மழைக்கால தொற்று: தேவை முன்னெச்சரிக்கை!
""மழைக்காலத்தில் பல்வேறு நோய்கள் ஏற்படும் என்பதால் உஷாராக இருக்க வேண்டும்; முக்கியமாக, காது சார்ந்த நீர்த் தொற்றுகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது''
""மழைக்காலத்தில் பல்வேறு நோய்கள் ஏற்படும் என்பதால் உஷாராக இருக்க வேண்டும்; முக்கியமாக, காது சார்ந்த நீர்த் தொற்றுகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது'' என்கிறார் சென்னை அப்போலோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையின் காது-மூக்கு-தொண்டை மருத்துவ நிபுணர் டாக்டர் வி.சுந்தரி.
மழைக்காலம் நெருங்கிவரும் நிலையில், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நடவடிக்கைகளை அவர் சொல்கிறார்:
""பருவ மழையுடன் சேர்ந்து பல தொற்றுகள் வருகின்றன. திடீர் ஈரப்பத அதிகரிப்பால் பாக்டீரியா, பூஞ்சை வாழக்கூடிய நிலை அதிகரித்து, அவை பெருகுவதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் உள் காது, நடுத்தர காது, வெளிப்புற காது உட்பட காதின் பல்வேறு பகுதிகளில் பாக்டீரியா தொற்று ஏற்படுகிறது. மழைக்கால காது நோய்த்தொற்றுகளின்போது தென்படும் சில பொதுவான அறிகுறிகள் காது அரிப்பு, காது அடைப்பு, காதில் திரவ வெளியேற்றம், காது வலி.
காரணிகள்
காதில் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களில் ஒன்று, தொண்டையால் ஏற்படும் தொற்றாகும். தொண்டையில் தொற்றை உண்டாக்கும் பாக்டீரியா காதுக்கும் வேகமாகப் பரவும். யூஸ்டாசியன் குழாய் மூலம் பாக்டீரியா தொற்றுநோயை ஏற்படுத்துகிறது. இந்த குழாய் தொண்டையிலிருந்து காதை இணைக்கிறது.
காதில் நோய்த் தொற்றுகள் வெளிப்புறக் காரணங்களாலும் ஏற்படலாம். ஈரப்பதம் அதிகரிக்கும்போது ஆடைகள், சுற்றுப்புறங்களில் பூஞ்சை வளரும். அது விரல்களில் இருந்து காதுக்குப் பரவுகிறது. காதுகளில் காது மெழுகு அல்லது இறந்த தோல் இருக்கும்போது பூஞ்சை, பாக்டீரியா வளர்ச்சி அதிகரிக்கிறது.
பாக்டீரிய காது நோய்த்தொற்று
காது நோய்த் தொற்றுகளில் பாக்டீரிய தொற்றுகளும் ஒன்று. குறிப்பாக, மழைக்காலங்களில் இது அதிகமாகக் காணப்படும். முக்கியமாக காது கால்வாய் (பின்னா), நடுக் காது ஆகியவற்றை தொற்று பாதிக்கிறது. பெரும்பாலும் காது வலி, காதில் அசெளகரியம், அடைப்பு உணர்வு, சீழ் அல்லது காதில் இருந்து அசாதாரண திரவ வெளியேற்றம், தற்காலிக காது கேளாமை போன்றவை பாக்டீரிய காது நோய்த்தொற்றுகளுடன் தொடர்புடைய அறிகுறிகள்.
பூஞ்சை காதுத் தொற்று
ஒருவரது காதில் தண்ணீர் சென்றால், அவர் ஆரோக்கியமாக இருந்தாலும்கூட, அவருக்கு பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கு சாத்தியம் இருக்கிறது. காதுகளுக்குள் இருக்கும் ஈரப்பதம் பூஞ்சை இனப்பெருக்கம் செய்ய உதவுகிறது. காதுகளில் வீக்கம், அரிப்பு, வெளிப்புற காது சிவந்துபோதல், கடுமையான தலைவலி, காதில் வலி, வறட்டுத்தன்மை அல்லது காதில் தோல் உரிதல் ஆகியவை பூஞ்சை காது நோய்த்தொற்றின் அறிகுறிகளாக இருக்கலாம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
மழைக்காலத்தில் காது நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க சில பயனுள்ள வழிகள்:
குளித்த பிறகு, சுத்தமான துணியால் துடைப்பதன் மூலம் சரியான காது சுகாதாரத்தை பராமரித்தல். பாக்டீரியா தொற்று ஏற்படாமல் இருக்க இயர்போன்களை சுத்தமாக வைத்திருத்தல். காது மெழுகு சுத்தம் செய்ய காதுக்குள் கூர்மையான பொருட்களை செலுத்துவதை தவிர்த்தல். தீவிர வலி அல்லது அசெளகரியத்தை அனுபவிக்கும்போது, தாமதமின்றி மருத்துவ நிபுணர்களை அணுகுதல்.
முடிவாக, காது சுகாதாரம் என்பது வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாகும். அது பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. எனவே, ஒரு மருத்துவ நிபுணரை அணுகி அடிப்படை முன்னெச்சரிக்கை உதவிக்குறிப்புகளைப் பெற்றுக்கொள்வது முக்கியம்'' என்றார்.