ஞாயிறு கொண்டாட்டம்

அன்று கூவத்துக்குப் போட்டி... இன்று மகாநதி...

குடியாத்தம் நகருக்கு வகிடெடுத்தாற்போல சென்றுகொண்டிருப்பது கௌண்டன்ய மகாநதி.

தினமணி செய்திச் சேவை

கே.நடராஜன்

குடியாத்தம் நகருக்கு வகிடெடுத்தாற்போல சென்றுகொண்டிருப்பது கௌண்டன்ய மகாநதி. 'ஆக்கிரமிப்புகள், குறுங்காடுகள் போன்ற முள்புதர்கள், விஷப்பூச்சிகளின் நடமாட்டம், சமூக விரோதிகளின் கூடாரம், எந்த நேரமும் கழிவுநீர் ஓடியபடி திகழ்ந்திருந்த இந்த 'மினி கூவம்', இன்று நகரமே வியக்கும் அளவுக்கு புதுப்பொலிவுடன் மாறியிருக்கிறது.

'இது எப்படி சாத்தியமாயிற்று' என்று இந்த மாற்றத்தை முதலில் தொடங்கிய குடியாத்தம் கிரீன் டவுன் (ஜி.ஜி.டி.) அமைப்பின் தலைவர் வி.ரித்தீஷிடம் பேசியபோது:

'கௌண்டன்ய மகாநதியானது ஆந்திர மாநிலத்தில் தொடங்கி, தமிழ்நாடு எல்லையான மோர்தானாவில் நுழைந்து குடியாத்தம் வழியாகச் சென்று, ஐதர்புரம் அருகே பாலாற்றில் கலக்கிறது. இந்த நதியின் குறுக்கே தமிழக எல்லையில் கட்டப்பட்டுள்ளதுதான் மோர்தானா அணை.

குடியாத்தம் நகரை இரண்டாகப் பிரிக்கும் வகையில் நடுவில் செல்லும் மகாநதியின் குறுக்கே கெங்கையம்மன் கோயில் அருகே தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. மழைக் காலங்களில் வெள்ளம் வந்தால், ஒரு கரையிலிருந்து மறுகரைக்குச் செல்ல முடியாத நிலை இருந்தது. 1954 இல் முதல்வரான காமராஜர் குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று, வாக்குறுதி அளித்தபடி மகாநதியின் குறுக்கே மேம்பாலம் ஒன்றை கட்டித் தந்தார்.

ஒரு காலத்தில் மகாநதியில் ஆண்டு முழுக்க வெள்ளம் இருந்தது. வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் 1950களில் தான் படித்தபோது, புத்தகங்களை தலையில் சுமந்து, ஆற்றுநீரைக் கடந்தோ, பரிசலில் சென்றோ நகராட்சிப் பள்ளியில் படித்ததாகச் சொல்வார். அப்படி தண்ணீர் ஓடிய மகாநதியில், 1990க்குப் பின்னர், தண்ணீர் வரத்து குறைந்தது. மேலும், ஆக்கிரமிப்புகள் பெருகின. நகரின் கழிவுநீர், முள்புதர்கள், சமூக விரோதிகள் பெருக்கம் என்று சென்னையின் கூவம் நதியைப் போன்று, கௌண்டன்ய மகாநதி மாறிவிட்டது.

இந்த நிலையை மாற்றி, மகாநதியை சீரமைக்க நகர நலன் விரும்பிகள் 20 பேருடன் இணைந்து தொடங்கப்பட்ட ஜி.ஜி.டி. 2017இல் முயன்றது. தன்னார்வலர்கள் துணையோடு, சுத்தம் செய்யப்பட்டது. போடிபேட்டை முதல் சுண்ணாம்புப்பேட்டை வரையில் நகர எல்லைக்குள்பட்ட மகாநதியில் இருந்த டன்கணக்கில் குப்பைகள் அகற்றப்பட்டன. ஓரளவு சுத்தமானது. பின்னர், கழிவுநீர் செல்ல தனிப்பாதை, மகாநதியில் மரக்கன்றுகள் போன்றவற்றை நட திட்டமிட்டிருந்தோம். ஆனால், அது முடியவில்லை' என்கிறார் ரித்தீஷ்.

'இன்று மாற்றத்துக்கு மேற்கொண்ட முயற்சிகள்' குறித்து, நகர்மன்றத் தலைவர் எஸ்.சௌந்தரராஜனிடம் பேசியபோது:

'நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், நீர்வழிப் பாதையை ஆக்கிரமித்திருந்த சுமார் 1,500 வீடுகள் இரு ஆண்டுகளுக்கு முன்னர் இடித்து அகற்றப்பட்டன. பின்னர் தரைப்பாலத்தை அகற்றிவிட்டு அந்த இடத்தில் ரூ.14 கோடியில் மேம்பாலத்தை தமிழ்நாடு அரசு கட்டித் தந்தது.

அதேபோல், வலது கரையில் ரூ.34 கோடியில் ஒரு புறவழிச் சாலையும், இடது கரையில் ரூ.2.19 கோடியில் நடைபாதையும், மேல்ஆலத்தூர் சாலை சுண்ணாம்புபேட்டை இடையே மகாநதியின் குறுக்கே ரூ.8.41 கோடியில் மற்றொரு சிறு உயர்மட்ட பாலத்தையும் அரசு கட்டித் தந்தது. புதிய பாலங்கள், புறவழிச்சாலை, நடைபாதை ஆகிய இடங்களில் பிரகாசமாக எரியும் மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக நகர எல்லைக்குள் சுமார் இரண்டரை கி.மீ நீளம் செல்லும் கௌண்டன்யா மகாநதியில் ஆங்காங்கே புதர்கள் மண்டி, குறுங்காடுகள் போல் காட்சியளித்திருந்தது. சாலை, பாலங்கள் திறப்பு விழாவின்போது இவற்றை பார்த்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் மகாநதியை தூய்மைப்படுத்துமாறு எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், அமலு விஜயன், நானும் கோரிக்கை விடுத்தோம்.

இதையடுத்து 10 ராட்சத பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மகாநதியை சீரமைக்கும் பணி தொடங்கி, ஒரு மாதம் நடைபெற்றது. குறுங்காடு போல் புதர்களால் சூழப்பட்டிருந்த கௌண்டன்யா மகாநதி தற்போது சோலைவனமாக காட்சியளிக்கிறது. பொதுமக்கள் காலை, மாலை வேளைகளில் மகாநதியின் இரு கரைகளிலும் அமர்ந்து ரசிக்கின்றனர்.

வலது கரையில் புதிதாக அமைக்கப்பட்ட புறவழிச்சாலை நீட்டிக்கப்பட்டு, கௌண்டன்யா மகாநதியின் குறுக்கே மேலும் ஒரு மேம்பாலம் கட்டப்பட்ட செதுக்கரை அருகே பள்ளிகொண்டா சாலையுடன் இணைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.38 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

நாளுக்குநாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை, அதற்கேற்ற வகையில் கூடி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் மேம்பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததற்குத் தீர்வும் தற்போது கிடைத்துள்ளது.

மாலை நேரத்தில் நகரவாசிகள் பொழுதுபோக்கும் வகையில், மகாநதியின் ஓரத்திலும், நடுவேயும் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள உள்ளோம். மகாநதியின் இரு கரைகளிலும் பனை, அரச, ஆல, புளிய மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்கவும் நகராட்சி நிர்வாகம் சார்பில் முடிவு செய்துள்ளோம்' என்கிறார் எஸ்.சௌந்தரராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ம.க.ஸ்டாலின் மீது கொலை முயற்சி- நயினார் நாகேந்திரன் கண்டனம்

தில்லியில்.. சட்டவிரோதமாக வசித்த 15 வெளிநாட்டினர் வெளியேற்றம்!

கடன் வட்டியைக் குறைத்த கரூர் வைஸ்யா வங்கி!

இயக்குநர் பிறந்த நாள்! ஜனநாயகன் மேக்கிங் விடியோ!

3ஆவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது: சென்னை உயர் நீதிமன்றம்

SCROLL FOR NEXT