தமிழ்நாடு அரசின் முன்னாள் முதல்வர் காமராஜர், மறைந்த முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோர் மக்கள் முன்னேற்றப் பணிகளுக்காக வாழ்ந்தனர். அதனால்தான் அவர்கள் இன்றும் மக்கள் மனங்களில் நிறைந்திருக்கின்றனர்.
இவர்கள் மூவரைப் பற்றியும் சுவாரசியமான ஒவ்வொரு சம்பவங்கள்:
ஜி.ஓ. என்றால் என்ன?
ஒருசமயம் அரசு சார்பில் புதிய திட்டத்தின் உத்தரவைப் போடச் சொல்லி, முதல்வராக இருந்த காமராஜர் துறை அதிகாரியிடம் கூறினார். அதற்கு அந்த அதிகாரி, "" ஜி.ஓ. இடம் தராது'' என்றார். உடனே காமராஜர், ""ஜி.ஓ. என்றால் என்ன?'' என்று கேட்டார்.
இதற்கு அதிகாரி புன்னகையுடன், ""கவர்மென்ட் ஆர்டர் என்பதுதான் ஐயா'' என்றார்.
அதற்கும் காமராஜர், ""அப்படியா? சரி. கவர்மென்ட் ஆர்டர் என்றால் என்ன?'' என்று மீண்டும் ஒரு கேள்வியைக் கேட்டதும், அந்த அதிகாரி இதற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் தடுமாறினார்.
அவரது நிலையைப் புரிந்த காமராஜர், ""அதாவது நீங்கள் எழுதிக் கொடுப்பதில் நான் கையெழுத்துப் போட்டால் அது கவர்மென்ட் ஆர்டர்தானே? நான் சொன்ன மாதிரி மாற்றி எழுதிக் கொண்டு வாருங்கள். நான் கையெழுத்துப் போடுகிறேன்.'' என்றார் காமராஜர்.
நினைத்தேன் சிரித்தேன்
அண்ணா முதல்வராக இருந்தபோது, ஒரு நாள் சாதிக்பாட்சாவுடன் திருச்சிக்கு காரில் சென்றார். வழியில் பொதுப்பணித் துறையின் வேலை நடந்துகொண்டிருந்தது. அதனால் கார் நிறுத்தப்பட்டது. வெகு நேரம் ஆயிற்று. கார் செல்ல அனுமதி கிடைக்கவில்லை. இதனால் சாதிக்பாட்சாவுக்கு தலைக்கேறியது கோபம். பொறியாளர்களை அழைத்தார். கண்டித்தார்.
ஆனால், அண்ணாவோ சிரித்தவாறு அதைப் பார்த்தார்.
சாதிக்பாட்சா காரணம் கேட்டதற்கு, "" அந்தப் பொறியாளர்கள் நினைத்தால் அடுத்த தேர்தலில் நின்று அமைச்சராகலாம். ஆனால் நம்மால் இனிமேல் படித்து பொறியாளர்கள் ஆக முடியுமா? நம் பதவிக்கு உள்ள மதிப்பை நினைத்தேன். சிரிப்பு வந்தது!'' என்றார் அண்ணா.
வள்ளல் தன்மை
அரசியலிலும், திரைத்துறையிலும் எம்ஜிஆரை யாராலும் அசைக்க முடியவில்லை. இதற்கான காரணம் குறித்து "எம்ஜிஆர் சிவாஜி என் இரு கண்கள்' என்ற நூலில் ஆரூர்தாஸ் கூறியிருப்பது:
""அந்திம காலம் வரையில் எம்ஜிஆரை யாராலும் அசைக்க முடியவில்லை. அதற்கு அடிப்படைக் காரணம் நான் அறிந்த வரையில் மூன்று.
ஒன்று கல்விக்கெல்லாம் அப்பாற்பட்டு இயற்கையிலேயே எம்ஜிஆருக்கு இருந்த "மனோதத்துவ நுண்ணறிவு' இரண்டாவது ராஜதந்திரம்! சரித்திரம் படிக்காவிட்டாலும் சாணக்கியத்தனத்தை அவர் அறிந்தார்..
மூன்றாவது செல்வத்தின் மதிப்பை குறித்துச் சிறிதும் கவலைப்படாமல், அதைச் சேர்த்து வைக்கும் தன்னல மனப்பான்மை இன்றி அள்ளிக் கொடுக்கும் வள்ளல் தன்மை.
இவையே எம்ஜிஆர் என்ற மூன்று எழுத்துக்காரரை உயர்ந்த, உன்னத நிலையை அடையச் செய்தது'' என்று ஆருர்தாஸ் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.