பட்டுப் புடவை 
ஞாயிறு கொண்டாட்டம்

தமிழ் எழுத்துகளால் பட்டுப் புடவை

பட்டு என்றவுடன் நினைவுக்கு வருவது காஞ்சிபுரம்தான். அத்தகைய காஞ்சிபுரத்தில் தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட அண்ணா பிறந்த மண்ணில் நெசவுத் தொழில் செய்து வருகிறார் எஸ்.குமாரவேல்.

சி.வ.சு.ஜெகஜோதி

பட்டு என்றவுடன் நினைவுக்கு வருவது காஞ்சிபுரம்தான். அத்தகைய காஞ்சிபுரத்தில் தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட அண்ணா பிறந்த மண்ணில் நெசவுத் தொழில் செய்து வருகிறார் எஸ்.குமாரவேல்.

இவர் 'தமிழின் வளர்ச்சிக்காக தம்மால் ஏதாவது செய்ய முடியுமா?' என்று யோசித்ததன் விளைவே தமிழ் எழுத்துகளால் வடிவமைக்கப்பட்ட பட்டுப் புடவை. இவர் தயாரித்த பட்டுப்புடவைக்கு 2024 செப். 25-இல் தமிழ்நாடு அரசின் சிறந்த வடிவமைப்பாளருக்கான முதல் பரிசுக்குரிய விருது வழங்கப்பட்டிருக்கிறது.

அவரிடம் பேசியபோது:

'தெய்வங்கள், இயற்கைக் காட்சிகள், அரசியல் தலைவர்கள், மணமக்கள் ஆகியோரது புகைப்படங்களைப் பட்டுச் சேலைகளில் பல ஆண்டுகளாக நெய்து வருகிறேன்.

இலக்கிய,இலக்கணச் சிறப்புகள் உடைய தமிழுக்கு நமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

எண்ணற்ற புலவர்களும்,மன்னர்களும் சங்கம் வைத்து நடத்தப்பட்ட நம் தமிழில் உள்ள 247 எழுத்துகளையும் பட்டுப்புடவையில் இருப்பது போல வடிவமைக்க முடிவு செய்தேன்.

காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவுச் சங்க உறுப்பினரான எனக்கு தமிழ்ப் புடவை நெய்வதற்கான அனைத்து மூலப்பொருள்களையும் காஞ்சிபுரம் பட்டுப் பூங்காவின் திட்ட இயக்குநர் பி.ராமநாதன், நெசவாளர் சேவை மைய உதவி இயக்குநர் சசிகலா, கைத்தறித் துறை அதிகாரி செந்தில் ஆகியோர் அளித்தனர்.

தமிழில் உயிர் எழுத்துகள் 12,மெய் எழுத்துகள் 18, ஆயுத எழுத்து ஒன்று, உயிர் மெய் எழுத்துகள் 216 சேர்த்து மொத்தம் 247 எழுத்துகள் உள்ளன. இவற்றை சேலையின் உடல், சேலையின் பாடர்,சேலையின் முந்தானையில் வடிவமைத்திருக்கிறோம்.

சேலையின் உடலமைப்பு-ஒரு சேலையின் உடல்தான். அந்தச் சேலையின் உயிராகவும் கருதப்படுகிறது. பார்வையாளர்களைக் கவருவதும் அதுதான். உடலமைப்பு நன்றாக இருந்தால்தான் சேலையும் நன்றாக இருக்கும்.

எனவே உயிர் எழுத்துகளான 12-ஐயும் சேலையின் உடல் பாகத்தில் 12 வண்ணங்களில்,12 வகைகளில்,12 விதமான தொழில்நுட்பத்தில் வடிவமைத்தேன்.சேலையின் உடலில் பேக் டிசைனாக ஆயுத எழுத்து இருக்குமாறு நெய்திருக்கிறோம். அதாவது சேலைக்குள் சேலை இருப்பதுபோல தெரியும்.சேலையின் நிறத்தை அரக்கு தக்காளி கலரில் தயாரித்தோம்.

சேலையின் பாடர்-சேலையின் கரையோரங்களில் தேசியப்பறவையான மயிலும், மயிலுக்கு மேற்புறத்தில் தமிழ்நாடு அரசின் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலின் ராஜகோபுரமும் வடிவமைத்து அதன் உச்சியில் தமிழின் மெய் எழுத்துகளான 18 எழுத்துகளையும் நெய்தோம்.

'தமிழ் வான் போல எப்போதும் உயர்ந்து நிற்க வேண்டும்' என்ற எண்ணத்தில் கோபுரத்தின் உச்சியில் மெய் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது.

சேலையின் முந்தானை-தேசியப்பறவையான மயிலையே முந்தானையிலும் வைத்து மயில் தோகை விரித்து அழகாக ஆடுவதைப் போலவே தமிழின் உயிர்மெய் எழுத்துகள் 216- ஐயும் மயில் தோகைக்குள் இருப்பது போல பல வண்ணங்களில் வடிவமைத்திருக்கிறோம்.

திருப்பாவை பாடல்கள் முப்பது பாசுரங்களையும் ஓரு புடவையிலும், லலிதா சஹஸ்ரநாமத்தின் ஆயிரம் மந்திரங்களையும் ஒரு புடவையிலும் ஏற்கெனவே வடிவமைத்திருக்கிறோம்.

20 அடி அகலம்,35 அடி உயரத்தில் பெருமாளின் முழு உருவத்தையும் பல வண்ணத்தில் திரைச்சீலையாக பட்டுச்சேலையில் வடிவமைத்திருக்கிறோம்.

தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பரதநாட்டியம் ஆகியவற்றை உள்ளடக்கி ஒரு பட்டுப்புடவையும் தயாரித்திருக்கிறோம்.

ஆனால் தமிழ் எழுத்துகளை வடிவமைத்து நெய்த தமிழ்ப்புடவைக்கே சிறந்த வடிவமைப்பாளர் என்ற முதல் பரிசுக்கான விருதும், ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசும், பாராட்டுச்சான்றிதழும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பெற்றேன்.

தமிழுக்காக பல புலவர்களும், அரசர்களும்,ஆட்சியாளர்களும் பல பங்களிப்புகளை செய்திருக்கிற நிலையில் ஒரு நெசவாளியாக தமிழின் வளர்ச்சிக்காக எனது சின்னஞ்சிறு பங்களிப்பு இதுவாகும். எதைச் செய்தாலும் வித்தியாசமாக செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்' என்கிறார் எஸ்.குமாரவேல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT