறையருள் பெற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவாரூர் திருத்தலத்தில் உள்ள கமலாலயம் என்ற திருக்குளம் மிகச் சிறப்புடையது. பிறவியிலேயே கண் பார்வையற்ற தண்டியடிகள், அக்குளத்தைத் தூர் எடுத்து தூய்மை செய்து இறையருளைப் பெற்றார். இதேபோன்று நமிநந்தி அடிகள் இத்தலத்தில் குளத்து நீரைக் கொண்டு விளக்கேற்றி சிவத்தொண்டு செய்து இறையருள் பெற்றார் எனப் புகழ்ந்து பேசப்படுகிறது.
விருத்தகாசி, திருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாச்சலம் திருத்தலத்தில் சுந்தரர் பெருமான் இறைவனை வேண்டிப் பெற்றார். அதனை அங்கே மணிமுத்தாற்றில் இட்டு திருவாரூரில் உள்ள கமலாலய குளத்தில் எடுத்துக்கொண்டார் என்று சுந்தரர் வரலாறு குறிப்பிடுகிறது.
காஞ்சிபுரம் அருகே உள்ள பனங்காட்டூர் கோயிலில் தீர்த்தக்குளம் "சடா கங்கை' எனப்படுகிறது. அகத்தியர் வழிபட்ட போது இறைவன் சடையிலிருந்து கங்கை நீர் தீர்த்தமாக வெளிப்பட்டதாக தல வரலாறு குறிப்பிடுகிறது. கங்காதேவிக்கென சிறு ஆலயம் குளக்கரையில் அமைந்துள்ளது.
தீர்த்தக் குளங்கள் சூல தீர்த்தம், சக்கர தீர்த்தம், பாற்குளம், லட்சுமி தீர்த்தம், மல்லிகை தீர்த்தம், நந்தி தீர்த்தம், கூபாக்கினி தீர்த்தம், ஆமை தீர்த்தம், சோம தீர்த்தம், அக்கினி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
திருக்கழுக்குன்றம் திருத்தலம் திருக்குளம் "சங்கு தீர்த்தம்' என அழைக்கப்படுகிறது. இந்தக் குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கின்றது.
தல வரலாற்றில் குளம்: உறையூர் கோயிலில் உள்ள குளம் "சிவ தீர்த்தம்' எனப்படுகிறது. இதேபோன்று ஆடுதுறை அருகே உள்ள திருமாந்துரை அட்சயநாதர் கோயில் கோபுரவாயிலில் தலவரலாறு சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. விநாயகர், கிளி ரூபமாக அம்மன, சூரியன், முனிவர்கள் வழிபடும் காட்சியும் மற்றும் இத்தல தீர்த்தமாக "அட்சய தீர்த்தக் குளமும்' சிற்பத்தில் இடம்பெற்றுள்ளது.
திருச்சிக்கு அருகில் உள்ள திருவெள்ளரை கோயிலின் பின்பு உள்ள சக்கர தீர்த்தம் சுவஸ்திக வடிவமைப்புடன் காட்சி தருகிறது. காஞ்சிபுரம் அருகே உள்ள ஐயங்கார்குளம் ஆஞ்சநேயர் கோயில் குளம் அருகே உள்ள கிணறு நடவாவி கிணறு என அழைக்கப்படுகிறது. திருமயம் பெருமாள் கோயிலில் உள்ள சத்திய புஷ்கரணி என்ற குளம், எண்கோண வடிவில் படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது.
தெப்பத் திருவிழாக்கள்
கும்பகோணத்தில் அமைந்துள்ள மகாமகக் குளம் தனிச்சிறப்புடையது. மகாமகக் குளத்தில் கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு என்ற ஒன்பது நதிகள் சங்கமம் ஆகின்றன என்று அப்பர் பெருமான் போற்றுகின்றார்.
மகாமகக் குளம் அருகே உள்ள காசி விசுவநாதர் ஆலயத்தில் ஒன்பது நதி தேவதைகளையும் வழிபடுகின்றனர். மகாமகக் குளத்தில் உள்ள 20 தீர்த்தக் கிணறுகள் உள்ளன. குளக்கரையில் 16 கோயில்கள் உள்ளன. 16 வகையான தானங்களை அளிக்கக் கூடிய வகையில் அழகிய துலாபாரச் சிற்பங்கள் உள்ளன.
(தொல்லியல் துறை -பணி நிறைவு)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.